Friday, 29 January 2016

 குடி மக்கள் காப்பியம்......




Image result for toddy tapping sri lanka குடி மக்கள் காப்பியம் குடிமக்கள் காப்பியம் எண்டொரு புஸ்தகம், நான் எட்டாம் வகுப்பில -அந்தக் காலத்தில அது JSC (ஜே.எஸ்.சீ.)- படிக்கேக்கை துணைப்பாட நூலா இருந்தது. சிலப்பதிகாரத்துக்கு அப்பிடியும் ஒரு பேர். பாண்டியன் நெடுஞ்செழியன், " கோவலனைக் கொண்டு வா", எண்டு சொன்னது "கொன்று வா"எண்டு கேட்டுப் போட்டுதாம் எண்டும் ஒரு கதை. மனிசன் அந்த நேரம் தண்ணியக் கிண்ணியப் போட்டிட்டுதோ தெரியேல்லை. எங்கிட அந்தக் காலத் தமிழ் ராசாமார் மதுவில குளிச்சுமங்கையரோட (அல்லது மங்கையரால) பிரண்ட கதையள் கனக்கஇருக்குது. பழைய தமிழ் இலக்கியங்களைப் புளிஞ்சால் நீங்களும் 'ரேஸ்ற்' பாக்கலாம். கேட்டுப் போட்டுதாம் எண்டும் ஒரு கதை.





கம்பராமாயணத்தில இலங்கைக்கு மேலால அனுமன் பறக்கேக்க, மக்கள்
எல்லாம் தண்ணியப் போட்டிட்டு 'ஜொலியா' ஆடிப் பாடிக்கொண்டிருந்ததை
'ஏரியல் வியூவில' பாத்து 'ரன்னிங் கொமன்றி' குடுத்த கம்பர் -
'ஆடுனர் பாடுனர் ஆகிக் களிக்கிறாரன்றிக் கவல்கிறார் யாருமிலர்..' எண்ட மாதிரி வாற ஒரு பாட்டில எடுத்து விடுவேர். இப்ப அது கொஞ்சம்
மறந்தது போச்சுது. ஞாபகம் இருக்கிறவை மீட்டுப் பாக்கலாம்.
குடம் குடமாக் கும்பகர்ணன் கள்ளு மண்டினதையும்
பின்னால யுத்த காண்டத்தில எழுதியிருக்கிற விறுத்தத்தைப்
பாக்கேக்க கம்பரும் சாடையாத் 'தட்டி'ப் போட்டுத்தான் தாளிச்சிருக்கிற
மாதிரிக் கிடக்கு.

ஈழம் எண்டால் கள்ளெண்டொரு 'மீனிங்'கும் இருக்குது
அகராதியில. எங்கிட தேசிய பானம் எண்டு சொன்னால் அது கள்ளுத்தான்.

கள் தோன்றிக் கசிப்புத் தோன்றாத காலத்துக்கு முன் தோன்றின மூத்த பழங்குடி மக்கள் நாங்கள்.'கள்ளெல்லாம்  கூவில் பனங் கள்ளாகுமா' எண்டு களிவெறீல கூவின சாதி நாங்கள்.
நற்றிணையை கொஞ்சம் நோண்டிப் பாத்தால் 'இரும்பனம் தீம்பிழி உண்போர் மகிழும் ஆர்கலி' எண்டு கள்ளடிக்கிறவை ' சுதீல' போடிற சத்தம் கேக்கும்.

       பனங் கள்ளுக்கு பனங் கிழங்குதான் 'side dish '. தென்னங் கள்ளுக்கு மரவள்ளிக்கிழங்கு. பனங் கள்ளுப் பத்துச் சதம் வித்த 50-60களில,கள்ளோட இலவச இணைப்பா பனங்கிழங்கும் கிடைக்குமாம்.தீவுப் பக்கத்தில கொட்டில்வழிய சுருட்டு. நெடுந் தீவுப் பக்கம் போனியல் எண்டால் அங்க குடிக்க நல்ல தண்ணி கிடைக்காது.கள்ளுத்தண்ணி தாராளமாக்
கிடைக்கும். நிறைதண்ணியில - நல்ல ' சுப்பா'ல, கண்டபாட்டுக்குக் கொண்டை முடியிறனாக் குமெண்டு சமுசயப் படுறியளோ? ' புலுடா' இல்லை. உண்ணாணை உண்மையாத்தான்.
      

  கள்ளுக்கும் கூழுக்கும் நல்லா வழிபோகும். கூழெண்டால் எங்கிட நவாலியூரார் பாடின பனங் கட்டிக் கூழ்ல்லை .நண்டு, கணவாய், றாலெண்டு கலக்கிற அசைவக் கூழ்.
இந்தக் கூழ்ப் party  வைக்கிறதில யாழ்ப்பாண வேதக்காரர் தான் 'famous . அவயள அடிக்க ஆளில்லை. சில கள்ளுக் கொட்டில்வழிய கூழும்  கிடைக்கும். ஆனால் அதுக்குஎக்ஸ்ட்ராவாப்  pay பண்ணவேணும்.
      ' கள்ளுக்குக் கதை  தோழன்எண்டுவினம். கதையோட கதையா அளவு கணக்குத்தெரியாம உள்ளுக்க இறக்கிப்  போட்டு தாங்களும் உத்தரியப்பட்டு, மற்றவைக்கும்உபத்திரவம் குடுக்கிற சிலபேரையும்    தங்கிட பாட்டுத் திறத்தைக் காட்டவெளிக்கிட்டு பாடினவனின்ர  பேரை 'றிப்பேராக்கிற’ 'கத்துவான்கள்'    சிலபேரையும்   கள்ளுக்கொட்டில்வழிய  அடிக்கடி சந்திக்கலாம்.             '                       கள்ளுக் கொள்ளாத வயிறுமில்லை, கோள் சொல்லாத வாயுமில்லை'      யாம்.சில ஆக்கள் ஆறேழு போத்தில் எண்டு மண்டிப்போட்டும்  'கிறுங்காமல்' இருப்பினம்.ஒண்டு பாதியிலேயே 'நொக்கவுட்' ஆகிறவையும் இருக்கினம்.
   
   கள்ளில வாய் நனைக்கத் துவங்கிற இளவட்டங்கள்  முதலில தேடுறது இனிப்புக்கள்ளைத்தான்.  இதையறிஞ்சு கள்ளுக்க  சீனியக் கலந்து விக்கிற சீவல்காறரும்இருக்கினம். கள்ளில இருக்கிற வில்லங்கம் வேற ஒண்டுமில்லை. கொஞ்ச நாளிலேயே'செல்ல வண்டி' ஒண்டு வைச்சுப்போடும். போதாக் குறைக்கு சலம் சலமா ஒண்டுக்குப்போகும். அதிலபிரச்சினை  ஒண்டுமில்லை. ஆற்றயும் வீட்டு வேலிக் கதியால்களுக்கு ' நீர் பாய்ச்ச'ப்போய்  (அந்த  வீட்டில குமர்ப் பெட்டைகள் ஆரும் இருக்கிற தறுவாயில)வேண்டிக் கட்ட  வேண்டி  வாறதைத் தவிர.
     ஒரு பனைக் கள்ளெண்டால் உத்தமம் எண்டு தேடித் திரிஞ்சு பனைக்குக்    கீழயே 'அணிலேறவிட்ட நாயைப் போல' அண்ணாந்து பாத்தபடி நிண்டு            ' பொச்சம்' தீர்க்கிறவையளும் இருக்கினம். பொக்களிப்பான் போல சில சூட்டு வருத்தங்களுக்குச் சொல்லப்பட்ட சாமான் எண்டு பரியாரிமாரால பரிந்துரை செய்யப்படுற சிறப்பும் பனங்கள்ளுக்கு  இருக்கு.
      
 சிலநேரங்களில 'சாதுவா வயித்தை  இளக்கிறதும்கள்ளின்ர side effect ருகளில ஒண்டுதான். ஆனாலும் பெரிசா விக்கினமா ஒண்டும் செய்து போடாது. கூவில் கள்ளெண்டால்  கொஞ்சம் விசேஷம்தான். ஒண்டடிச்சாலே காணும். விண்  கூவும்.அந்தக் காலத்தில அதைக் குடிக்கக் குடுத்து வச்சவை இப்பவும் பழைய  நினைப்பிலவாயைப் பொச்சுக் கொட்டிக் கொண்டு, 'மலரும் நினைவுகளில' மூழ்கிப் போய்-அந்தப் பொற்காலம் திரும்பி 'வரவே வராதா மகிழ்வே தராதாஎண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டும்   இருக்கலாம்-வெளிநாடுகளில.
பனங்கள்ளை விடத்  தென்னங் கள்ளு கொஞ்சம் 'மஸ்த்' தானது.  கொஞ்சம் உசாரா வேலைசெய்யும். 'சூர்' ஏறிச்சுதெண்டால் சண்டித் தனத்திலையும் கொண்டுபோய் இழுத்துவிட்டிடும். தென்னங் கள்ளும் இறக்கின கையோட குடிக்க நல்ல இனிப்பாத்தான் இருக்கும். ஆனாலும் அதுக்கு வாதக் குணமிருக்கு. கொஞ்சம் காத்துப்படப் பதமாகவிட்டு ஒரு அஞ்சாறு மணி நேரம் கழிச்சுத்தான் குடிக்க வேணும்.

பழங் கள்ளுக்குச் 'சேட்டை'குணம் கொஞ்சம் கூட.  ரெண்டு மூண்டு நாள் கிடந்து
அறப் பழசாப் போன கள்ளைத் தேடிக் குடிக்கிற சில ஆக்களும் இருக்கினம்.
ஆனால் அதை வாயில வைக்கேலாது. பச்சைப் புளி. கஷ்டப்பட்டு உள்ளை இறக்கிப்போட்டால் சொர்க்கம்தான் எண்டு செப்புவினம். அவயளிட சொர்க்கம் மற்றவயளுக்கு-குறிப்பா மனிசி பிள்ளையளுக்கு -  நரகமாப் போறதுமுண்டு.
    
 அஞ்சாறு  நாளுக்கு வச்சால் தென்னங் கள்ளு வின்னாரியா (வினாகிரியா ) மாறிப்போயிடுமெண்டு தெரியும்தானே? அந்த ஆசிட்டைக் குடிச்சால் அவ்வளவுதான். மூளையப் 'பிசக்கி' விட்டிடும்.
            குடிச்சாப் பிறகு, மனசில வாற துக்கமோ சந்தோசமோ, துணிச்சலோ  தயாளமோ- அவையவை குடிக்கிற  சரக்கைப் பொறுத்தும், அதின்ர அளவைப் பொறுத்தும், குடிக்கிறவேன்ர இயல்பைப் பொறுத்தும் வித்தியாசப்படும்.  என்னைப்போல 'எக்ஸ்பீரியன்ஸ்'ஸான கட்டையளிட்டக்   கேட்டுப்பாருங்கோ  வழிமொழிவினம்.

'குடி-குடிகெடுக்கும் '-எண்ட வாய்ப்பாட்டை பொத்தாம் பொதுவாச் சொல்லிக் கொண்டிருக்கிற ஆரும் அதின்ர உண்மை பொய்யை ஆழமா ஆராஞ்சு பாக்க மினக்கெடுறதில்லை. குடிக்கிறவை எல்லாருமே கொழுவல்காறருமில்லை, குழப்பங் காய்ச்சியளும் இல்லை.  குடியால கெட்டழிஞ்ச குடும்பங்களும்  கனக்கத்தான். ஆனாலும் நல்ல குடிமக்களாசிலபேர்  இருக்கினம் எண்டதையும்  ஏற்றுக் கொள்ளத்தானே வேணும்.
              
  'உசார்' ஏறீற்றால் இயல்பில கோழையளா இருக்கிற சில ஆக்கள்    வீரவான்களாமாறீருவினம். வீட்டில உள்ள கதிரை மேசை சட்டி பானையளில  எல்லாம் தங்கிடவீரத்தைக் காட்டி ஒரு கலக்குக் கலக்குவினம்.
பெண்சாதி பிள்ளயள் எல்லாம்  பீச்சல் பயத்தில மூலைக்கு  மூலை  பதுங்கிப்
போயிருப்பினம். விடிஞ்சால்  ' நானே நானா ஆரோ தானா' எண்டு ஒண்டுந் தெரியாதபச்சைப் பிள்ளைமாதிரி  'ஆக்டிங்' குடுப்பினம். மனிசி பழஞ் சீலைகிழியுமாப்போலபுறுபுறுக்கதலயக் குனிஞ்சபடி  'நித்தியானந்த  சாமியாராஅவதாரமெடுப்பினம்.பொழுதுபட  வேதாளம் பழையபடி       முருக்கை மரம் ஏறும்.
குடும்பத்தாலும் சமூகத்தாலும் கோழையாக்கப் பட்டுவிட்ட ஒரு மனிசன்ர மனசுக்குள்ள உறைஞ்சிருக்கிற விடுதலை உணர்வுக்கு வடிகாலா அந்தக் குடிஅமையலாம்எண்ட தாற்பரியம்  ஒரு மனோதத்துவ வைத்தியருக்கு  விளங்கலாம். மனிசிமாருக்குவிளங்குமோ?

             வேற சில ஆக்கள் இதுக்கு நேர்மாறு. 'கிக்' ஏறீற்றுதெண்டால்             ஆக்களைப் புடிக்கேலாது.  வழக்கமா வீட்டில கடுவன் பூனையாட்டம் கடுகடெண்டிருக்கிறவை வடிவேலின்ர வாரிசுகளா மாறீருவினம். பிள்ளையளத்  தூக்கிக் கொஞ்சிறதென்ன கூத்தாடிறதென்ன,எட்டுக் கட்டைச் சுருதியில கிட்டப்பாவைத் தொட்டுப் பாக்கப் போறனெண்டு பாடிப்  பயப்பிடித்திறதென்ன - பரவசப்படுறதென்ன, ஒரே முசுப்பாத்திதான். அப்பிடி ஆள் 'அச்சா' பிள்ளையா  இருந்தும் அண்டைஅயல் பாத்துச் சிரிக்கப் போகுது 'கிரிசை கேடு'   எண்டு பயந்து சாகிற மனிசிமாரை என்ன சொல்றது?
      
             'சுழி'யை உங்களுக்குத் தெரிஞ்சிராது. அல்பிரட் துரையப்பா இருந்த விதானையார்ஒழுங்கையில போய்க் கேட்டால் இப்பவும் தெரிஞ்சவை ஆரும் இருக்கக் கூடும்.குடிச்ச கள்ளையும், தவண்ட கொட்டில்களையும் மறக்கேலாமல்
வெளிநாடும் வேணாம் வெங்காயமும் வேணாம், எண்டு போன சுறுக்கோட,         வீசின கையும் வெறுங் கையுமா France இல கால்பதிச்சிட்டுத் திரும்பி வந்த     வெற்றிக் குடிமகன் அவர். இப்ப ஆளில்லை.                                                  அந்தக்காலத்தில சுழிக்கு  கூட்டாளிமார்  வட்டத்தில ஒரு தனி 'மவுசு'.              கூட் டாளிமாரெல்லாம் சுழியைக்  கூட்டியண்டுபோய்த் தங்கிட காசில (கள்ளில) குளிப்பாட்டுவினம். காரணம்-  ஆள் நல்ல கதைகாறன்.  'கொமடிபீஸ்' கள் அறிமுகம் ஆகாத அந்தக்காலத்திலவடிவேலு, விவேக், சந்தானம் எல்லாம் 'சுழி' தான்.
  
  ' சாராயத்தைக் குடுத்துப் பூராயத்தைக் கேள்' என்னுமாப் போல சிலஆக்களை மடக்கிறதுக்கு  'குடி' வசதியான ஒரு 'ஊடகம்'.  தண்ணியப் போட்டாப் பிறகு தடுமாற்றமில்லாமல், கொஞ்சம்  துணிச்சலா,ஈசியா உறவாடலாம்-உரையா டலாம் -ஊசாடலாம். கேக்கிறதைக்கேட்டு,குடுக்கிறதைக் குடுத்து விஷயத்தை வெல்லலாம்.
   
            கூத்ததாடிறவை, நடிக்கிறவை, ஆடிறவை, பாடிறவை எண்டு கலைத் துறையில இருக்கிறவையளைக்  குளிரப் பண்ணவும், குப்புற விழுத்தாட்டவும் உத்தமமமான சாமான் இந்தக்குடிதான். பெரும்பாலான கலைஞர்களின்ர  'வீக்பொயின்ற் ' எண்டால் அது மதுதான். குடியைத்   தொட்டவனை அது விட்டதில்லை; இறுகக் கட்டிப் பிடிச்சுக் கொண்டிடுது எண்டது தான் அதில இருக்கிற பெரிய 'மைனஸ் பொயின்ற்'.   அதை எட்டவச்சுக்குஅடிமையாகாமல், அளவோடை பாவிக்கத் தெரிஞ்சவை வலு குறைவு. நீங்கள்அந்தக்'கற்றகறி'(category ) ஆளெண்டால் தாராளமாக் குடிக்கலாம்.   company தர நான் ரெடி.

                                                                    ( குடிகாரக் கூத்துத் தொடரும்..Cheers )






குடிமக்கள்      காப்பியம் -2        
 குடியும் குடிசார் எழுத்தும்
 [ ஒரு முற் குறிப்பு  'நீயா நானா?' கோபிநாத் இதுவரை, குடிகாரர் Vs குடியாதோர் -என்ற
subject இல் programme  நடத்தியதாகத்  தெரியவில்லை. இத்தொடர்  வெளியான பின்னர்
இத்தலைப்பை அவர் எடுப்பாராக இருந்தால், அதற்காகக் காப்புரிமை (royalty]  கேட்டு
அவரது கோட்டைப் பிடித்து நான் உலுக்கப் போவதில்லை, என்று பணிவன்புடன்  தெரி
வித்துக் கொள்கிறேன்.]
                                பெரும்பாலான கலைஞர்களின் பலமும் பலவீனமும் குடிதான்.
தண்ணியப் போட்டாத்தான் சில ஆக்களுக்கு எழுத  வரும். ஆனாலும் தாங்கள் குடிச்
சாலும்  குடியப் பற்றி சிலாகிச்சு எழுதக்  கன பேருக்குப் பயம்.  தங்களச் சுத்தவாளியாக்
காட்டிக் கொள்ளத்தான் அவயள் விரும்புகினம்.
                       அருந்தலா ஒருசில பேர்தான் குடியப்பற்றி விளப்பமா எழுதத் துணிஞ்சவை.
அப்பிடி வெக்கப்படாமல் தன்னைப்பற்றியும் குடியப்பற்றியும் துணிஞ்சு எழுதிற ஒராள்
எங்கிட எஸ்.பொ.  80களுக்கு முந்தி 'யாழ்தேவி' ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில,             கொழும்பில வேலை பாக்கிற 'கவுண்மன்ற் சேவன்ற்' வேலைகாரர்,  ' வீக் எண்டில'   தங்கிடமனிசிமார் பிள்ளயளப் பாக்கப்போற சாட்டில, ஊருக்குப்  போய்கள்ளடிச்சுக்  களிக்கிற/கலக்கிற  சடங்கை, தன்ர 'சடங்கு' நாவலில       சாங்கோபாங்கமாஎழுதியிருக்கிறேர். வாசிக்கிறவைக்கு வாயூறும்.
தமிழ் நாட்டில் கள்ளுச் சீவி விக்கேலாது. பதநீர்தான் விக்கலாம். [நாங்கள் அதைக்
கருப்பணி எண்டுவம்.] அதால கள்ளு விக்கிறதெண்டால் கள்ளமாத்தான் விக்கவேணும்.
தமிழகத்தில் நாடார்களும் ஈழத்தில் நளவர்களும் கள்ளிறக்கும் தொழிலைத் தமது
சீவனோபாயமாகக் கொண்டிருந்த காலம்  ஒன்றிருந்தது.  நாடார்களின் வாழ்வை
மேலாண்மை பொன்னுச்சாமியும் நளவர்களின் வாழ்வைத் தெணியானும் குறிப்பிடத்
தக்கவாறு எழுத்தில் வடித்துள்ளார்கள்.
                     சீவல் தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை மிக யதார்த்தமாகச்
சித்தரித்த முதல் நாவல் செ. கணேசலிங்கத்தின் 'நீண்ட பயணம்' ஆகத்தான் இருக்க
வேண்டும்.சொல்லப் போனால் அத்தகைய ஒரு நாவலை எஸ்.பொ.தான் எழுதி
இருக்க வேண்டும்.
முன்னொரு  காலத்தில், பனங் கள்ளும் பிளாவும் போல, கருணாநிதியும் கண்ணதாசனும்
போல எஸ்.பொ.வும் டொமினிக் ஜீவாவும் ஒட்டா  இருந்ததும், இவருக்கு அவர் கதை எழுதத்
தோன்றாத் துணையாக உதவி புரிந்தததும்,   ' பாதுகை' என்ற தலைப்பில் மரமேறிகளின் 
தளை நாரைத் தொனிப்  பொருளாகக்  கொண்டு ஜீவா சிறுகதை எழுதியதும், அது சம்பந்த
மாக சில சர்ச்சைகள் எழுந்தததும் -பழங்கள்ளுப் போல புளிச்சுப் போன சங்கதிகள்.
இயனக்கூடும், ஏறுபட்டியும், தளை நாரும், சீவல் கத்தியும், சுரைக் குடுவையும், கள்ளு
முட்டியும் சீவல் தொழிலாளிகளின் வாழ்வோடு ஒன்றிவிட்ட சில பொருட் பதங்கள்.
                             தமிழக எழுத்தாளர்  சா.கந்தசாமி  தமது 'வாள்' என்ற சிறுகதையில்
மரமரியும் பக்கிரி எனும் ஒரு கிழவரின் கள்ளுக்குடியை, ஆட்டமும் பாட்டுமாக அதை
அனுபவித்து  அவர் குடிக்கும் நேர்த்தியை  மிக இயல்பாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்.                                                               
                                                              'கள்ளின் மேலிருந்த பன்னாடையைக கவனத்தோடு                    எடுத்து உதறி ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு, கள் சட்டியைத் தூக்கிக் கண்களின்   அருகேகொண்டுவந்து பார்த்தார். ஈயா பெரும் எறும்பா என்று தீர்மானிக்க                   முடியாத நிலையில் என்னமோ மித்தப்பது தெரிகிறது. பன்னாடையை எடுத்து        இரண்டாகமடித்துக கள்ளினுள் அமிழ்த்தி ஒட்டி மேலே தூக்கினார். பன்னாடை      தூசிகளையும் பூச்சிகளையும் அரித்துக் கொண்டு வந்தது'.
      "பூச்சி பொட்டெல்லாம் கள்ளை ஒண்ணும் பண்ணாது"
  என அவர் உயிர்ப்புடன் விபரிக்கும்போது அப்பாத்திரத்துடனும்  அச் சூழலுடனும்                  நாமும்ஒன்றித்து விடுகிறோம்.
   'குறத்தி முடுக்கு', 'நாளை மற்றொரு நாளே' முதலான  நாவல்களைப் புனைந்த
புரட்சிகர எழுத்தாளர் ஜீ.நாகராஜன், குடிகாரர்களின்  வாழ்க்கைப்  பின்னணியை
யதார்த்தமாகச்  சித்தரிப்பதற்காக  அவர்களில் ஒருவனாகவே மாறி, அவ்விஷப்
பரீட்ஷையில் தன்னையே ஆகுதியாக்கி, தனது வாழ்வை அவமாக்கிக் கொண்டார். அவரது நாவல்களில், குடி பற்றிய புரிதல்களும் குடிகாரர்களின் நிசமான வாழ்வியல்
 தரிசனங்களும் வெளிப்பட்டதாக ஞாபகம்.
                           'பாரீசுக்குப் போ'   நாவலில், ஜெயகாந்தனின் மேட்டுக்குடி நாயகன்
'பியர்' அடிக்கிறதையும் பிறகு போய் ஒண்டுக்கு அடிக்கிறதையும் பற்றி எழுதியதும்
ஞாபகத்தில் நிற்கிறது.      
அதெல்லாம்  பழங்குடிகள்.  குடியைப்பற்றி கிட்டடியில் ஆராவது எழுதித் தொலைத்
திருக்கிறார்களா என்று வலைப்பூக்களில் உலாவி மணந்து பிடித்தால், கேரளத்துக்
காற்று வீசும் தென்தமிழகத்துக் குமரிமுனையில்,  நாஞ்சில் நாடன் அகப்பட்டார்.
பொறாமைப்    படுமளவுக்கு மனிசன் குடியப்பற்றி,  வழிச்சுத் துடைச்சுக் கழுவி ஊத்தி
இருக்குறேர். குடியோடொட்டிய பல விஷயங்களையும்  அலசி ஆராய்ந்து தெளிந்த   தேறலாக வடித்துத் தந்திருக்கிறார்.
                'நஞ்சென்றும் அமுதென்றும்' (4 கட்டுரைகள்)
             'குடியும் குடிசார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்' (கைம்மண்ணளவு-35,37)
              (முழுமையாகப் படிக்க - http :/naanjilnadan .com ஐப் பிடியுங்கள்)
                       2007இல் குடி பற்றிய ஒரு இரண்டு நாட் கருத்தரங்கு தமிழ்நாட்டில்(?)
நடைபெற்றிருக்கிறது. அதில் உரையாற்றிய நாஞ்சில் நாடன் தன்னிலை  விளக்கமாக,
                    முப்பத்தைந்து ஆண்டுகளாகக் குடித்துக் கொண்டிருப்பவன் எனும்                தகுதிஎனக்குண்டு. இதைப் பாவமன்னிப்புக் கோருவதான பாவனையில் கூறுவதாக             நீங்கள்எடுத்துக் கொள்ளக் கூடாது. குடித்ததனால் எந்த ஒரு தீமையும் என்னை வந்து            ஆண்டு கொண்டதாக நான் கருதவில்லை. எதிர்காலத்தில் குடியை விட்டுவிடும் உத்தேசமும்எனக்கில்லை. எனது வசதிக்கும் வாய்ப்புக்கும் நட்பு வட்டத்துக்கும் இணங்கப் பல்வகைமதுவினங்களைத் தேடித்தேடிக் குடித்து, அவற்றின் சுவை வேறுபாட்டை, வாசனை வேறுபாட்டை, போதைத் தன்மையின் வேறுபாட்டை அனுபவிப்பதில் எனக்கு என்றும் ஆர்வம்உண்டு.
              அட!  நம்மைப் போலவே சிந்திக்கும்-நமது அலைவரிசையிலேயே பயணிக்கும் -
மற்றொருவரைக் கண்டறிந்த சந்தோசம் எனக்கு. இந்த 2016இல் அவரது அனுபவ வீச்சு
35+09=44 ஆண்டுகள் என்றால் என்னது பொன்விழாக் கண்டது. அந்த  விதத்தில் நான்
அவருக்கு சீனியர் தான்! ஆனாலும் என்ன - பதிவில் அவர் பல ஆண்டுகள் முந்திக்
கொண்டுவிட்டார்.
            அவர் குடித்துச் சுவைத்த மது வகைகளில் - ஜப்பானில் தயாரிக்கப்பட்ட  அரிசி மது
வான சாக்கே, சீனாவின் மவுத்தாய், கோவாவின் fenni , மற்றும் பிராண்டி, விஸ்கி, vodka ,
bacardi (ரம்), white rum , beer வகைகள், மராத்திய சாராய வகைகள்(சந்த்ரி,மொசம்பி)
என்பனவற்றுடன் ஈச்சங் கள்ளும், ஒரு மரத்துப் பனங்கள்ளும், பதமான தென்னங்கள்ளும்
அடங்குகின்றன.' வைன், ஜின்களை நான் குடியாகக் கொள்வதில்லை '- என்கிறார்.
எந்த அர்த்தத்தில் என்று புரியவில்லை.
             " இவற்றை எல்லாம் சட்டையில் கோத்துக் கொள்கிற பதக்கங்கள் எனக் கருதியோ,
குடிப்பதற்கான ஒரு விருதினை யாசித்தோ, சுய தம்பட்டமாகவோ  இங்கேசொல்லவில்லை.
ஒரு படைப்பாளி நேர்மையுடன் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேணும் எனும் நோக்கம்
காரணமாகச் சொல்கிறேன்".  என அவர் குறிப்பிடும் போது அவருடன் நான் மீண்டும்
கைகோத்துக் கொள்கிறேன்.
அவரது கட்டுரைகளில் இருந்து, அவரது அனுமதியின்றியே சில பகுதிகளை உருவிப்
பருகத் தந்திருக்கிறேன். ஓசிக் குடிதான் உறிஞ்சித்தான் பாருங்களேன்.
           எந்தவகை மதுவிலும் தயாரிப்பு  முறை என ஒன்றுண்டு. திராட்சையில் தயாரானால்
ஒயின், பிராந்தி;. கோதுமை  போன்ற தானியங்களில் தயாரானால்  விஸ்கிஅரிசியில்
தயாரானால் சாக்கே; முந்திரிப் பழத்தில் அல்லது தேங்காய்த் தண்ணீரில் தயாரானால்
பென்னி என்பது போல. இங்கே மொலாசசை மூலப் பொருளாகக் கொண்ட ஸ்ப்ரிட்.
           குடிப்பவர்களில் வகை உண்டு.எப்போதாவது அல்லது அவ்வப்போது பருகுவதை
  ஒரு ரசானுபவமாகச் செய்கிறவர்கள் ஒருவகை. இரண்டாவது, தினமும் குடிக்கும்
  குடிகாரர்கள். மூன்றாவது,  குடிவெறியர்கள் அல்லது குடிநோயாளிகள். பொதுமக்கள்
  பார்வையில் பட்டு, அவர்களைக கவலையும் கோபமும் அடையச் செய்பவர்கள்
  இவர்கள்.
  குடிக்கிறவனுக்கும்  குடிகாரனுக்குமுள்ள வேறுபாடு நிறையப் பேருக்குத தெரிவதில்லை.
  எனது கணிப்பில் பெரும்பாலான  தமிழர்கள் எதைக் குடிக்க வேண்டும், எப்போது குடிக்க
  வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும், யாருடன் குடிக்க
  வேண்டும் என்பதை அறியமாட்டார்கள்.
  குடிப்பதுபற்றிய குற்ற உணர்வு பலருக்கும்  இருக்கிறது. அதனால் அதை மறைக்க
   அவர்கள் படாத பாடு படுகிறார்கள்.
   குடிப்பவர் பலருக்கு அடுத்தவனை விடத் தனக்குக் குடிக்கும் வலு அதிகம் என 
   நிரூபிக்கும் அவஸ்தை இருக்கிறது.
   குடி என்பது அறம் சார்ந்த பிரச்சினையாக இங்கே பார்க்கப்படுகிறது.
   அதை  நான்  ஒரு ஒழுக்கம் சார்ந்ததாகவே பார்க்கிறேன்.                                                                 குடிப்பவனுக்கு போதை என்பது ஒரு சாக்கா, தூண்டுதலா, கிரியா ஊக்கியா?                  சிலர், கண்ணை மூடிக்கொண்டு மூக்கைப் பொத்திக்கொண்டு  மிக்க அருவருப்புடன்
   குடிப்பதே ஒரு தண்டனை போல குடிக்கிறார்கள்.
இவ்வாறாகக் குடியைப்பற்றி மிக நுணுக்கமாகப் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து
அதன் சாதக பாதகங்களைத் தனது கருத்துக்களுடன் முன்வைக்கிறார். 'நல்ல குடிக்கு'
வக்காலத்து வாங்கும் அவர், குடிப்பவகள் சிலரின் அறியாமையால் அல்லது அசட்டை
யால் - குடித்தபின் வாகனமோட்டுவதால்  நிகழும் உயிரிழப்புகள் போல - ஏற்படும்
தீமைகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
     UK இல் இருந்து வெளிவரும் 'ஒரு பேப்பர் 'ருக்காக  'சுகி' என்பவர் எழுதியிருக்கும்              குடிபற்றிய கட்டுரையும் சுவாரஸ்யமானது. அதிலிருந்து-
                   வெளிநாடுகளில் குடிவகைகள் தாராளம். அதுவும் சாராயம் போன்று
மணமோ, அதைக் குடிக்கும் போது முகத்தைச் சுழித்துக் கொண்டு  கசப்பு மருந்து
குடிப்பது போலக் குடிக்க வேண்டியதோ இல்லை.
     இங்கு அதிகமாக ஆசியப் பெண்களால் நுகரப்படும் cocktails , அனேகமாக
இரண்டு - சிலநேரம் மூன்று மதுவகைகளால் கலக்கப்பட்டவையாக இருக்கும்.
        அதே நேரம் Non -alcohol  cocktails - அதே மாதிரியான  சின்னக்குடை அல்லது
பழத்துண்டு  கொழுவி பார்க்க மிக அழகான பானமாக இருக்கும். எம்பெண்கள் மது
வகைகள் கலந்த cocktails இல் தொடங்கிப் பின் vodka போன்ற alcohol  விகிதம் கூடியதைக்
கலக்காமல் குடிக்குமளவுக்கு  மாறி விடுகிறார்கள்.
                                         நிலை தடுமாறும் அளவுக்குக் குடிப்பதும், மறுநாள் தலையிடி
என்று படுப்பதும், அதிக கட்டுப்பாடில்லாத  நண்பர்கள் வீட்டில் இரவு தங்குவதும்
சாதாரணமாகிவிட்டது   கட்டுப்பாடு, வெறுமை, சூழ் நிலை , நண்பர்களின் வட்டாரம்
போன்றன மதுவகைக்கான  ஊக்குவிப்புகளாகக் காணப்படுகின்றன.
        Alcohol counselling  பற்றியும் Medical Record இல் தமது மதுபாவனை பற்றிய குறிப்பு
வந்துவிடக் கூடாதே என்கிற (பெண்களின்) பயம் பற்றியும் கூட ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
                                        கூகுளில் தட்டிப் பார்த்தபோது இன்றைய இளைய தலைமுறை
எழுத்தாளரான காக்கி பவா என்பவரின் வலைத்தளம் தற்செயலாகக் கண்ணிற் பட்டது.
தான் அடித்ததை (காப்பியல்ல-Drink தான்) மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்போமே
என்ற நன் நோக்குடன்   37புட்டிக் கதைகளை(இதுவரை)   அவர் பந்தியிற் பரிமாறி                                                                                                                      யிருக்கிறார். ருசிக்க விரும்புபவர்கள்  iamkarki .blogspot .co .uk  இல் சென்று கார்க்கிபவா
வின்   'சாளரம்' இல் நுழைந்து உறிஞ்சி மகிழலாம்.
             'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' என்ற தலைப்பில், குடிமக்களுக்கு அவர் வழங்கியுள்ள
டிடிடிடி&டி -அருளுரையும் நோக்கற்பாலது. எந்தச் சரக்கை வாங்குவது?(Drink ) எதை
'மிக்ஸ் ' பண்ணுவது?(Dilution ) எவ்வளவு நேரம் குடிப்பது? (Duration ) குடித்த பின் என்ன
உண்பது?(Dinner ) என்பன போன்ற் பயனுள்ள (?) தகவல்களுடன், குடித்தபின் செய்யக்
கூடாத D என Driving ஐயும் சேர்த்துப் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார் நாற்கு'டி'
மகனார்.
                                   'சாரு நிவேதிதா' ஒரு நல்ல (குடிகார) எழுத்தாளர். பொய் புனைசுருட்டு
என்று கலக்காமல் 'Raw 'வாகவே தனது குடி பற்றி எழுதிக் களிப்பவர்.
'மரத்திலிருந்து இறக்கியவுடன் நுரையோடு அந்தக் கள்ளைப் பார்க்கும் போது பூமி
தரும் தாய்ப்பால் என்று தோன்றும்.' எனப் புளகித்துக் கள்ளைக் கொண்டாடிய போதிலும்,
தமிழ் நாட்டில் தடை செய்யப் பட்ட பானம் என்பதால், அதில் அலாதி மோகம் இருந்தும்,
கள்ளோடு நெடுகிலும் உறவாட அவரால் கூடவில்லைப் போலும்.
                     தமிழகத்துப் பெரும்பாலான மேட்டுக்குடி 'மைனர்'களைப் போலவே, அந்நிய
ம(மா)துக்களின் பிடியிலேயே தன்னை மறந்து மயங்கி மாந்தும் அவர்தானெழுதிய
ஏதோ ஒரு நாவலில், பிரான்சில் அவர் குடித்துச் சுவைத்த மதுரசம் பற்றி இப்படி எழுது
கிறார்.
'போத்தலில் அனிஸ் (anis ) என்று எழுதப்பட்டிருந்த்தது. அனிஸ் பெருஞ்சீரகத்தில்
இருந்து தயாரிக்கப்படுகிறது என்றார் நண்பர். அப்போது உலகத்தின் மூலை
முடுக்கெல்லாம் சென்று விதவிதமான மதுபான வகைகளை அருந்திப் பார்க்க
வேண்டும் என்று தோன்றியது.
அனிசின் சுவை அவ்வளவு வித்தியாசமாகவும் ரம்மியமாகவும் இருந்தது.
அதைக் கிளாசில் ஊற்றித் தண்ணீரைக் கலந்ததும், நல்ல பசுஞ் சாணத்தை எரித்துச்
செய்த விபூதி நிறத்தில் மாறியது. (இந்த உவமையைப்  படிக்கும் போது 'கள்ளுக்
கடைக்குப் போன பக்தனும்,காலட்ஷேபம் கேட்கப்போன குடிகாரனும்' பற்றிய
ஒரு கதைதான் ஏனோ ஞாபகம் வருகிறது!)
             Old  Monk (Rum  )இல் நிரம்பவும் கலப்படம் உண்டு. அதைக் குடித்துவிட்டு வரும்
போதுமட்டும் மனைவி, "இன்று என்ன சரக்குச் சாப்பிட்டாய்?"  என்று கேட்பாள்.
அப்படிப்பட்ட பொல்லாத சரக்கு அது. உறக்கத்தில் கூட படாதபாடு படுத்திவிடும்.
புரண்டு புரண்டு படுத்தல்; உளறுதல்; பெருஞ் சத்தத்துடன் குறட்டை என்று பலவிதமான
சேட்டைகள் செய்யும்'.(நாஞ்சில் நாடனும் இதேமாதிரித்தான் ஓல்ட் மங்கிடம் கொஞ்சம்
பயந்துதான் போயிருந்தார்!)
                                                 இவ்வாறாக அவரது 'குடிப்புராணம்' அவரது எழுத்துகளில்
'தொட்டுக்கொள்ளும் ஊறுகாயைப்போல' என்றில்லாமல் விலாவாரியாகவே அங்கங்கே
தலைநீட்டும்.                                                         (கு.ம.காப்பியம் இன்னும் வரும் ..Cheers  )





            







No comments:

Post a Comment