Saturday, 3 October 2020

 

70 களில் இலங்கை வானொலித் தமிழ் நாடகங்கள்

 

         1969 இல் 'தினகரன்' மாபெரும் மேடை நாடகப் போட்டியொன்றை அகில் இலங்கை ரீதியாக நடாத்தியது. அதில் தெரிவான ஏழு நாடகங் கள் தொடர்ச்சியாக ஒரு வார காலம் மிகக் கோலாகலமாகக் கொழும் பில் அரங்கேற்றப்பட்டன. அதில் சிறந்த நாடகமாகத் தெரிவு செய்யப் பட்ட 'சுமதி' என்ற நாடகத்தை எழுதித் தயாரித்து முதற் பரிசீட்டியவர் தான் கே.எம்.வாசகர்

                       சானாவின் காலத்தில் ஒரு தொழில்நுட்ப உதவியாளராக மட்டும் வானொலியுடன் பரிச்சயம் கொண்டிருந்த அவருக்கு சானா ஓய்வு பெற்ற பின் நாடகத்  தயாரிப்பாளராகும் தகுதியை 'சுமதி'யின் வெற்றி ஈட்டிக் கொடுத்ததெனலாம்.

                       70 களின் ஆரம்பத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும் வானொலி நாடகத் தயாரிப்பிலும் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. அதற்குச்  சிறிது காலத்துக்கு முன்னரே  ஒலிப்பதிவு நாடாக்கள்  புழக்கத்துக்கு வந்து விட்ட போதிலும் சானாவின் காலத்தில் நாடகங்கள் யாவும் நேரடியாகவே ஒலிபரப்பாயின.

                   ஆனால் வாசகர் காலத்தில் இலங்கை வானொலியில் ஒலி நாடாக்கள் பாவனை ஆரம்பமாகிவிட்டது. அதைவிட அப்போது ஆட்சி க்கு வந்த சுதந்திரக் கட்சி அரசானது தமிழகத் திரைப்பட இறக்குமதி யில் ஏற்படுத்திய தடையானது உள்ளூர் கலைஞர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துவிட்டது.  அனைத்து இலங்கைத் தமிழர்களதும் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இலங்கை வானொலி மாறிவிட்டது. அதனால் வானொலி நாடகங்களைக் கேட்டு ரசிக்கும் நேயர்களின் தொகையும் அக்காலகட்டத்தில் உச்சத்தை எட்டிவிட்டது.

             தேசிய சேவையில் மட்டுமின்றி வர்த்தக சேவையிலும் விளம்பர தாரர்கள் அனுசரணையுடன் தொடர் நாடகங்கள் பல ஒலிபரப்பாக ஆரம்பித்தன.  எழுத்தாளர்கள் பலரும் களத்தில் இறங்கிச் சளைக்காது எழுதிக் குவிக்க ஆரம்பித்தனர்.

                 கே.எம்.வாசகரின் தயாரிப்பில் இளங்கீரனின் 'வாழப் பிறந்த வர்கள்' நாடகம் 130  வாரங்கள் அதாவது  இரண்டரை ஆண்டுகள் தொடராக ஒலிபரப்பானது. அவரது 'அவளுக்கு வேலை வேண்டும்' தொடரும் வர்த்தக சேவையில் பின்னர் வலம்வந்தது. 'மனித புராணம்' தேசிய சேவையில் தொடராக ஒலிபரப்பான இளங்கீரனின் மற்றொரு நாடகம்.

               மேலதிகப் பணிப்பாளராகச் சிலகாலம் கடமையாற்றிய பிரபல எழுத்தாளர் அங்கையன் கைலாசநாதனின் 'பருவக் காற்று' 52  வாரங் களை வெற்றிகரமாகக் கடந்தது. கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த வீ.என்.பாலசுப்ரமணியத்தின் 'பழமுதிர்ச்சோலை' பிரபல எழுத்தாளர் சு.வே.எழுதிய 'பொழுது புலர்ந்தது' என்பனவும் அந்நாட் களில் தொடராக ஒலித்து மண்வாசனை  பரப்பிய நாடகங்களே!

                   வர்த்தக சேவையில்  70 களில் ஒலிபரப்பான சில்லையூர் செல்வராஜனின் 'தணியாத தாகம்' அந்நாளைய நேயர்களின் கண்களைக் குளமாக்கி நெக்குருகச் செய்து நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்து விட்ட ஒரு முத்திரைத் தொடர் நாடகம். அதில் கமலினி செல்வராஜனதும் கே.எஸ்.பாலச்சந்திரனதும் நயமான நடிப்பு பலராலும் வியந்து போற்றப்பட்டு நீண்ட காலம் பேசப்பட்டது.

                 M.அஷ்ரப்கானின் ஒரு வீடு கோவிலாகிறதுவும்  அப்துல் ஹமீதின் உணர்ச்சிகரமான நடிப்புக்குத் தீனியாக அமைந்து  அந் நாளைய நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஒரு தொடர் நாட கமே. இதே 70 களில் கமத்தொழில் திணைக்கள அனுசரணையுடன் கிராம சஞ்சிகை'யில் 'முகத்தார் வீடு' எனும் நாடகத் தொடரை எழுதி அதில் முகத்தாராகவும் நடித்து  268 வாரங்களுக்கு, அதாவது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிபரப்பச் செய்து முத்திரை பதித்தவர் இளவாலையூர் எஸ் ஜேசுரட்ணம். அவரது 'சண்டியன் சின்னத்தம்பி'  26  வாரங்களும் 'மருக்கொழுந்து'  13  வாரங்களும் தொடராக ஒலிபரப் பான மற்றிரு நாடகங்களாம்.

                  மரைக்கார் ராமதாஸ் அப்புக்குட்டி ராஜகோபால்உபாலி செல்வசேகரன் எனத் தாம் உயிரூட்டிய பாத்திரங்களின் பெயர்களால் நடிகர்கள் நினைவுகூரப்படக் காரணமான 'கோமாளிகள் கும்மாளம்' தொடர் நாடகமும் 75 இல் தான் வர்த்தக சேவையில்  ஒலிபரப்பாகி நேயர்களின் பேரபிமானம் பெற்றது. நகைச்சுவை எழுத்தாளராக மஹதி ஹசன் இப்ராஹீமை இனங் காட்டியதும் அந்த நாடகம்தான். அந்நாடகத்தின் மகத்தான  வெற்றி நீண்ட காலத்துக்கு எஸ்.ராமதாஸி னதும் அதில் நடித்த ஏனைய நடிகர்களினதும் பெயர்களை ரசிக நெஞ்சங்களில் தக்க வைக்கக் காரணமானது.  மஹதி ஹசன் இப்ரா ஹிமின் 'கரையைத் தொடாத அலைகள்' 'கல்யாணக் கைதிகள்'   இரு துருவங்கள்' என்பனவும் பின்னர் ஒலிபரப்பான குறிப்பிடத் தக்க தொடர்கள்

                         70 களில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த மற்றுமொரு எழுத்தாளர் சி சண்முகம். அவரது 'துணி விடு தூது' ரசிக நெஞ்சங் களைக் களிப்பிலாழ்த்திய தொடர்களில் முதன்மையானது.  'இதயத் துடிப்புகள்,' 'எங்கேயோ கேட்ட குரல்', 'இரவில் கேட்ட குரல்' மற்றும் 52 வாரத் தொடரான 'நெஞ்சில் நிறைந்தவள்' நூறு வாரத் தொடரான 'அப்பாவும் மகனும்',ஆனந்த வாசம்' என அவரது கற்பனையில் உரு வாகிக் காற்றலைகளில்   வலம் வந்த தொடர்கள் பலப்பல. 

                அக்காலகட்டத்தில் அதிகளவான ஜனரஞ்சகத் தொடர்களை எழுதியவரென 'வரணியூரான்' S.S. கணேசபிள்ளையைக் குறிப்பிட லாம். 'இராசமலர்க் களஞ்சியம்', 'கண்ணே லலிதா', 'குழறி கந்தையா', 'ஆசை மச்சான்', சுகுணாவின் காதலன்', 'மனம் போல வாழ்வு', 'சுந்தரி சாகவில்லை', 'அசட்டு மாப்பிள்ளை' முதலான பல்வேறு தொடர் நாடகங்களையும் எழுதிய அவர் தமது தொடர் நாடகமான 'இரை தேடும் பறவைகளை' நூலுருவாக்கியுமுள்ளார்.  1972 இல் 31 வாரங்கள் ஒலி பரப்பான அவரது 'புளுகர் பொன்னையா' பின்னர் மேடை நாடகமாக அவதாரமெடுத்து இலங்கையின் பல் வேறு பிரதேசங்களிலும் வெற்றி நடை போட்டு    வெள்ளிவிழாக் கண்டது. அவரது அயராத உழைப்பு வானொலி நாடக வரலாற்றில் அவருக்கொரு  தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது

                மேற்குறிப்பிட்ட தொடர்களை விட, காவலூர் ராஜதுரையின் 'துப்பறியும் லாவோஜி', சுரேஷ் சுவாமிநாதனின் எழுத்துருவாக்கத் தில் ..கந்தசாமியின் 'மனக்கண்', ஞானசக்தி கந்தையாவின் 'ஒரு சுமைதாங்கி கல்லாகிறது',  தி.. அரியரத்தினத்தின் 'பூங்காவனம்’.  கே.எம்.வாசகரின் 'நீண்ட பயணம்,' எஸ்.ராமதாஸின் 'வினோத உலகம்' முதலான நாடகங்கள் வர்த்தக சேவையில் தொடராக ஒலி பரப்பாக - எம் கந்தசாமியின் 'போடியார் வீட்டில்' மற்றும் எஸ் பொ. வின் 'மட்டக்களப்பு மாப்பிளை' என்பன தேசிய சேவையில் தொடராக  ஒலி பரப்பாகி நேயர்களின் வரவேற்பைப் பெற்றன.

              மேடை நாடக மரபில் வந்ததாலோ என்னவோ வாசகருக்கு அதன்பால்  ஓர் அபிமானம் இருந்து வந்தது போலும்.  அதனால் அந் நாட்களில் மேடையேறிய தரமான மேடை நாடகங்களை வானொலிக் கேற்ப மாற்றி ஒலிபரப்புச் செய்ததுடன் சில நாட்டுக் கூத்துகளை ஒலிநாடாக்களில் பதிவு செய்து களஞ்சியப் படுத்தும் கைங்கரியத்தை யும் செய்துள்ளார். நடிகமணி  வி.வி. வைரமுத்துவின் 'பூதத்தம்பி'க் கூத்தும் 'பக்த நந்தனார்', 'திருநீலகண்ட நாயனார்' கூத்துகளும் அவ்வாறாக நிலையக் காப்பகத்தில் [அவரால்] ஒரு போது பேணப் பட்டன.

                     வைரமுத்துவின் 'அரிச்சந்திர மயான காண்டம்', அம்பியின் 'வேதாளம் சொன்ன கதை',  .பாலேந்திராவின் 'மழை',  S.S.கணேச பிள்ளையின் 'நம்பிக்கை',  கலைச்செல்வனின் 'மனித தர்மம்', வாசகரின் 'சுமதி', 'மனித வலை' போன்ற மேடை நாடகங்கள் வானொலி வடிவம் கண்டனவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

                          வாசகரின் தயாரிப்பில் எஸ்.பொ.,  இளங்கீரன், சொக்கன், தெணியான், மற்றும் அகஸ்தியர், செங்கை ஆழியான், அங்கையன் கயிலாயநாதன். மு.கனகராசன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் நல்ல பல நாடகங்கள் உருவாகின. மாப்பசானின் சிறுகதையைத் தழுவி எஸ்.பொ. எழுதிய 'முள்,' அங்கையன் கயிலாய நாதனின் 'கடற் காற்று' [அவரே எழுதிய நாவலின் நாடக வடிவம்], இளங்கீரனின்மகாகவி பாரதி' மற்றும்வெறும் கனவல்ல,'       .இரத்தினத்தின் வரலாற்று இலக்கிய நாடகமான 'சண்டாளிகா'  அகஸ்தியரின் 'அலைகளின் குமுறல்', 'ரஞ்சனி', ;எரிமலை வெடித்த போது', 'கோபுரங்கள் சரிந்தன' போன்ற நாடகங்கள் பெரிதும் விதந்து பேசப் பட்டன.

                       பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய 'பொருளோ பொருள்' எனும் நாடகம் 17/01/74  இல் ஒலிப்பரப்பானதென்றும் அதில் தன்னுடன்    கா. சிவத்தம்பியும் நடித்தார் என்றும் தனது 'வானொலிக் கால நினைவுகள்' [இருக்கிறம்] தொடரில் கே எஸ் பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார்

                            இவர்களை விட ஞானசக்தி கந்தையா, விஜயராணி செல் லத்துரை, பாமா ராஜகோபாலன், ஜே.ஜெயமோகன், S.பத்மநாதன், இரா.ஜெகசோதி, எம்.திருநாவுக்கரசு, நெல்லை .பேரன், V.N. குக ராஜா,  போர்வையூர் ஜிப்ரி, .கருணைரத்தினம்  போன்ற பல எழுத்தாளர்களும்  வாசகரின் காலத்தில் வானொலி நாடகங்களுக்கு வலுச்  சேர்த்தார்கள்.

                                  ஆயினும் சமீபத்திய [2012 ] தனது 'தினக்குரல்' பேட்டியில் 'சானாவின் பின்னர் வானொலி நாடகம்  தயாரித்தவர் எனது நாடகங் களில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு  அதிகமாக இருப்பதாகத் தெரி வித்து அதனை மாற்றி எழுதித்தருமாறு கேட்டுப் பிரதியைத் திருப்பி அனுப்பினார். பேச்சு மொழியை மாற்றிப் போலியான பாத்திரங்களை உருவாக்க நான் விரும்பவில்லை. [அதனால்] அதன் பிறகு வானொலி நாடகங்கள்  எழுதுவதை நான் நிறுத்திக் கொண்டேன்' என எழுத்தாளர் தெணியான் சுட்டுகிற குற்றச் சாட்டானது கே எம் வாசகரின் நாடகத் தெரிவு பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. அதற்குப் பதிலளிக்கத் தற்போது அவரில்லை. அவரது உழைப்பை உறிஞ்சிய வானொலியும் அவரைப் பற்றிய - அவர் காலத்து நாடக வரலாறு பற்றிய எவ்விதமான பதிவுகளையும் மீள எடுத்துக் பார்க்க முடியாதவாறு முற்றாகவே  அழித்தொழித்து விட்டது.

                            என்றோ எழுதி வைத்துத் தப்பித் பிழைத்த எனது பழைய குறிப்பேடு களில் இருந்தும் எனது மனப்  பதிவுகளில் இருந்தும், கே.எஸ். பாலச் சந்திரன் எஸ் ஜேசுரட்னம் போன்ற அவர் காலத்து எழுத்தாள நடிகர் களின் பதிவுகளில் இருந்தும் கே.எம்.வாசகரின் காலப் பகுதி பற்றி என்னால் இவ்வளவேனும் தொகுக்க முடிந்தது.

                                   70 களில் எழுதியவர்களுள் M. அஷ்ரப்கானும் நினைவு கூரப் படவேண்டிய  ஒருவர். 60 களில் சானா காலத்திலேயே அவரும் அவரது சகோதரர் M. அஸ்வத்கானும் தமது பெயர்களைத் தமிழ் நாடக அரங்கில் பதித்துவிட்டார்கள். 'எது தியாகம்?' என்ற நாடகத்துடன் 1958 இல் களமிறங்கியவர் எம்.அஷ்ரப்கான். சாகித்திய வானொலி நாடகப் போட்டி யில் அவரது 'இதயம் வாழ்கிறது' எனும் நாடகம் பரிசீட்டியது. சானாவும் முஸ்லீம் நாடகத் தயாரிப்பாளர் குத்தூஸூமாகச் சேர்ந்து வானொலியில் அந்நாடகத்தைத் தயாரித்தளித்தார்கள்.

                                வெற்றி பெற்ற   அஷ்ரப்கானின் 'ஒரு வீடு கோவிலா கிறது' தொடர் நாடகம்  அப்துல் ஹமீட்டினால் தயாரிக்கப்பட்டது. அவரது 'அனிச்ச மலர்' என்ற தொடர் நாடகமும் அப்துல் ஹமீடினா லேயே தயாரிக்கப்பட்டது. அவரது நாடகத் தயாரிப்பின் சிறப்புக்கு ஓர் உதாரணமாக அமைந்தது அந்நாடகம். தமிழகத்து திரைப்பட நடிகர்களான ஜெமினி கணேசன், ஸ்ரீவித்யா, I.S.R. போன்றோர் இந் நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று இலங்கை வானொலி நடிகர்களுடன் இணைந்து நடித்தனர்.  ஆனாலும் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் கால் பதிக்கவில்லை. தமிழகக் கலையகம் ஒன்றிலேயே வைத்து அவர்களின் வசனப் பகுதிகளை Voice Cuts - ஆகத்  தனியாக ஒலிப்பதிவு செய்து கொணர்ந்து நமது கலைஞர்களின் பங்களிப்புடன் Edit செய்து இணைத்துத் தொகுத்து முழுமையான வடிவத்துடன் நாடகமாக்கி ஒலிபரப்பியமையானது அந்நாளில் வேறெவரும் செய்யாத புதுமையானதும் வித்தியாச மானதுமான ஒரு முயற்சி!

                          இவற்றைவிட M .அஷ்ரப்கானின் 'சக்கரங்கள்', 'ஓடம் நதி யினிலே', 'அலைகள்', உறங்காத உறவுகள்', 'வர்ணமில்லாத வானவில்', 'தாய்மைக்கு என்ன விலை?' முதலான தொடர்களும் தேசிய, வர்த்தக சேவைகளில் 70 களில் ஒலிபரப்பாகியுள்ளன. முஸ்லீம் சேவை நாடகங்களைப் பொறுத்த மட்டில் அஷ்ரப்கானின் பங்களிப்பு அளவிடற்கரியது. அச்சேவையில் ஒலிபரப்பான அவரது பத்து வானொலி நாடகங்களின் தொகுப்பு 'முள்' எனும் மகுடத்துடன் நூலுருவாகியுள்ளது.

 

 

 

No comments:

Post a Comment