சிறுகதை- மரண அறிவித்தலும் மணமகன் தேவையும் - மறைமுதல்வன்
சாவுகள்! எத்தனை
வகையான சாவுகள்? மனிதர் எப்படி
எப்படியெல்லாம் சாகிறார்கள்!
முன்பெல்லாம் சாவென்றவுடன் ஞாபகம் வருவன
விபத்துகள்தாம். வீதியில் கார் விபத்தில் ஒருவர் அகப்பட்டுச் செத்துப் போனால் ஐயோ
பாவமென்றிருக்கும்.
யாராவது
யாரையாவது கொலை செய்து விட்டதாகக் கேள்விப்பட்டால் ,மனதில் 'திக்'கென்றிருக்கும்.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று மனம் அதிரும். லட்சுமிகாந்தன் என்பவனின்
கொலைபற்றித்தான் நான் முதலில் கேள்விப்பட்டது. அதுவும் கொஞ்சம் அரசல் புரசலாக.
எனது பெரியப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த போது காதில் விழுந்தது. அவருக்கு
பாகவதருடன் அறிமுகம் இருந்தது. அப்போ எனக்கு பாகவதரையும் தெரியாது சின்னப்பாவையும்
தெரியாது.
கோகிலாம்பாள் என்றொரு பிராமணக் குருக்களின் மனைவி கொலைசெய்யப்பட்ட வழக்கு
பரபரப்பாக பத்திரிகைகளில் வந்தபோது, அட, நம்நாட்டில் அதுவும் எங்கள் யாழ்ப்பாணத்தில் அதுவும் ஒரு அய்யர்
குடும்பத்தில் இப்படியும் நடக்குமா? எங்கள் தமிழ்
ஆட்களுமா இப்படி எனத் திடுக்காட்டம் அடைந்த காலமும் ஒன்று.
அந்தக்காலத்தில்
திரைப்படங்களிலோ கதைகளிலோகூட கொலையையோ சாவையோ விஸ்தாரமாக விளக்கமாககக்
காண்பித்ததாகவோ எழுதியதாகவோ ஞாபகமில்லை. அப்படி ஏதும் இருக்குமாயின் அது 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கலாம். 'மர்மயோகி' என்ற எம்ஜியார் நடித்த திரைப்படத்தில் ஆவிரூபத்தில்
ஒரு பாத்திரம் வந்துலாவியதால் சிறுவர்கள் பார்க்க உகந்ததல்ல என A சேட்டிபிக்கேற் கொடுத்த காலம்.
மேதாவியும் சிரஞ்சீவியும் தமிழ்வாணனும் அந்நாளைய மர்மக்கதை மன்னர்கள்.
பதின்மவயதுகளின் துவக்கத்தில் அவர்கள் எழுதிய நாவல்களை கள்ளமா ஒளிச்சு வச்சு
வாசிச்ச அனுபவத்தில கொலைகாரர்களோடயும் கொலைகளோடயும் கொஞ்சம் பரிச்சயம் கொள்ள
முடிஞ்சுது.
அப்பிடித்தான் மீசை அரும்பத் துவங்கின காலத்தில A சேட்டிபிக்கற் படமொண்டு பாக்கப் போனன். அதுவும் கள்ளமாத்தான். அது ஹிட்ச்கொக்கின்ர 'சைக்கோ'. தனியப் போகப் பயந்து துணைக்கு இன்னொரு
கூட்டாளியையும் சேர்த்துக் கொண்டு போய்ப்
பார்த்தது. 'திக்திக்' எண்ட நெஞ்சிடியோட (வீட்டுக்குப் போனாப் பிறகு
பிடிபட்டிடுவமோ எண்ட பயம் ஒரு பக்கம்) விறுமசத்தி பிடிச்சவனாட்டம் குந்தி இருந்து
போட்டு கீழால சலம் போனதுகூடத் தெரியாமல் (அது நானில்லை-மற்றவர்) ஒருமாதிரி
வீடுவந்து சேர்ந்தது அது பெரிய கதை.
வீட்டில நாயைப் பூனையை ஆட்டை மாட்டை எவ்வளவு அன்பா வளக்கிறம். அதுகளுக்கு
ஒண்டெண்டால்கூட எவ்வளவு துடிக்கிறம். தற்சேலா அதுகள் செத்துப்போனால் அவ்வளவுதான்.
வீடே செத்தவீடா மாறீடும். எங்கிட வீட்டு 'ஜிம்மி' (அதை நாய் எண்டாரும் சொல்லக்கூடாது; சொன்னால் கொலைவிழும்!) காறில அடிபட்டுச் செத்துப் போச்சுது. கார்க்காரனை
எனக்குத் தெரிஞ்ச கேட்ட வார்த்தையளை
எல்லாம் சேர்த்து மனசுக்குள்ள திட்டினதும் சாப்பிடக்கூட மனமில்லாமல் அழுதுகொண்டு திரிஞ்சதும் எல்லாமே இப்ப நடந்த மாத்திரித்தான் கிடக்கு. அதுகுள்ள காலம் எவ்வளவோ மாறீட்டுது. நாங்களும்
மாறிப் போனம்.
ஆர் செத்தால் என்ன? ஆர் எக்கேடு கெட்டால் என்ன? நாங்கள் எங்கிடபாடு. நாங்கள் நல்லாயிருந்தால் காணும். மற்றவைக்காக
குத்திமுறிஞ்சு பட்டதுகாணும். எல்லாரும் ஞானிகள் ஆயிட்டம். அடுத்தவனுக்காக இப்பன்
எண்டாலும் மனம் இரங்காத, இதயம் துடிக்காத அரக்கர்களா நாங்கள் எப்ப மாறினம்?
ஒருதுளிக் கண்ணீருக்கும் கணக்குப் பாக்கும் பிசினாறியள
எப்பிடியானம்? கருணை காருண்யம் எண்ட சொல்லுகளை
எல்லாம் எங்கிட அகராதியில இருந்து எப்ப துடைச்சழிச்சம்? சுயநலம் எங்கிட ரத்தத்திலேயே ஊறிக் கலந்திட்டுதா? அல்லது மனஓட்டத்தைச் channel மாத்த remote ஏதும் கண்டு பிடிச்சிட்டமா? ஒண்டுமா விளங்கேல்லை.
என்னைப்
பொறுத்தமட்டில செத்தவீட்டுகுப் போக நான் விரும்பிறதில்லை. (இப்ப ஆரும் செத்தாலும்
முக நூலில like குடுக்கினம்-புண்ணியவான் போய்ச்
சேர்ந்திட்டான் எண்டு விரும்புகினமோ!)
இறப்பின் பின்னரான ஒருவனின் தோற்றம் ஒன்றும் நினைவுகூரப்பட
வேண்டியதல்ல.சாவீடொன்றும் சந்தோஷமான இடமுமல்ல. (என்ன இருந்தாப்போல தத்துவ மழையாப்
பொழியிறன் எண்டு பாக்கிறியளே? மயானத்திளையும் மப்பிலயும் தத்துவம் தானா வரும் பாருங்கோ!)
தண்ணியடிச்சு காட்ஸ்அடிச்சுக் கதைபேசி, செத்த வீட்டையும் சந்தோசமான இடமா மாத்திறவையும்
இருக்கினம்தான். அதிலையும் பிழையில்லை. நடிப்புச் சுதேசியளா இருக்கிறவையளைவிட
இவயள் பிழையில்லை. அழுமூஞ்சியளிட முகத்தில
ஆதரவை/ காதலைத் தேடிற இளவட்டங்களுக்கும் இதமளிக்கிற இடமாயும் செத்தவீடு இருக்கலாம்.
சாவையும் சாதாரணமா
ஏற்றுக்கொள்ள ஒரு பக்குவம் வேணும். அந்தப்பக்குவம் எங்களுக்கு இப்ப வந்திட்டுது
போலதான் கிடக்கு. சாவு மலிஞ்ச பிரதேசமா எங்கிட பகுதி மாறிக் கனகாலமாயிட்டுது.
ஒவ்வொரு வீட்டுக் கதவையும் யமன் வந்து தட்டிப் பாத்திட்டான். சாவைக் கண்டு
கிறுங்காத ஆக்களா- மனம் மரத்து இறுகிப்
போன ஆக்களா-. நாங்கள் மாறிப்போனம்.
சாவை
விலை குடுத்து வலிய வரவழைச்ச ஆக்கள் நாங்கள். மாமன் செத்தால் என்ன மச்சான்
செத்தால் என்ன எங்கிட வீட்டுக் கதவை இறுக்கி மூடி வச்சிருந்தால் காணும்
எங்களுக்கு.
சந்திரமதிக்காகவும்
சாவித்திரிக்காகவும் மாலைமாலையாகக் கண்ணீர் சிந்தின நாங்கள் 'சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை
இரங்காத 'கல்நெஞ்சர்களா மாறிப் போனது காலக் கொடுமையாலா அல்லது கொழுப்பு முட்டிப்
போனதாலா?
அடிப்படையில நாங்கள் எல்லாம்
பயந்தபீச்சியள். எங்கிட வீரமெல்லாம் மனிசிமாரிட்டையும் வேலிக் கதிகாலிலையும்தான். எங்கிட பயத்தை
மறைச்சு வீரவான்களா வெளீல காட்டிக் கொள்றதில நாங்கள் ஆளையாள் வெண்டனாங்கள்.
எம்ஜீயார் படங்களைப் பாத்துக்
கைதட்டின விசிலடிச்சான் குஞ்சுகளான எங்கிட வீரத்துக்கு வடிகாலாக எம்ஜீயாரின்ர
பிம்பத்தைப் போல ஒரு அசல் ஆள் தேவைப்பட்டுது. எம்ஜீயாரின்ர ஆசியோட அவர் குடுத்த 6கோடி(?) அன்பளிப்போட தம்பியவை விளையாட்டைத்
துவக்கிச்சினம்.(நானும் எம்ஜீயாரின்ரஅலிபாபாவப்
பாத்திட்டு தம்பியோட - இது சொந்தத் தம்பி-வாள்சண்டை போட்டிருக்கிறன்.
வாளுக்குப்பதிலா, தும்புத்தடி.கூரையில தொங்கின பல்ப்புகளைப் உடைச்சுப் பறத்தி,
புறத்தீல பிரம்பால ஐயாவிட்ட அடிவாங்கினதோட சரி-ஆட்டம்
குளோஸ்! )
தம்பியவையிட காலம் வாள்
போய்த் துவக்கு வந்த ஜேம்ஸ் பொண்ட் காலம். துவக்குச் சண்டைபோட அவயள்
விரும்பிச்சினம். அதுக்கொரு சாட்டுத் தேவைப்பட்டுது. தமிழைப் பிடிச்சுக்
கொண்டிச்சினம். விளையாட்டுப் பிள்ளையள். ஏதோ விளையாடிப் பாக்கட்டும் எண்டு நாங்களும் பேசாமல்
இருந்திட்டம். தட்டிக் கேட்க ஆக்கள் இல்லாததால தம்பிமார் சண்டப்பிரசண்டரா மாறிப்
போச்சினம். அவையள் துவக்கத்
தூக்கிச்சினம். தியேட்டர் இருட்டுக்கை இருந்து கைதட்டிறவையைப் போல நாங்களும்
கையைத் தட்டினம். (நாங்கள் எப்பவும் இருட்டுக்கை தானே?) இது ஒண்டும்மூண்டு மணியில முடியிற
சிறுகதையில்லை முப்பது வருசத்துக்கு மேல நீளப்போற தொடர்கதை எண்டு அப்ப தெரியாது.
சேரசோழபாண்டியரின்ரவாரிசாமாறப்போறம்எண்டிச்சினம்.- 'கரிகாலனாயோ கட்டபொம்மனாயோ?( எந்த நாயாவோ மாறித்துலையட்டும்;
மேல விழுந்து பிடுங்காமல் போனால் சரி.. )நாங்கள்
ஆண்ட பரம்பரை எண்டிச்சினம்- 'அதுக்கென்ன?' மீண்டும் ஒருமுறை ஆள நினைச்சினம்.- 'சோக்கெல்லோ'. அதிலை என்ன பிழை
எண்டிச்சினம். = 'அதுதானே?' சிறுபிள்ளை வேளாண்மை
வீடுவந்து சேராது எண்டு தெரிஞ்சும் நாங்கள் வாயை மூடிக் கொண்டிருந்திட்டம்.
அதுதான் நாங்கள் செய்த பெரும்பிழை. அப்பிடியும் சொல்லேலாது.. வாயைக் குடுத்தவை
நிரந்தரமா வாயை மூடவேண்டி வந்த கதை தெரிஞ்சதால நாங்கள் வாயைத் திறக்கேல்லை
எண்டதுதான் உண்மை. எப்பவும் பார்வையாளரா இருந்துதான் எங்களுக்குப் பழக்கம்.
பங்காளியளா ஆகுங்கோ எண்டு எங்களையும் உள்ள
இழுத்து விடுவினம் எண்டு கனவிலையும் நாங்கள் நினைச்சிருக்கேல்லை. ஆழமறியாமல் காலை
விட்டிட்டம். அகலக்கால் வையாதே. எண்டு சொல்லியிருக்கினம். வச்சிட்டம். வச்ச காலை
எடுக்க ஏலுதில்லை. What to do ? அனுபவிக்கிறம்.
சாவில துவங்கி,
பெடியளப்போல நானும் உங்களைச் சண்டைக்க இழுத்து விட்டிட்டன்.
sorry அங்கயே வாறன். நல்ல சாவு அவலச் சாவு எண்டு சாவிலை ரெண்டு வகை சொல்லுவினம்.
வயசு போனாப் பிறகு கிடந்தது உத்தரிக்காமல் செத்திட்டால் அது நல்ல சாவு. உது எப்ப
மண்டையப் போடும் எண்டு மற்றவையள - உற்றார் உறவினரை ஏங்க வச்சு, இழுத்துப் பறிச்சுக் கொண்டு கிடந்து சீவன்போனால் அது
ரெண்டாவது.
மாத்தேலாத நோய் நொடியெண்டு வந்து அஞ்சிலையோ அம்பதிலையோ 'பொட்'டெண்டு போனால் தாங்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனாலும் விதியில பழியைப் போட்டிட்டு ஒருமாதிரித் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் எத்தனை அருமையான இளந்தாரிப்
பெடியள், உவங்கட மாய்மாலப் பேச்சில மயங்கி, எந்த ஒரு சுயநலமும் இல்லாமல், ஏதோ ஒரு இலட்சிய ஈர்ப்பில எடுபட்டுப் போய்- இப்ப ஒண்டடி மண்டடியாச் செத்துப்
போனாங்களே! இருந்திருந்தால் நல்ல ஒரு அப்பாவா -வழிகாட்டிற ஆசிரியனா- புதிய பாதை
காட்டிற எழுத்தாளனா மாறி என்ன மாதிரி ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்கியிருப்பான்கள்.
எல்லாம் நாசமாப் போச்சுது.
இதையெல்லாம் நினைச்சு கவலைப்பட்டு என்னத்தை? நினையாமல் இருக்கிறதுதான் நல்லது. 'ஆண்டாண்டு தோறும்
அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?' எண்டு போட்டுப்
பேசாமல் இருக்கிறதுதான் புத்தி. ஆனால் அப்பிடி இருக்க இந்த டிவி.காறார் விடாயினமாம். பழசுகளை எல்லாம் போட்டுக்காட்டி,
'அழுங்கோ அழுங்கோ அழுதுகொண்டே இருங்கோ' 'எண்டு எங்களை
அழவைக்க நிக்கினம். அது அவயளின்ர புத்தி. நாங்கள் அழுதால் அவயளுக்கு காசு!
மான ரோஷமுள்ள
ஒரு மறத் தமிழனை இனித் தேடிப் பிடிக்கேலுமே? ஏன் தேடிப்பிடிப்பான்? அடுத்த சண்டைக்கு ஆயத்தப் படுத்தவே? கலை கலை எண்டு கலைச்சுப் பிடிச்சு 'கொலை கொலையா முந்திரிக்கா ..'விளையாட்டு விளையாடினதெல்லாம் காணாதே? எனக்கு அறளை பேந்திட்டுதாம் எண்டு
மனிசி சொல்லுவா. நீங்களே சொல்லுங்கோ- நான் சொன்னதுகளில ஏதும்
பிழை இருக்கோ? எங்கள் தரவளி ஆக்களை நீங்கள் சுண்டிப் பாத்தாலும் இப்ப தேடிப் பிடிக்கேலாது. எண்டாலும் தெண்டிச்சுப்
பாருங்கோ. எங்கயெண்டாலும் அம்பிடும். கடைசியா இப்பத்தான் நான் ஒருமாதிரி
விசயத்துக்கு வந்திருக்கிறன். சுப்பற்ற கொல்லேக்க சுத்திச் சுத்தி வருமாப் போலதான்
என்ர கதையும். எதையும் ஆலாபரணம் பண்ணாமல் சொல்லத் தெரியாதாம்.
வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணத்தைப் பண்ணிப்பார் எண்டு தெரியாமலே
சொன்னவங்கள். அது விளங்காமல் அநியாயத்துக்கு நானும் ஒரு வீட்டைக் கட்டிப்
பார்த்ததுதான். இந்திய ஆமி ஊருக்க உள்ளிட்ட புதுசில 'ஆ! இவ்வளவு வடிவான வீடுகளோ! வாசல்களோ! சொந்தமோ?
ஷோச்கெல்லோ!' எண்டு வாயூறிக் கண்ணைப் போட்டுவிட்டான். அவ்வளவுதான்
எல்லாம் சரி.
கெட்டபோலால நாங்கள் 'லக்கு'ப் பாத்து மாங்கா விழுத்துமாப் போல மேல இருந்து 'பொம்பர்'காரனும் 'புக்காரா'காரனும் குண்டெறிஞ்சு விளையாடக் குடுத்து வச்சது எங்கிட வீடுகள்தான். சும்மா
சொல்லக்கூடாது, வழிச்சுத் துடைக்கிறதில வடக்கத்தியான் விண்ணன்தான்.
நாள் பாத்து நட்சத்திரம் பாத்து, கோள் பாத்து 'லோனுக்கு' ஆள் பாத்து, நிலம் பாத்து நிலத்து அடி நீர் பாத்து, நில அளவைச் சேர் பாத்து அவர் போட்ட படம் பாத்து, வாகான இடம் பாத்து -அதக்குள்ள வாஸ்து சாஸ்திரமும் பாத்து, கல் பாத்து மணல் பாத்து (தட்டுப்பாட்டினால) காணாத சீமேந்து பாத்து, மேசனோட கூலியையும் முன்னூறு நாள் போய்ப் பாத்து பாத்து, கூலிவிடுற விளையாட்டைக் கூடவே தினம் பாத்து-. அவனைப்பாத்து
இவனைப் பாத்து , இப்பிடி ஆராரை எல்லாமோ பாத்துப் பாத்துக் கண்
பூத்து, கடைசியில கண் இடாக்குத்தரை யும் போய்ப் பார்த்துக் கட்டின வீட்டை- கண்டறியாத ஒரு கண்ணவிஞ்ச கழிசடை மூதேசி, கொள்ளேல போவான் மேல இருந்து 'லக்கு'ப் பாத்து இடிச்சுக் கொட்டினாப் பிறகு இனிக்கதைக்க ஒண்டுமில்லை; எனக்கிருக்க வீடுமில்லை. அது முடிஞ்ச கதையோட முன்கதைச்
சுருக்கம்.
இப்ப நான் கலியாணத்தைக் கட்டிப்பாக்க வெளிக்கிட்டிருக்கிறன். எனக்கில்லை.
என்ர மகளுக்குத்தான். அவவப்பற்றிச்
சொல்றதெண்டால், இங்கதான் பிள்ளை
பிறந்து வளர்ந்தாலும் தமிழ்ப் பண்பாட்டில தான் நாங்கள் வளத்திருக்கிறம்.
எங்கிட பண்பாட்டை பழக்க வழக்கங்களச் சொல்லிக் குடுத்திருக்கிறம் . பரத நாட்டியமும்
சரிகம எண்டு எங்கிட சங்கீதமும் கொஞ்சம் படிச்சிருக்கிறா. தமிழ் எழுத வாசிக்கத்
தெரியாட்டிலும் விளங்கும். டிவில சில நேரங்களில தமிழ்ப் படமும் பாப்பா;சிரிப்பா. பாப்பா எதுக்குச் சிரிக்கிறா எண்டு சத்தியமா
எங்களுக்குத் தெரியாது. எண்டாலும் நாங்களும் சேர்ந்து சிரிப்பம். (சிரிப்பாச்
சிரிக்கிற மாதிரித்தானே எங்கிடபாடு எப்பவும் இருக்குது..) IT கொம்பனி ஒண்டில வேலை பாக்கிறா. வேலை; வேலை முடிஞ்சால் வீடு. வெள்ளிக்கிழமையளில கோயில். இதுதான் அவவின்ர உலகம். நாங்களும் இஞ்ச வெளிநாட்டோட வந்தும் ஒரு இருபது வருசம் ஓடிப்போயிட்டுது.
இந்த ஊர்ச் சாப்பாட்டால
ஊட்டம் கொஞ்சம் கூடி ஆள் கொஞ்சம் தொக்கையாப் போனா. தொக்கை எண்டால் பெரிய தொக்கை
இல்லை. நமீதாவை விட ஒரு நாலிஞ்சு குறையத்தான் இருப்பா. (நமீதாவை நான் முதலில கண்ட
நேரம்- நேரில இல்லை படத்தில தான்.- பிள்ளைக்கு
நமிதா எண்டு பேர் வைக்காமல் போய்ட்டமே
எண்டு சாடையாக் கவலைப் பட்டனான்.நாங்கள்
கொஞ்சம் முந்தீட்டம்.இப்ப நல்லவேளையா அப்பிடி வைக்கேல்லை எண்டு ஒரு ஆறுதல்..)
கொழுப்பைக் குறைக்கவெண்டு
ஓடிற மெஷின் ஒண்டும் வாங்கிக் குடுத்துக் கிடக்கு. பிள்ளை அதில வடிவாத்தான் ஓடுது.
எண்டாலும் ஒரு சின்னப் பயம். ஓட்டம் பிடிபட்டு
நாளைக்கு ஆரும் வெள்ளை சள்ளையோட ஓடிப் போயிடுவாளோ, கறுப்பனோட கூடிக்கொண்டு பறிஞ்சிடுவாளோ,(நாங்கள் கறுப்பில்லை -மாநிறம் கண்டியளோ) ஊர்பேர் தெரியாத உதவாக்கரை ஆரோடையும்
எடுபட்டுப் போயிடுவாளோ எண்ட பயம்தான். எங்கிட பிள்ளை அப்பிடிச் செய்யமாட்டாள். தெரியும்; நம்பிக்கை இருக்குது.
ஆனாலும் வருமுன் காக்கிறது எதுக்கும் நல்லதுதானே. காக்காமல் விட்டதால கண்ட
பலன் ? உலகத்துக்கே தெரியும்.
அவளுக்குத்தான் இப்ப ஒரு நல்ல மாப்பிளையாத் தேடுறன். பெடியன், நல்ல குணமுள்ள, இயக்கங்களோட
சங்காத்தம் இல்லாத ஆளா, எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாத, தாய் தேப்பனுக்கு அடங்கின பிள்ளையா இருக்க வேணும். படிப்பை
பற்றிக் கவலை இல்லை. இங்கிலிசில கதைச்சுப் பேசக் கூடியவரா இருந்தா நல்லம். இல்லாட்டிலும்பறவாயில்லை.
பிள்ளை பேசிறதை விளங்கிக் கோண்டால் காணும். பாஷை தெரிஞ்சால் கனக்க நியாயம் கதைக்க
வேண்டிவரும். தலையத் தலைய ஆட்டத்
தெரிஞ்சால் காணும்தானே. அதுக்குப் பாஷை என்னத்துக்கு.?
பிள்ளைக்கு சூரியாவையும் பிடிக்கும். சிவகார்த்திகேசனையும் பிடிக்குமாம்.
பெடியன் அவை தரவளி இருந்தால் உத்தமம். சிம்பு போல வேணாமாம். அவனைப் பிடிக்காது. வேற என்ன? நல்ல பெடியனாச் சந்திச்சால் சொல்லுங்கோ. ரெண்டாம் பேருக்குத் தெரியாமல் காதும் காதும்வச்ச மாதிரி ரகசியமாக் காதோட சொல்லுங்கோ. போண் நம்பறத் தாறன் வேற ஆரும் அறிஞ்சால் கல்லுக்குத்தி
விட்டுப்போட்டு நைசாக் கொத்திக் கொண்டு
போயிடுவாங்கள்.
பேப்பர்ல
'Matrimonial ' பாக்க வெளிக்கிட்டு மரண அறிவித்தல்களிலையும் மேயப் போனதால
கண்டதையும் அலம்பீற்றன். Drink
எடுத்தது காணுமெண்டு மனிசீட்ட இருந்து order றும் வந்திட்டுது. அப்ப மறக்காமல் தொடர்பு கொள்ளுங்கோ. Good Night
No comments:
Post a Comment