குடிமக்கள் காப்பியம் - 04
குடியும் தமிழ்த்திரையுலகும்
உண்ணற்க கள்ளை ; உணில் உண்க,
சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார்.
எண்டு நெத்தியடியாப் பாடின வள்ளுவரும் கள்ளுண்ணாமை பற்றிப்
பத்துக் குறளில பொழிப்பா எழுதிப் போட்டுத்தான் போனவர். ஆனால் 'மிஸ்டேக்' என்னெண்டால் 'போபேர்ஸ்'ல தொடங்கி
'spectrum 'வரைக்கும் ஊழலில
உழலிற பெருச்சாளிகளோட முற்றுந் துறந்த முனிவராம் எண்டு சொல்லிக்கொண்டு மன்மதலீலை நடத்திற நித்தியானந்தாசாமிகள் வரை
எல்லாரையுமே சான்றோராத்தான் உலகம் செப்புது.
அவையளோட சேர்த்து எண்ணப்பட விருப்பமில்லாதவையள் தாராளமாக் கள்ளைக்
குடிக்கலாம் எண்டு வள்ளுவரே 'பெர்மிஷன்' தந்திட்டேராம். ஆனபடியால் தான் நாங்கள் குடிக்கிறம் எண்டு
சொல்லிற குடிகாறரின்ர 'point 'ரில நியாயம் இல்லையெண்டு சொல்லேலுமே?
வள்ளுவர் வழி வந்த கவிஞர்களில
கம்பனும் சரி, கம்பதாசனும் சரி, கண்ணதாசனும் சரி குடியோடு
உறவாடிக் கவிபாடிக் களித்த ஆக்கள்தானே? இப்போதெல்லாம் திரையில் நாயகியுட்பட நாயகன் வில்லன்
காமெடியன் என எல்லோருமே குடித்துக் கூத்தடிகிறார்கள்.முன்னரெல்லாம் அப்படியில்லை.
மிக அரிதாக ஓரிரு படங்களில் தான் குடி தலைகாட்டியது.
1937இல் வெளிவந்த 'பக்கா ரெளடி ' படத்தில்,'பியரே இனி நம் தெய்வம்/பிராந்தியிலே குளிப்போம்' எனவும், 1039இல் வந்த 'மதுரை வீரன்'(MGR நடித்தது அல்ல) படத்தில் 'அபினு கஞ்சா சாராயம் கள்ளு ஆனந்தம் பரமானந்தம்' என்றும், 1937இல் வந்த 'தேவதாஸ்'(டிவி.ராவ் நாயகனாக குடித்த) படத்தில் 'பிராந்தி சீசாவுடன்
கிளாசும் பேசுதடி' என்றும் பாடல் வரிகள்
வருவதாக, 'குடியினால் சரிந்த கலைக் கோபுரங்கள்' என்ற தமது நூலில் அறந்தை நாராயணன்
குறிப்பிடுகிறார். அதெல்லாம் நாங்கள் பார்க்கவோ பாடல்களைக் கேட்கவோ
கெ(கொ)டுத்து
வைக்காத தமிழ் சினிமாவின் ஒரு (கற்)காலம்.
ஆனால் அதற்குப்பின் 1949இல் வந்த 'நல்ல தம்பி' யை இப்போது
விரும்பினாலும் நீங்கள் youtube இல் போய் எட்டி/தட்டிப் பார்க்கலாம். அதில் கலைவாணர் மதுப்
பாவனைக்கு எதிராக ஒரு தெருக்கூத்தையே நடாத்தியிருப்பார்.
உடுமலையாரின் பாடல் வரிகள் மிக இயல்பான நடையில் குடியைச்
சாடும். அதில் குடிகாரனின் வீட்டு இலட்சணத்தைப் புட்டுக்காட்டி மதுரம் இப்படிப்
பாடுவார்.
தாலிக்கயிறு தனியா இருக்கும் தங்கமிருக்காது - அதிலே
தங்கமிருக்காது தண்ணிகுடிக்க தகரக் கொவளை செம்புமிருக்காது -வீட்டிலே செம்புமிருக்காது பாலு வாங்க கொழந்தை பசிக்கு
பணமிருக்காது-கையிலே பணமிருக்காது
பாழும் கள்ளைக் குடிப்பது மட்டும் நாளும் தப்பாது- எந்த நாளும் தப்பாது கடைக்குப் போவான் ; கள்ளைக் குடிப்பான்;
காரியமில்லாமல் சண்டைக்குப் போவான்- வடைய ரெண்டு வாங்கிக்குவான் ;
வழி நெடுக பேசிக்குவான்
வந்து கதவைத்தட்டுவான் -
வாயில வந்ததைத் திட்டுவான்-அவன்
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை
வஞ்சகக்காரி என்றுரைப்பான்-
வாரிசுக்காகச் சிசுவைத் தாங்கும்
வயத்திலே எட்டி மிதிப்பான் -
பாழும் கள்ளைக் குடிப்பது மட்டும் நாளும் தப்பாது- எந்த நாளும் தப்பாது கடைக்குப் போவான் ; கள்ளைக் குடிப்பான்;
காரியமில்லாமல் சண்டைக்குப் போவான்- வடைய ரெண்டு வாங்கிக்குவான் ;
வழி நெடுக பேசிக்குவான்
வந்து கதவைத்தட்டுவான் -
வாயில வந்ததைத் திட்டுவான்-அவன்
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை
வஞ்சகக்காரி என்றுரைப்பான்-
வாரிசுக்காகச் சிசுவைத் தாங்கும்
வயத்திலே எட்டி மிதிப்பான் -
என்றிவ்வாறாக எளிய
நடையிலே, மிக எதார்த்தமாக, மனதில் உறைக்குமாப் போல எழுதியிருக்கும் அந்நாளையப்
பாடலாசிரியரின் பாடல்களுக்கிணையாக
இந்நாளில் மருந்துக்கும் பாடல்கள் வருவதில்லை. ஏன் மருந்தைப்போல பயன்படுத்தப் பட்ட மது கூட
இப்போது விருந்தும் கேளிக்கையுமாக 'பச்சைத் தண்ணி'போல ஆகிவிட்டதே!
மதுவுக்கு எதிரான அவரது பிரசாரப் பாடலில் மதுவைக் கைவிட்ட(தா)ல் வரும்பயன்கள்
பற்றி-
மனிசனாகிப் போனேன்
-இப்பநான் மனிசனாகிப் போனேன் பனைமரப்பாலு பட்டை பிராந்தி, பக்கம் வந்தால்
எடுக்கிறன் வாந்தி- வரண்ட காரவடை வாத்து முட்டை
கருவாட்டைத் திண்ட - வாய் நாத்தமும் நீங்கி
எனப் பட்டியலிடுபவர் முத்தாய்ப்பாக பாரதியின் 'விடுதலை' பாடலை அடியொற்றி -
எனப் பட்டியலிடுபவர் முத்தாய்ப்பாக பாரதியின் 'விடுதலை' பாடலை அடியொற்றி -
உடலை
வாட்டும் நோய்களுக்கு
தலைவலிக்கும் -இன்றுமுதல் (விடுதலை..)
பகலும்
இரவும் தூங்கிக் கிடந்த
பல்லாக்களுக்கு விடுதலை
பயந்தது பயந்து ஏறி இறங்கும்
பாட்டாளிக்கும்
விடுதலை
ஜெகத்தை வெறுக்கச் செய்யும்
கஞ்சாச் சிலும்பிகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும்
கள்ளு
மொந்தைகளுக்கும் விடுதலை
பனைமரத்துக்கும்
விடுதலை
தென்னை மரத்துக்கும் விடுதலை
பனைமரத்துக்கும் தென்னை மரத்துக்கும்
ஈச்சை மரத்துக்கும் விடுதலை
என மது ஒழிப்புக்குச் சார்பாக விடுதலை முழக்கம் செய்தார். மது பாவனைக்கு
எதிராக இவ்வளவு வீச்சாக வேறெந்தத் தமிழ்த் திரைப் படத்திலும்
பிரசாரம் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் மதுவிலக்குச் சிலகாலம் அமுலில் இருந்து பின் தோல்வியடைந்த்தது
போலவே, மதுவுக்கெதிராகப்
போர்க்கொடி தூக்கிய கலைவாணரே அதற்கடிமையாகி
அதன் பிடியில் சிக்கி மடிந்ததும் ஒரு முரண் நகையே. நகைவேந்தரைக் குடி பலி/பழி வாங்கிவிட்டது!
உடுமலையாரின் பாடலில் இருந்துதான் யாழ்ப்பாணத்தில் 'பிளா' என வழங்கப்படும் பட்டையை தமிழகத்தில் 'பில்லா'(ரஜனியினதல்ல) எனக் குறிப்பிடுவர் என விளங்கியது. இப்பாடலை மீட்டு எழுதும்போது எமது நித்தி
கனகரத்தினத்தின் 'கள்ளுக்கடைப் பக்கம்
போகாதே' பொப்பிசைப் பாடலும்
ஞாபகத்தில் வந்தது. கள்ளுக்குடிக்கு எதிர்
வினையாக உருவாக்கப்பட்ட அப்பாடல், கள்ளடித்து 'மப்பு'
ஏறியவர்கள் ஆட்டம் போடத் தோதாகத்தான் பெரும்பாலும் இருந்து
வந்துள்ளதென்பது மற்றொரு முரண் நகை!
தண்ணியைப் போட்டுவிட்டு ஆட்டம் போடுவதற்கு 'பைலா'ப் பாடல்கள் போல வராது. அந்தவகையில் தமிழ்த் திரையில்
பிள்ளையார்சுழி போட்ட பாடல் என்றால் அது 'டிங்கிரி டிங்காலே' தான். 'அன்பு எங்கே?' (1958) க்காக வீ.சீதாராமன் எழுதி வேதா இசை அமைத்த பாடல். TMS இன் குரலில் இன்றும்
துள்ளாட்டம் போட வைப்பது. படத்தில் இலட்சிய நடிகர் எனப்பட்ட ss 'ராஜேந்திரன், எவ்வித இலட்சியமும்
இல்லாத ஒரு பணக்கார இளைஞராக வந்து 'கிளப்'பில் குடித்துவிட்டுக் கும்மாளம் போடுவார்.
காதல் தோல்வியால் குடிகாரர்களாக
மாறிவிட்ட இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக நிலைத்து விட்டவன் தேவதாஸ்.
சரத்சந்திரரால் உருவாக்கப்பட்ட அப்பாத்திரம் குடியால் மாண்டு, அதன் காரணமாகவே புகழ்
பெற்று வாழ்கிறதென்றால் அதுவும் ஒரு நல்ல
முரண் நகையே .
1935இல் ஹிந்தியில்
வெளியான ' தேவதாஸ்' திரைப்படத்தில் பாடி
நடித்ததால் பிரபலமானவர் நடிகர் 'சைகால்' . அவரைப்பற்றி சந்திரபாபு உட்பட அந்நாளைய ரசிகர்கள் விதந்து
கூறுவர். 1937இல் முதன்முதலாக தமிழில் ஒரு 'தேவதாஸ்' வெளியான போதிலும் அதில் நடித்த YV .ராவ் என்பவர் பாத்திரமாகவே
மாறி, குடியைச் சரணடைந்து அதன் மடியிலேயே 'மண்டையை'ப் போட்டார் என்பதைத்
தவிர அது பற்றிக் கூற வேறொன்றுமில்லை. 1953இல் தெலுங்கு-தமிழ் மொழிகளில் வெளியான 'தேவதாஸ்' மாபெரும் வெற்றிப் படம். தேவதாஸ் பாத்திரத்தைத்
தத்ரூபமாகச் சித்தரித்த நாகேஸ்வராவின் நடிப்புக்கிணையாக வேறெவரையும் இன்றுவரை
கூற முடியவில்லை. படம் வெளியாகு முன்னரே
காலமாகிவிட்ட இசைமேதை C.R .சுப்புராமனின் இசையில்
கண்டசாலா பாடிய உடுமலையாரின் 'உலகே மாயம்'உட்பட அனைத்துப் புட்டிப் பாடல்களும் பட்டி தொட்டிகள்
எங்கும் பெருகிப் பாய்ந்து உருக வைத்துக்
குடிகாரர்களின் தேசீய கீதமாகவே மாறிவிட்டன . 'நான்தாண்டா இப்போ தேவதாஸ்' (தனிக்காட்டு ராஜா-1982)
என்று ரஜனியும், 'தேவதாசும் நானும் ஒரே
ஜாதிதானடி' என்று மோகனும்
(விதி-1984) பாடிப்பரவிய காலம் வரை குடிகாரர்களின் நாவில் நர்த்தனமாடியது
தேவதாஸின் நாமம்தான்.
வெற்றி பெற்ற கதைகளை 'ரீமேக்' பண்ணிப் பணம் பண்ணும்
திரையலகில் மீண்டுமது 1972இல் 'வசந்த மாளிகை'யாக மறு அவதாரம் எடுத்தது. 'குடி மகனே' என்றும், 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' என்றும் நடிகர் திலகம் 'ஷாம்பெயின்'வண்ணத்தில் கண்கள் சிவக்க - ஈஸ்ட்மன் வண்ணத்தில் தேவதாஸ் NO .3 ஆக வந்து 'வெறி'த்து வென்றார்.. நான்காவது
அவதாரம் உலகநாயகனுடையது. 'வந்தனம் என் வந்தனம் ' என்றும், 'வாழ்வே மாயம் ' (1982) என்றும் SPB .+ ஜேசுதாஸ் அனுசரணையுடன் பாடி தேவதாசைத் தொட்டுப் பார்த்தார்.
'சலங்கை ஒலி'(1983) யிலும் காதல் தோல்விதான் கமலைக் குடிக்க வைக்கிறது. 'தகிட தகிட தகிட தந்தானா' என்று கிணறுக்கட்டில் நின்று ஆட்டம் போட்டு ஜெயப்பிரதாவுடன் சேர்த்து
ரசிகர்களையும் பதற வைத்த அந்த நடனக்களைஞனை எப்படி மறக்க முடியும்? அதற்கு முன்னரே 'சொர்க்கம் மதுவிலே' எனக் குட்டிகளுடன்
1978இல் (சட்டம் என் கையில்) கூத்தாட்டம் போட்டவரும் அவரேதான்!.
'ராமன் ஆண்டாலும் ராவணன்
ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை' என 'முள்ளும் மலரும்'(1978) ரஜனிகாந்த் உழைத்துக் களைத்த உழைப்பாளியின் உற்சாகத்தைக் கள்ளைக்
குடித்து உவகையுடன் வெளிப்படுத்தும் போது
இயல்பாக நாமும் அவருடன் இணைந்து கொள்ளுகிறோம்.
குடிக்கு
அடிமையானதால் வாய்ப்பிழந்த இசைக்கலைஞனின் கையறுநிலையை, போதையின் ஈர்ப்பில் 'தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக் குட்டி' யாக மதிகெட்டு அவன் சிறுமைப்பட்டுப் போவதை 'சிந்து பைரவி'(1985) யில் சிவகுமார் வாழ்ந்து காட்டியபோது அந்த உண்மைக் கலைஞனுக்காக
அனுதாபப்பட்டு நாமும் கண்கலங்கியிருப்போம். கேட்டுக் கேள்வியில்லாமல்
எதையும் 'கப்'பெனப் பிடித்து கொள்வதில்
தமிழ்த் திரையுலகினர் கெட்டிக்காரர். குடித்தால்
கட்டாயம் விக்கல் வரும் என்று அவர்களுக்கு எந்த விசரன் சொல்லிவைத்தானோ தெரியாது. நாயகனோ நாயகியோ வில்லனோ வில்லியோ குடித்துவிட்டுப்
பாடுவதாக வந்த ஆரம்பகாலப் பாடல்களில் எல்லாம் பாவம் பின்னணிப் பாடகர்களும்
விக்கித் தவித்தார்கள்.
1955ஐத் தமிழ்த் திரையில் விக்கல் பிறந்த வருடம் எனச் சொல்லலாம். 'உன்னைக் கண் தேடுதே' என ' க.க.க.தெய்வத்தில்' (க.க.க… என்பது நான்
விக்கித் தொலைத்த விக்கல் ஒலியல்ல: - அது 'கணவனே கண் கண்ட'வின்
சுருக்கம்!.) பி.சுசீலா விக்கினார். சொல்லப்போனால் அந்த விக்கலுக்குப் பின் தான்
அவர் வெளிச்சத்துக்கு வந்தார். மீண்டும் 'அனார்க்கலி' அஞ்சலிதேவிக்காக 'நானும் குடித்தேன் எனப்பாடி விக்கினார். அதே 55இல் 'குலேபகாவலி' ராஜசுலோசனாவுக்காக
கே.ஜமுனாராணியும் 'ஆசையும் என் நேசமும் ரத்த
பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா' எனத் தன் பங்குக்கு விக்கி விழுங்கினார்..
பாவம் சுசீலாம்மா.55இல் ஆரம்பித்த
அவரது விக்கல் 61வரை தொடர்ந்தது 'உருண்டோடும் வாழ்வில் கரைந்தோடும் நாளில் ஒளி வேண்டுமா?' ('புனர்ஜென்மம்') எனப் பத்மினிக்காகவும் விக்கல்
வழங்கினார். இதன் மூலம் அறியப்படும்
உண்மை என்ன வென்றால், தமிழ் நாட்டுப் பெண்களும்
குடிப்பார்கள்; குடித்துப்பின்
விக்குவார்கள். ஆனாலும் பெண்கள்தான் விக்கினார்கள் என்றில்லை.
'மந்தமாருதம் தவழும்' எனும் அற்புதமான
சிருங்கார ரசப் பாடலில் (படம் - நானே ராஜா-1956) சிவாஜிக்காக விக்கிய TMS ஏழாண்டுகள்
காத்திருப்பின் பின்தான் MGR க்காக விக்கும்
வாய்ப்புக் கிடைத்தது. .'ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு' (மெல்லிசை மன்னர்களின்
புண்ணியத்தில் –பணத்தோட்டத்தில்-1963) பி.சுசீலாவும் அவருடன்
இணைந்து சரோஜாதேவிக்காக விக்கினார்.
'தைரியமாகச் சொல் நீ
மனிதன் தானா?' (ஒளி விளக்கு - 1968) எனும் மனசாட்சியின் கேள்விக்குப் பயந்து பொதுவாக MGR குடிக்கும்
காட்சிகளில் நடிப்பதைத்
தவிர்த்து விடுவார். ஆனால் 'சிலர் குடிப்பது
போலே நடிப்பார்'.(சங்கே முழங்கு -1972). வில்லன் மனோகர், கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் காரம் என்பது போல Anti -Hero வாக நடித்த படம் 'வண்ணக்கிளி'(1960) 'அடிக்கிற கைதான் அணைக்கும்' குடிகாரர்களின்
பெண்டாட்டிமாருக்கு இதமளித்த பாடலோ என்னவோ தெரியாது, அந்நாளில் வானலைகளில் அடிக்கடி வலம் வந்தது. 'அறம் பொருள் இன்பம் மூன்று' என் வள்ளுவரின் புகழ் பாடிய கம்பீரக் குரலோன் திருச்சி லோகநாதனும் குடிபோதையில் மறக்காமல் விக்கினார். (அவர் மறந்திருந்தாலும் சேர்ந்து பாடிய சுசீலா ஞாபகப் படுத்தியிருப்பார்.அனுபவசாலியல்லவா !) ஜெமினிக்கு குடிகார நடிப்பு அவ்வளவாக ஒத்து
வருவதில்லை. அதற்கிசைவாக அவருக்குக் குரல் கொடுத்த AM .ராஜாவும் அடக்கியே
வாசித்திருப்பார்.(வாசித்தாரா பாடினாரா?)'மைனர் லைப்பு ரொம்ப ஜாலி'யும் (இல்லறமே நல்லறம்-1958) 'அருகில் வந்தாள் உருகி
நின்றாள்'ளும் (களத்தூர்
கண்ணம்மா-1960) ராஜாவின் குரலில் ரம்மியமாக ரீங்கரித்தவை .'அழகின் காலடியில்' (சிநேகிதி'-1970) என்று TMS இன் குரலிலும் ஒரு போதைப்
பாடல் பின்னாளில் ஜெமினிக்காகப் பவனி
வந்ததுண்டு
ராஜாவைப் போலத்தான் P.B .ஸ்ரீனிவாசும் குடிகாரப்
பாடலையும் குளிர்ச்சியாகவே பாடிவிடுவார். ஒருதலைக் காதல் தோல்வியால் குடிகாரனாக
மாறும்

வில்லன் அசோகனுக்காக ' மணப்பந்தல் 'இல் (1961) அவரிசைத்த சோகராகம் 'உடலுக்கு உயிர் காவல்'. ' அது ' உள்ளே போனால் சிலருக்கு ஞானம் பிறப்பதுண்டு. தத்துவ முத்துக்களாகச் சிந்துவர். கவியரசரின் அனுபவம் பேசிய காலமது.
வில்லன் அசோகனுக்காக ' மணப்பந்தல் 'இல் (1961) அவரிசைத்த சோகராகம் 'உடலுக்கு உயிர் காவல்'. ' அது ' உள்ளே போனால் சிலருக்கு ஞானம் பிறப்பதுண்டு. தத்துவ முத்துக்களாகச் சிந்துவர். கவியரசரின் அனுபவம் பேசிய காலமது.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு 'என்று உமர் கையாமை
வழிமொழிஞ்சு வாழ்ந்து(?) காட்டினவர் கண்ணதாசன்.
கண்ணதாசன் திரையுலகில் காலடி வைத்த போது உச்சத்தில் இருந்த கவிஞர் கம்பதாசன். 'மோஹமுத்தம் தருவாள்
மலர்க்கொடியாள்' (ஆன்-1952) எனும் கவித்துவ
வரிகளை-கண்ணதாசனின் 'செந்தமிழ் தேன்
மொழியாளுக்கு ஆதர்சமாக இருந்த அந்தப் பாடலைப்- புனைந்த கம்பதாசன் காணாமல் போனது
குடியினால்.
கண்ணதாசனுடன் கூட்டுச் சேர்ந்து 'கவலை இல்லாத மனிதன்' எனத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டவர் சகலகலா
விற்பன்னர் சந்திரபாபு. அவரது இளமைக்கால நண்பரின் மனைவியும் அவரது 'தட்டுங்கள் திறக்கப்படும்' திரைப்பட
நாயகியுமானவர் நடிகையர்
திலகம்
சாவித்திரி. .கலையெனும் பொற் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒன்றிணைந்த இவர்கள் மூவருமே குடி எனும்
அரக்கனின் மாய வலையிற் சிக்கி தமதின்னுயிரை மாய்த்துக் கொண்டவர்கள்.
.
விஷயம்
என்னெண்டால் மிதக் குடிகாரரா இருக்க
எல்லாராலயும் ஏலுதில்லை.மொடாக் குடிகாரரா மாறி போறவை தான் கனபேர்.கொஞ்சமாப்
பாவிச்சால் கனகாலம் நிண்டு பிடிக்கலாம். அலட்டல் கூடிப் போச்சுதோ? தாங்கேலாமல் கிடக்குதோ?மருந்து போல இப்பன் அடியுங்கோ.
எல்லாம் சரிவரும். பிறகென்ன முற்றுப்புள்ளி போட வேண்டியதுதான். ஆறுதலாச்
சந்திப்பம். மறக்காமல் வாங்கோ. வந்ததுக்கு நன்றி.

No comments:
Post a Comment