Thursday, 26 July 2018





முகநூல்

[முகநூலை முடக்கியதால்

முளைத்தெழுந்த சில

இடக்கான சிந்தனைகள்]



அவரவர்க்கேற்றபடி

அனைத்தும் உவந்தளிக்கும்

அட்சய பாத்திரமாம்

அதன் பேர் முகநூலாம்



உள்ளேன் ஐயா பேர்வழிக்கு

`ஹாய் காலை வணக்கமென

வாகாகத் தன் வரவை

விரைவாகப் பதிவு செய்ய

வரமாக வாய்த்த நல்

வரவுப் பதிவேடு

தன் முகத்தைத் தான் பார்த்து

அகமகிழ்ந்து பூரித்து

என் வயது ஏறவில்லை

என இறங்கி வந்து நின்று

என்னிளமைத் தோற்றத்தை

ஏற்றங்கீ கரியுங்கள்

என இறைஞ்சு மிளைஞர்க்கு [?}

அது காலக் கண்ணாடி



எத்தனை `வோட்` எனக்கென்று

ஏறுமாறாய்ச்  சரிபார்த்து

`லைக்` சொடுக்காப் பாவியரை

சாவடிக்கப் பின் தொடரும்

அடாவடி யபேட்சகர்க்கு

அது வாக்குச் சாவடிதான்



`நானிங்கு நலமுங்கோ

நீயங்கு சுகமா சொல்`

நண்பருக்கும்  காதலர்க்கும்

நீண்ட நாள் உறவினர்க்கும்

பிறந்தநாள் மணநாள் மற்றும்

பெருநாளொடு திருநாள் தன்னில்

பிரியமாய் வாழ்த்தும் சொல்ல

முத்திரைச் செலவுமில்லா

மின்னஞ்சல்  பெட்டியுமாம்



நீத்தார் பெருமைதனை

நினைந்துருகிச் சாந்தி பெறச்

சேர்ந்து பிராத்திக்கும்

நாளைய அமரர்தம்

நினைவாஞ்சலிப் பேழை



தலையில்லாத் தலைவர்களை

தான்நம்பித் தடுமாறித்

தன் குழப்பம் தனைத் தீர்க்கத்

துணை தேடும் தொண்டர்களைத்

தாக்காட்டிப் பிராக்காட்டும் 

திரிசங்கு மேடையதாம்



நாயகன் துதிபாடி

நக்கல் கதை பேசும்

நம் வீட்டுப் பிள்ளைக்கு

வழிபாட்டுக் `கட்டவுட்டு`



உள் வீட்டுச் சேதிகலை

ஊரம்பலத்தே உரைக்கும்

உருப்படாப் பசங்களுக்கு

உதவுகிற ‘Autograph’



கல்யாணம் காதுக்குத்து

கொண்டாட்டம் கோடிப்படக்

`கமெரா`க் காதலர்க்கு

காட்சிப்பட ‘ Album’முமாம்



நேற்று நியூயோர்க்கு

இன்று லண்டனிலே

நாளை நோர்வேயாம்

என்று உலகனைத்தும்

சுற்றும் வாலிபர்க்கு

வழிகாட்டும் Time Table



வெளிநாட்டு மாப்பிளையா?

உள்நாட்டு உழுமாடா?

உதையாத மணமகனை

கதையாத மணமகளை

ஒன்றாய்ச் சேர்த்து வைக்கும்

Broker   இல்லா  Match Maker



கோலம் போடும் முறையென்ன?

`கொக்கீஸ்` செய்யும் குறிப்பென்ன?

மாமியாரும் மருமகளும்

மதனியோடு மச்சாளும்

மஜா`வாக `மிக்ஸ்` ஆகும்

மாதர்களின்  `மஜ்லிஸ்’ காண்



விருப்பப் பாடல்கலை

முணுமுணுத்துக் கிறுகிறுக்கும்

முன்னைய நாள் நேயருக்கு

நம்ப முடியாத ஒரு

பம்பர்` பரிசுமழை

பாட்டோடு படமாச்சு

`ரூ இன் வண் செற்`ராச்சு



கார்லு மாக்ஸூ முதல்

கண்ணதாசன் வரை

கரைத்துக் குடித்தவர்க்கு

படித்ததைப் பதிவு செய்யும்

பொன்மொழிச் சட்டகம்பார்



இல்லாத வியாதிக்கு

மருந்தெடுத்து மாய்வோர்க்கு

இலவசமாய் ஒரு `கிளினிக்`

இல்லாத வன் இருப்பைத்

தேடும் அடியார்க்கு

அலைச்சல்தரா தின்ப

ஆலய [சற்] பிரசாதம்



உலகத்துவிந்தைகளைப்

பார்த்துப் பரவசித்துப்

பகிரத் துடிப்பவர்க்கு

பாங்கான கலைப்பூங்கா

புரியாத புதிர்களுக்கு

விடைகாணத் துடிப்பவர்க்கு

சுற்றிச் சுழலுமொரு

விவேகச் சக்கரம்



சங்கேத மொழி பேசிக்

களவுகற் றுறவாடும்

இளசுகளின் ரகசியக் கையேடு

இலகுதமிழ்ப் பாட்டோடு சபையேறும்

இளங் கவியின் கவிதைக் குறிப்பேடு

விளையாட்டுப் பிரியர்க்கு

களைகட்டும்  `ஸ்கோர் போர்டு`



கோபதாபங்களைக்

கொட்டித் தீர்ப்பவர்க்கு

வெட்டி முறித்துவிட

`வாசி`யான ஒரு வடிகால்



அத்தனையும் மேய்ந்தலுத்து

இதில் வேலையில்லை எனப்

பேசிச் சலிப்பவரும்

ஓசியில் தான் படிக்கும்

காசில்லா `நியூஸ் பேப்பர்`



இத்தனை பேர்களுக்கும்

மொத்தமாய்ப்  பலன் கொடுக்கும்

கேட்டபடி வரம் கொடுக்கும்

முகநூல் `சாமி`யதை

கோயில் கட்டிக் கும்பிடலாம்

கடவுளைப் படைத்தது போல்

கொண்டுவிடில் ஒரு வடிவம்




No comments:

Post a Comment