பல நல்ல எழுத்தாளர்கள் கூட சில சொற்களைத் தவறாகப் பிரயோகித்து
விடுகிறார்கள். தட்டச்சுப் பொறியில் பிழையைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள
முடியாது. பழக்கம் காரணமாகத் தாம் எழுதுவதில் உள்ள தவறை அறியாமலே அவர்கள் பிழை
விடுகிறார்கள். (அறியாமல் செய்த பிழைக்கு மன்னிப்புண்டு. தாம் எழுதுவதே சரியென
அழிச்சாட்டியமாக எழுதுபவர்களை...?)
தமிழக எழுத்தாளர்கள் பலரும் ரகர,றகரத்தில் தடுமாறுகின்றனர்.கருப்புத்தான்
அவர்களுக்குப் பிடிக்கிறது. கவியரசரே 'கருப்புப்பணம்' என்றுதான் படம் எடுத்தார். அவர்களைப் பொருத்தவரை
தமிழ்த் தாய் சுவற்றில் போய்
முட்டி மோதிக் கொண்டு கண்ணீர் வடிப்பதைக் கண்டும் காணாமல் பரவாயில்லை என உள்ளூர
நினைக்கிறார்களோ தெரியவில்லை.
பொதுவாக எனது கண்ணிற் பட்ட ஒரு சில தவறுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். நான்
ஒன்றும் அறப்படித்த அறிஞனுமில்லை. தமிழ் ஒன்றும்எனக்கு மட்டும் சொந்தமான
முதுசமுமல்ல.. இதில் ஏதும் தவறெனக் கண்டால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுங்கள்.
திருத்திக் கொள்ளலாம்
பிழை சரி
அந்தப்புறம் அந்தப்புரம்
அருவெறுப்பு அருவருப்பு
அறைப்புள்ளி அரைப்புள்ளி
ஆற அமர ஆர அமர
உள்ளூர உள்ளூற
உளமாற உளமார
மனமாற மனமார
கற்பூரம் கர்ப்பூரம்
கர்ப்பு கற்பு
கற்பம் கர்ப்பம்
கற்பிணி கர்ப்பிணி
கறுமை கருமை
கருப்பு கறுப்பு
கறும்புள்ளி கரும்புள்ளி
கருவு கருவு
கடப்பாரை கடப்பாறை
காரித்துப்பு காறித்துப்பு
கரையான்புழு கறையான் புழு
கொப்பரை கொப்பறை
கொரித்தல் கொறித்தல்
சருக்கு சறுக்கு
செறுகு செருகு
சிராம்பு சிறாம்பு
சூரைக்காற்று சூறைக்காற்று
துறு துரு(கறள்)
தூரல் தூறல்
தூர்வாறு தூர்வாரு
நருக்கு நறுக்கு
நாறாசம் நாராசம்
நினைவு கூறல் நினைவு கூர்தல்
பரவாயில்லை பறவாயில்லை
பதினோறு பதினொரு
பாராங்கல் பாறாங்கல்
பிடறி பிடரி
பொருப்பு பொறுப்பு
பொருத்தவரை பொறுத்தவரை
பொருத்துக்கொள் பொறுத்துக்கொள்
பொறுத்தமான பொருத்தமான
மருதோண்டி மறுத்தோன்றி
முரிந்த மரம் முறிந்த மரம்
ரத்தக்களறி ரத்தக்களரி
ராத்தல் றாத்தல்
வரட்சி வறட்சி
ரகர, றகரங்களில் ஏற்படும்
ஒருசில பிழைகளை மேலே தந்துள்ளேன். இதைவிடப் பொருள் வேறுபாடு உணராது தவறாகப்
பிரயோகிக்கப்படும் ( ரகர, றகர வரும்) சொற்கள் பல.
அரை/அறை; இரை/இறை; உரை/உறை; கரை/கறை; குரை/குறை; சிரை/சிறை; தரை/தறை; துரை/துறை; நரை/நறை; நிரை/நிறை; பிரை/பிறை; மரை/மறை; வரை/வறை; விரை/விறை;
அரி/அறி; உரி/உறி; எரி/எறி; கரி/கறி; சொரி/சொறி; தரி/தறி; தெரி/தெறி; பரி/பறி; பொரி/பொறி இரு/இறு; உரு/உறு; ஒரு/ஒறு; கரு/கறு; குரு/குறு; செரு/செறு ;சேரு/சேறு; தேரு/தேறு;மரு/மறு வரு/வறு;
இரப்பு/இறப்பு; இரக்கம்/இறக்கம்; இருத்து/இறுத்து; இருத்தல்/இறுத்தல்; கரந்து/கறந்து ;குரங்கு/குறங்கு; சிரங்கு/சிறங்கு; வருத்து/வறுத்து; மருப்பு/மறுப்பு; பரத்து/பறத்து;பொருத்து/பொறுத்து; பொருப்பு/பொறுப்பு; பொருக்கு/பொறுக்கு;
அரம்/அறம்; திரம்/திறம்; மரம்/மறம்; காரல்/காறல்; குரல்/குறள்; விரல்/விறல்; உரவு/உறவு;முருகு/முறுகு; சார்தல்/சாறுதல்; தேர்தல்/தேறுதல்;
போன்ற சொற்கள் தனித் தனியே வெவ்வேறுபட்ட பொருள்
உணர்த்தும் சொற்களாக உள்ளமையால், உதாரண வாக்கியங்கள் மூலமே விளக்க வேண்டியுள்ளது.
அலுப்புத்தரும் இலக்கண பாடமாக அது விரிவு பட்டுவிடும் என்பதால் அதை இப்போதைக்குத்
தவிர்த்து விடுவோம். லகர,ளகர,ழகர வழுக்களும்
னகர,ணகரப் பிழைகளும் எழுத்தை விடப் பேச்சிலேயே
பெரும்பாலும் இலம்பெறுவதால் அவைபற்றியும் இப்போ விட்டுவிடுவோம்.
ஆயினும் சில ரகர,
றகரச் சொற்கள் தமிழகத்தில் ஒருமாதிரியும் ஈழத்தில் வேறு மாதிரியும் உச்சரிக்கப் படுவதால் அவ்வாறே
சில வேளைகளில் எழுதவும் படுகின்றன. உதாரணமாக-
உருளை/உறுளை; உருண்டை/உறுண்டை; கரணம்/கறணம்;
கரண்டி/கறண்டி; குருடு/குறுடு;
சுருட்டு/சுறுட்டு; சுருள்/சுறுள்; சுரணை/சுறணை; சுரண்டு/சுறண்டு; நருக்கு/நறுக்கு; நொருக்கு/நொறுக்கு; பரட்டை/பறட்டை; முரட்டு/முறட்டு;வரட்டு/வறட்டு; வீராப்பு/வீறாப்பு; போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். (தடித்த எழுத்தில்
தரப் பட்டுள்ளவை ஈழத்து வழக்குகள்.)
இவற்றுள் எவை சரி எவை பிழை என எனக்குத் தெரியாது.
தமிழறிஞர்கள் தாம் முடிபு கூற வேண்டும்.
தவறாக எழுத்தப்படும் மேலும் சில பொதுவான சொற்கள்-
பிழை சரி
அப்பேற்பட்ட அப்பெயர்ப்பட்ட
அவர்கட்கு அவர்களுக்கு
ஆராட்சி ஆராய்ச்சி
ஆராத்தி ஆரத்தி
உட்சாகம் உற்சாகம்
ஒன்றாம் முதலாம்
ஒருவள் ஒருத்தி
கோர்வை கோவை
சிகிட்சை சிகிச்சை
திரு நூறு திருநீறு
தேனீர் தேநீர்
நற்பு நட்பு
நிட்சயம் நிச்சயம்
நின்மதி நிம்மதி
பத்திரிக்கை பத்திரிகை
பாராமுகம் பராமுகம்
பாராபட்சம் பாரபட்சம்
பிரகாரம் பிராகாரம்
முயற்ச்சி முயற்சி
விடையம் விடயம்
வெங்கலம் வெண்கலம்
வென்னீர் வெந்நீர்
பிரகாரம் என்பதற்கு அவ்வாறாக, அவ்விதமாக எனப் பொருள். உதாரணமாக 'அவர் சொன்ன பிரகாரம்
செய்தேன்.' ஆனால் கோயிலைச் சுற்றியுள்ள பிரதேசம் பிராகாரம்
எனப்படும்.
இனி ஒருமை பன்மை தொடர்பாக வரும் சில தவறுகளைப் பார்ப்போம்.
பிழை சரி
அவைகள் அவை
ஆகியோர்கள் ஆகியோர்
சிறுவர்கள் சிறுவர்
தம்பதிகள் தம்பதி
பெற்றோர்கள் பெற்றோர்
பேர்கள் பேர்
கள் விகுதி தேவைப்படாதவிடத்தும் கள் சேர்த்து
எழுதப்படுகிறது. கணவன்+மனைவி இருவர் மட்டுமாயின் தம்பதி;. பலராயின் தம்பதிகள். அவ்வாறே ஒரு தாயும் தந்தையும் ஆயின் பெற்றோர்; பலராயின் பெற்றோர்கள்.
சந்தியில் 'ள்' என்பது 'ட்' என மாறுவதுமுண்டு. இயல்பாக எழுதப் படுவதும் உண்டு-என
இலக்கணம் கூறுகிறது. அதன்படி, ஆள்+கள்= ஆள்கள் /ஆட்கள் ; திங்கள்+கிழமை = திங்கட்கிழமை/ திங்கள்கிழமை; தோள்+பட்டை=தோட்பட்டை/தோள்பட்டை; மக்கள்+தொகை=
மக்கட்தொகை/மக்கள்தொகை-என இவ்வாறாக இரண்டு
மாதிரியும் எழுதலாம் .
வருமொழி முதலில் க்,ச்,த்,ப், இருந்தால் மாற்றமின்றி எழுதுவதே இப்போதைய
வழக்காம். அதன்படி மண்+குடம்=மண்குடம்
எனவும் மண்+பானை = மண்பானை எனவும் எழுதுவதே இப்போதைய வழக்காம்.(மட்குடமும்
மட்பொருட்களும் காலமாற்றத்திற் காணமலே போய்விட்டன போலும்!)
பொன்+நிறம்=பொன்னிறம்/பொன் நிறம் ; முன்+நோக்கி
=முன்னோக்கி/முன் நோக்கி என இருமாதிரியும் எழுதப்படலாமாம்.
மேற்குறித்த இலக்கணச் சூத்திரங்கள்
திரு.மகுடேஸ்வரன் கோவிந்தராஜன் என்பவரின் முக நூலில் இருந்து பெறப்பட்டவை. சந்தி இலக்கணம் பற்றியோ
அல்லது மற்றைய தமிழ் இலக்கணம் பற்றியோ ஏதும் ஐயம் இருப்பவர்கள் அவரது முக
நூலுக்குச் சென்று தெளிவு பெறலாம்.
இந்தச்
சந்தி இலக்கணம் தெரியாமல் பலரும் சந்தியில் நின்று தடுமாறுகிறார்கள். எனது
அவதானத்திற் பட்ட அத்தகைய சில -
பிழை சரி
அறிவுப்பூர்வம் அறிவுபூர்வம்
ஆய்வுக் கூடம் ஆய்வு கூடம்
அபச்சாரம் அபசாரம்
விபச்சாரம் விபசாரம்
பிரச்சாரம் பிரசாரம்
கலாச்சாரம் கலாசாரம்
தொலைப்பேசி தொலைபேசி
புனைப்பெயர் புனைபெயர்
தமிழ்ப்பேசும் தமிழ்பேசும்
நல்லப்பையன் நல்லபையன்
கதாப்பாத்திரம் கதாபாத்திரம்
கைத்தட்டல் கைதட்டல்
முக்கியச்செய்தி முக்கியசெய்தி
வாழ்ந்துக்காட்டு வாழ்ந்துகாட்டு
திருநிறைச்செல்வி திருநிறைசெல்வி
வாழ்த்துக்கள் வாழ்த்துகள்
கருத்து மயக்கப் பிழைகள்
கேளிர்
என்பது நல்ல தமிழ்ச் சொல். சுற்றத்தார் என்பது அதன் பொருள். கேளீர் என்றால்
கேளுங்கள் என்று கருத்து. 'யாதும் ஊரே;
யாவரும் கேளிர்' என்பதே புற
நானூற்றுப் பாடல் வரி.
வேண்டுதலும் வாங்குதலும் ஒரே
பொருளுடைத்தனவல்ல. கடவுளை வேண்டுகிறோம். ஆனால் கடையில் பொருளை வேண்ட முடியாது;
வாங்கத்தான் முடியும்.
யாழை மீட்டலாம். ஆனால் நினைவை மீட்டுத்தான் பார்க்க வேண்டும். புரி எனும் வினைச்
சொல்லுக்கு-செய்தல், விளங்கிக் கொள்ளல்
என இருவேறு பொருள்கள் உண்டு.(தியானித்தல்,விசாரணை செய்தல், விரும்புதல், சொல்லுதல், மிகுதல், அசைதல் என்றும்
பொருள்கள் உண்டுதான்.) அதனால் புரிதல்,
புரிந்து கொள்ளல் எனப் பொருள் புலப்படுமாறு எழுதுவது
சிறப்பு. 'அவள் புரிந்ததை
அவன் புரிந்தான்' என எழுதும்போது விளங்கிக் கொண்டானா, செய்தானா என
மயக்கம் ஏற்படுவதால் புரிந்து கொண்டான் என விரித்து எழுதுவதே ஏற்புடையது.
தமிழ் இனிமையான மொழிதான். ஆனால் தமிழ் இலக்கணம் ஒன்றும்
இனிப்பான சங்கதி இல்லைத்தான். இது ஒன்றும்
விருந்தல்ல.மருந்துதான். ஆனாலும் மருந்தும் அவ்வப்போது தேவைதானே?
( இலக்கணம் மாறலாம்...மீண்டும் சந்திப்போம்)
No comments:
Post a Comment