இலங்கை வானொலியும்
தமிழ் நாடகங்களும்
வானொலி நாடகப் பிரதிகள் பற்றிப் பேசப் புகுமுன் வானொலி நாடக வகைகள் பற்றியும் மேடை நாடகங்களுக்கும் அவற்றுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பற்றியும் முதலில் சற்றுப் பார்ப்போம். எமது இலங்கை வானொலியைப் பொறுத்த மட்டில் 5நிமிடத்தில் இருந்து 10 நிமிட, 15 நிமிட, 30 நிமிட,
45 நிமிட, ஒரு மணி நேர நாடகங்கள் எனப் பல்வகைப்பட்ட கால இடைவெளிகளைக் கொண்ட நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அதைவிட 15 நிமிட நேர, 1/ 2 மணி நேரத் தொடர் நாடகங்களும் 13 வாரங்களோ 26 வாரங்
களோ ஒரு வருட காலமோ அதற்கும் கூடுதலாகவோ தொடராக ஒலிபரப்பாகிப் பெரும் வரவேற்பையும் பெற்றதுண்டு .
சிறுவர் மலர், இளைஞர் மன்றம், வளரும் பயிர், நாளைய சந்ததி, வாலிப வட்டம், மாதர் பகுதி, குன்றின் குரல் எனப்படும் மலை யக மக்களுக்கான நிகழ்ச்சி, மற்றும் கிறீஸ்தவ சமய நிகழ்ச்சி போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளின் இடையிலும் குறு நாடகங்கள் சில இடம் பெற்றன. ஆயினும் பிரதானமாக சனிக்கிழமைகளில் இரவு9.30 முதல் 10.00 வரை ஒலிபரப்பான 'நாடக அரங்கு' நாடகங்களே பெரும்
பாலான நேயர்களால் ஈர்க்கப்பட்டுப் பேரபிமானம் பெற்றன. வியாழக் கிழமைகளில் இரவு 7.45 முதல் 8.00
வரை 15 நிமிட நேராக் குறுநாடகங் களும் ஒலிபரப்பாயின. சில காலங்களில் அந்நேரத்தில் தொடர் நாடகங்கள் இடம்
பெற்றன.
முஸ்லீம் சேவையில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8.30 முதல்
9.00 வரை ஒலிபரப்பாகிவந்த அரை மணி நேர நாடகங்களும் நீண்ட காலமாக நேயர்கள் பலரதும் அபிமானத்துக்குரிய நிகழ்ச்சியாக விளங்கி வந்ததும் உண்மையே.
அறுபதுகளின் நடுப் பகுதியில் 'சானா'வால் அறிமுகப் படுத்தப் பட்ட நகைச்சுவைக் குறுநாடகங்களின் தொகுப்பான 'மத்தாப்பு' நேயர்களைச் சிரிப்புக் கடலில் ஆழ்த்திய
ஒரு சிறப்பான நிகழ்ச்சி. 'அசத்தப் போவது யாரு?' போன்ற இந்நாளையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பிள்ளையார் சுழியிட்ட அந்
நிகழ்ச்சியை [சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே] அந் நாளிலேயே வடிவமைத்தவரான 'கலாஜோதி' சானாவின் மேதைமை வியக்கப்பட வேண்டியது. ‘மத்தாப்பு' பின்னர் 'கதம்பம்' ஆகப் பெயரளவில்
மாறுதலுற்றாலும் 2002 வரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாகி நகைச்சுவைக் கதம்பமாகத் தனது தனித்துவதைப் பேணி நின்றது.
70 களில் இருந்து வர்த்தக சேவையிலும் பல்வேறு வகையான நாடகங்களும் தொடர் நாடகங்களும் ஒலிபரப்பாகி வருகின்றன. இவற்றிலும் நகைச்சுவை நாடகங்கள் முக்கியத்துவம் பெற்றன.
சிறுவர்களுக்கான நாடகங்கள், இளைஞர்களுக்கான நாடகங்கள், பெண்களை மையப் படுத்தி அவர்களின் பிரச்சனைகளை அலசும் நாடகங்கள், விவசாயத் தகவல்களை உள்ளடக்கிய நாடகங்கள், மலையக மண்வாசனை வீசும் நாடகங்கள் என நிகழ்ச்சிகளுக்கேற்ப நாடகங்களை வகைப் படுத்தினாலும் அவை யாவும் பெரும்பாலும் சமூக நாடகங்கள் எனும் பிரிவினுள் அடங்கிவிடும்.
ஆயினும் திகிலை ஏற்படுத்தும் மர்ம நாடகங்கள், குற்றம் இழைத்தவர்
அல்லது கொலை செய்தவர்
யாரெனத் தேடிக் கண்டு பிடிக்கும்துப்பறியும் நாடகங்கள், நகைச்சுவையைப் பிரதான அம்ச மாகக் கொண்ட நையாண்டி நாடகங்கள் போன்றனவும் பாத்திரங்
களின் மனப் பிரச்ச்சினைகளை- பிறழ்வுகளை மையப்
படுத்திய மனோ தத்துவம் சார்ந்த நாடகங்களும் சமூக நாடகம் எனும் பொதுப் பிரிவினுள் அடங்கிய போதிலும் கருப்பொருள், நகர்த்தப்படும் முறை, பயிலப்படும் மொழிநடை என்பவற்றில் அவை தத்தமக்கெனப் பிரத்தி
யேகமான பாங்கைக் கொண்டிலங்குவன. சமகால வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு புனையப்படும் நாடகங்களில்,
யதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களை நினைவு படுத்தும் சில பாத்
திரங்களை இனங்கண்டு அவற்றுடன் ஒன்றித்து
விட முடிவதால் வானொலி நாடகங்களும் சாதாரண மக்களின் பிரதான பொழுது போக்குச் சாதனமாகிவிட்டது..
இதற்கு மாறாக - புராண, இதிகாச, இலக்கிய, சரித்திர, ராஜா ராணிக் கதாபாத்திரங்களை வைத்துப் பின்னப்படும் நாடகங்கள் கற்பனை சார்ந்தனவாக அமைவதால் அவற்றின் பேச்சு நடையும் யதார்த்தம் மீறியதாக, ஓரளவு இலக்கண மரபின் பாற்பட்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. சிலபோது
கவித்துவதுடன் கூடிய கவிதை நாடகங்களாகவும் ஆக்கப்படுவதுண்டு. வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய - விண்வெளி சம்பந்தமான விஞ்ஞானப் புனைவு நாடகங்களும் சில மிக அரிதாக ஒலிபரப்பாகியுள்ளன.
ஆரம்பகால நாடக வடிவம் கூத்தாக இருந்தது. மேலைத் தேயத்தவரின் பரிச்சயத்தால் அவர்களின் கலை இலக்கிய வகைகள் எமது மொழியிலும் ஊடுருவின. சிறுகதை, நாவல் போல 'டிராமா' எனப்பட்ட நாடக வடிவமும் தமிழில் உள்வாங்கப் பட்டது. ஏற்கெனவே இருந்த கூத்துக் கலைஞர்கள் புதிதாக அறிமுகமான 'டிராமா'வுக்குத் தம்மை இசைவாக் கிக் கொண்டார்கள்.
விஞ்ஞானத்தின் பரிணாம வளர்ச்சி காரணமாக வானொலி, கமரா என்பன கண்டுபிடிக்கப்பட மேடை நாடகங்கள் சினிமாவாகவும் வானொலி நாடகங்களாகவும் வடிவம் கொள்ளலாயின. மேடை நாடகத் தில் இருந்து பிறப்பெடுத்த காரணத்தால் அதன் கூறுகள் அவற்றிலும் ஊடுருவி நிற்கவே செய்தன. ஆயினும் அவ்வவற்றுக்கான தனித்துவ சிறப்புகளும் பலவீனங்களும் கொண்டனவாகவே அவை காணப் பட்டன.
வானொலி - மேடை
- திரை
மேடையோ முப்பரிமாண அமைப்பைக் கொண்டது. கண்,
காது எனும் இரு புலன்களுக்கும் விருந்து வைத்து மெய்யால்
உணரப்படுவது. பார்வையாளர்கள் நடிகர்களுடன் நேரடியாகவே பங்கு கொள்வது. குறிப்பிட்ட
பாத்திரத்தின் தன்மையை, கனபரிமாணத்தை - அது அரசனோ ஆண்டியோ - கண்கூடாகவே காண
வைப்பது. ரசிகனின் கற்பனைச் சித்தரிப்புக்கு அங்கு அவசியமில்லை. பாராட்டோ கண்டனமோ
பார்வையாளரின் பிரதிபலிப்பு அங்கு உடனடியாகவே தெரிந்துவிடும். கரகோஷமோ கல்லெறியோ -
மேடைக் கலைஞன் எதையுமே நேரடியாகச் சந்திக்க/ அனுபவிக்க வேண்டியவனாக இருப்பான். சந்தோஷமோ துக்கமோ, சிரிப்போ
அழுகையோ-
அரங்கத்தில் அடுத்திருப்பவர்களின் உணர்வுகள் தொற்றிக் கொள்ளும் சாத்தியக் கூறு
மேடை நாடகத்துக்கு அதிகமுண்டு. சினிமாவுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தும். ஆயினும்
ஆற்றுகையைப் பொறுத்த மட்டில் மேடை அனுபவம்
என்பது முற்றிலும் வேறானது.
வானொலி என்பது முற்று முழுதாக ஒரு செவிப் புலச் சாதனம். அதனால் அதில் ஒலிபரப்பாகும் நாடகமென்பது நேயர்களின் மனமேடைகளில் அரங்கேற்றப்படுவது. அவரவரது வயது, அனுபவம், கற்பனை விரிவு என்பவற்றிற்கேற்பத் தனிப்பட இரசிக்கப்படுவது. வானொலி நாடகத்தைக் கேட்கும் ஒவ் வொருவரும் ஒரேவிதமாக இரசிப்பார்கள் எனக் கூற முடியாது. பாத்திரங்களையும் நாடகத்தின் நிகழ்விடங்களையும் நேயர்கள் கற்பனையில் உருவகித்துப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இது வானொலி நாடகத்தின் ஒரு பலவீன மாக இருப்பினும் இரசிகனின் கற்பனையைத் தூண்டி விடுகிற காரணத்தால் அதுவே அதன் சிறப்புக்குத் துணை புரிகிறதென்றும் கொள்ளலாம்.
மேடை நாடகத்தை ஒருவர் குறிப்பிட்ட ஓரிடத்தில் அமர்ந்தபடியோ நின்றபடியோதான் இரசிக்க முடியும். வானொலி நாடகத்துக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. நடந்தபடியோ வாகனத்தை ஒட்டியபடியோ பயணம் செய்தபடியோ சமையல், நெசவு, மீன்பிடி, சுருட்டுச் சுத்துதல் போன்ற இன்னோரன்ன வேலைகளைச் செய்தபடியோ கூடக் கேட்டு ரசிக்கலாம்
மேடைக்கும் சினிமாவுக்கும் குரலமைவு மட்டுமல்லாது உடற் பொருத்தமும் வேண்டப்படுகிறது. வானொலி நாடகத்தைப் பொறுத்த மட்டில் குரல் பொருத்தம் மட்டுமே தேவைப்படுவது. நல்ல சினிமாவானது காட்சிப் படிமங்களால் நகர்த்தப் படுவ தாக, மிகக் குறைந்தளவு உரையாடல்கள் கொண்டதாக அமைக்கப்பட வேண்டு மென்பர். ஆனால் எமது தமிழ் சினிமாவோ பெரும்பாலும் நாடகத் தன்மை கொண்டதாக, ஆரம்பம் முதல் இறுதி வரை வசன மழையில் குளித் தெழுவதாகவே இருந்து வந்தது/ வருகிறது. கண்களை மூடிக் கொண்டு காதுகளைத் திறந்து வைத்தாலே காணும். கதை ஓட்டத்தை எவ்வித இடருமின்றிப் புரிந்து கொள்ளலாம். அதனால் தானோ என்னவோ ஒலிச் சித்திரங்களாகத் திரைப்படங்களைக் கேட்டுத் 'தரிசிக்க' முடிந்தது. நாடகத்துக்கும் சினிமாவுக்குமுள்ள வேறுபாடு உணரப்படாத காரணத்தால் நீண்ட காலமாகத் தமிழ் சினிமா 'திரை நாடகமாகவே' பவனி வருகி றது. மேடை நாடகங்களின் சரிவுக்கும் இதுவே மூல காரணமானது.
வானொலி நாடகங்களைப் பொறுத்த மட்டில் ஆரம்ப காலங் களில் இத்தகைய ஏற்ற இறக்கங்களுக்கு இடமிருக்கவில்லை. ஆனால் திரையுடன் ஒப்பிடும் போது அதன் எல்லைகள் மட்டுப்பட்டதாகிப் போயின. சப்த ஜாலங்களையோ இசை நுணுக்கங்களையோ கொண்டு எட்டக் கூடிய எல்லைகளை அது எட்டிவிட்ட பின் புதிதாகப் பரீட்சிப் பதற்கு வானொலி நாடகங்களில் ஏதுமில்லாமற் போனது. அதன் காரணமாகவும்,
தமிழில் தொலைக்காட்சிச் சேவைகள் ஆரம்பிக்கப் பட்டு அதில் நிதமும் எட்டுப் பத்துச் சின்னத்திரைத் தொடர்கள் ஒலி + ஓளிபரப்பாகத் தொடங்கியமையாலும் வானொலியும் அதன் நாடகங் களும் படிப்படியாகத் தமது மவுசை இழக்க ஆரம்பித்தன.
வானொலிக் கலைஞர்களும் சரி எழுத்தாளர்களும் சரி காற்றலைகளிற் கலை படைப்பவர்கள். அதனால் அவர்களின் பெயரும் புகழும் கூடக் காற்றோடு கலந்து மறைந்து விடுகிறது; மறக்கப்பட்டு விடுகிறது. புனைகதை எழுத்தாளர்களைப் போல வானொலி நாடக எழுத்தாளர்களின் குறை நிறைகள் ஆராயப்பட்டு அவர்களுக் கான இடம் அளிக்கப்படுவதில்லை. எனவே அவர்களைப் பற்றி நாளைய சந்ததியினர் தெரிந்து கொள்ள முடியாமலே போய் விடுகிறது. இக்குறையைப் போக்க வேண்டுமெனும் ஆதங்கத்தில் நானறிந்த மட்டிலான சில தகவல்களைத் தொகுத்து இங்கே பதிவு செய்ய விழைகிறேன். அவசியமான இவ்வாவணப்படுத்தலில் சிலபல விடு படுதல்கள் நிகழ வாய்ப்புண்டு. மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் காலப்போக்கில் இதை மேலும் செழுமைப்படுத்த இது ஓர் அடிப்படை
யாக அமையலாம்.
No comments:
Post a Comment