கவிதையும் நானும்
ஒரு கவிஞனாக நான் என்னைக் கருதியதில்லை. அவ்வளவாகக் கவிதைகள்
எழுதுவதுமில்லை. எழுதியதையும் பிரசுரத்துக்காக அனுப்பிவைத்ததுமில்லை. (அதனால்
திரும்பி வந்ததுமில்லை!) ஆயினும் அச்சில் வெளியான எனது முதல் எழுத்தாக்கம்
கவிதைதான்.
அதாவது, நான் ஐந்தாம் வகுப்பில் கற்றபோது எனது பெருமதிப்புக்குரிய திரு. வ.இராசையா அவர்கள் எமக்கு ஆசிரியராக இருந்தார் அவரது தூண்டுதலால்
நான் முதன் முதலாக எமது கல்லூரி ஆண்டுமலருக்காக ஒரு கவிதை எழுதினேன்..
குட்டிநாயே கிட்ட வா
குளிக்கப் போவோம் வருவாயா?
கட்டிவைத்த கோபமோ
காவல் காக்க மறுப்பதேன்?
கவிதையின் இந்நான்கு வரிகள் மட்டும் இன்றுவரை மறக்காமல் நினைவுப் பெட்டகத்தில் பத்திரமாக
உள்ளன.
சிலவேளைகளில் ஏதாவது ஓர் அருட்டலில்/உந்துதலில் நான் கிறுக்கிய் சில
கவிதைகள்(?) கிடப்பில் கிடந்து மறுபடி
இப்போ என் கண்ணில் தட்டுப்பட்டன. கம்ப்யூட்டர் யுகம் வரும்வரை அவை 'சாப விமோசனம்' பெறக் காத்திருந்தன
போலும். இன்றைய கவிதைகள் பற்றிய எனது மேலான கருத்துக்களைப் பிறிதொரு
சந்தர்ப்பத்தில் -முடிந்தால் எழுதுவேன். இப்போதைக்கு எனது—
கிடப்பில் கிடந்த கவிதைகள்
சிலுசிலுப்பு 
எட்டடிக் குச்சிக்குள் ஒரு
நாள்
சாகவே தான்
கிடந்தார் -பெத்தப்பா
போகவே நாள் குறித்தார்
மூச்சும் முட்டிழுப்பும்
முறையாகக் கேட்டபடி
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் ஏலாமல்
விழுந்து கிடந்தவரை
வாழ்வில் இறுதிமுறை
கண்டு அழுதுவரக்
கடுகியே நான் போனேன்
முக்கி முனகியொரு
முழுசாட்டப் பூனையைப் போல்
மலங்கிக் கலங்கிக் கண்
மேய்கின்றார் முழுச் சுற்றும்
மெய்யாக எனைநோக்கி -அம்
மாயக் கண்ணனைப் போல்
காட்டுகிறார் கண்சாடை
கிட்டத்தில் நான்போகக்
காறிப் பின் குரல் கமற
கடிக்காத குறையாகக்
காதுக்குள் குசுகுசுத்தார்
‘கட்டிலிற் கிடப்பவரின்
கடைநேர ஆசையதைக்
கட்டாயம் நிறைவேற்று’
கூட்டமாய்
நின்றவர்கள்
கூறி(வி)ட்டார் ஒருமனதாய்
கூறி(வி)ட்டார் ஒருமனதாய்
வெட்கத்தைத்
துறந்தேதான்
வெளிக்கிட்டேன் நான் நடையில்
‘சண்டாளி! சாகமுன்னும்
சடலத்தை ஆட்டுகிறாள்
கண்குளிர அவள் முகத்தைக்
காட்டட்டாம் கடைசிமுறை’
கூத்தாடி அவள் ஆட
விலுக்கென்று எழுந்திருந்து
விடியும்வரை பார்த்தவர் தான்
படுக்கவில்லைப் பாயில் பின்
சிலுக்கென்று பேர் படைத்த
சுமிதாவை வீடியோவில்
பார்த்ததனால் வந்த
எமன்
பாதியிலே பயந்தோட
பயனடைந்தார் பெத்தப்பு! 
அமலாபின் குஷ்பு என்று கமலுமே 'லவ்வு' பண்ண

விண்ணாணம்
விண்ணாணம் கொட்டிப்பாடி
விளக்கமாய் நேரஞ் சொல்லி
வீணாயெம் காலம் கொல்லும்
வானொலி ரீவீ பற்றி
வண்ணமாய் விண்டுரைக்க
வேண்டினேன் கொஞ்ச நேரம்
கடியது பொறுக்காதோர்க்குக்
கையுண்டு காதைக் காக்க!
அதி காலையில் நாம் கண்மலரக்
கூவிவரும் சேவலுக்கும்
கூசாமல் தந்திடலாம்
கட்டாய இளைப்பாறல்
பாயதில் நாம் புரண்டிருக்க
பிப்பீப்பீ என்று புதுப்
பூபாளம் செவிசேரும்
பிந்தியோர் பாடல்வரும்
'போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்புக்கணக்கு’
போடாத வீட்டுக் கணக்குப்
பாடமதன் நினைவு வரும்
பிரம்போடு வாத்தி முகப்
பரிமாணம் பயமுறுத்தும்
போதுமினி எனத் தம்பி
பேசாமல் முறுக்கிவிட
'மூடாதே! வானொலியை
பாடலது சோக்கெல்லோ!'
மூலையில் குரல் கேட்கும்
நேயர் அவர் நம் பாட்டா!
இடையிடையே விளம்பரங்கள்
'கடையிலே கேட்டிடுங்கள்
அறிவுக்கு ஆனைபீடி
பகுத்தறிவுக்குப் பூனைபீடி
தலையிடியா த்டிமனுமா?
தடவுங்கள் வைக்கோதந்தி’
கேளுங்கள் தரப்படுமாம்
பாட்டுகள்தாம் இலவசமாம்
காலைமுதல் மாலைவரை
காதராவக் கேட்டிடலாம்
மாக்கோணி கண்டதின்று
[ஸ்]பீக்கராய் வானொலியாய்
பேசுது பாடுதென்றால்
பாக்கியம் மாமி வீட்டுப்
பக்கம் நான் போவதில்லை
காக்குதது நாயைப்போல
ரேடியோப்பு ராணம் போதும்
ரீவீயத் தட்டிப் பாப்பம்
திரையிலே உருவம் கண்டு
திகைத்துமே திட்டினார்கள்
கலியுகப் பூதமிதைக்
காண்பதே பாவமென்றார்
தொலைவிலே இருந்த அது
தொலையாமல் வீட்டுள் வந்து
கலைநடம் பாட்டு என்று உலையாமல்
குலையாமல்
உள்ளபடி காட்டுதப்பா!
மலைக்கிறார் மாமியிப்போ
அடுத்தினி என்ன என்று
ஆராய்ச்சி போகுதிப்ப
உலைவைத்த கையோடு
தலை தெறிக்க வாறதுமார்?'
ஆச்சிக்கு நேரமில்லை
அடுப்படியில் வேலையில்லை'
அப்புவுக்கும் அவசரம்தான்
அடுத்த தொடர் இனி எப்ப?
வேறுமொரு நாலடியார்
வந்திருக்கு கிட்டடியில்
'காசெற்றுப் பலப்பலவாம்
காண்பவர் நாட் சிலவாம்
மெல்ல நினைக்கின்
பிணி பலவாம்
ஐசி பழுதாகும்
ஆட்கள் 'டபிள்'ஆகும்
Vocal
Trouble ஆகும்
ஆதலால் தெள்ளிதின் ஆராய்ந்து
அமைவுடைய காண்கவே
அது தரமா வலு திறமா
என்றே தெரிந்து!’
உன்னைத் தேடி!
என் உயிரின் உயிரே
எனதுடலின் நிழலே
நீ இல்லையேல் நானில்லை
பொய் இல்லையேல் மெய்யில்லை
வான் மறந்த நிலவாக
ஏன் பிரிந்தாய் எனைவிட்டு
கான் பிரிந்த மான் போல
தவிக்கின்றேன்
தறிகெட்டு
கடற்கரையில் சுடுமணலில்
கடுகதியில் பனைவெளியில்
பூங்காவில்
புதைகுழியில்
தேங்கிய நீர்க் குட்டையிலும்
'பங்கர்'முதல் பாங்குவரை
எங்கெல்லாம் நீ நுழைந்தாயோ
அங்கெல்லாம் உன் தடந் தேடி
அலைகின்றேன் மனங் குலைகின்றேன்
பருவம் வந்த நாள் முதலாய்ப்
பக்கத்துணை ஆனவன் நீ
பகலிரவுப் போதினிலும்
பிரியாத பாங்கன் நீ
'அவனா நீ?' என்றேதான்
ஆராரோ எல்லாமே
ஐயத்தோ டென் முகத்தை
ஆராய்ந்து விளிக்கின்றார்!
காணாமல் போன என்
கண்மணியே கருநிழலே
சொல்லாமல் போன என்
செவ்வகமே சித்திரமே!
வாட்டியது
போதுமினி
விரைந்தேகி வந்துவிடு
காட்டிடு உன் மதிமுகத்தை
மாட்டிவிட முன்னே நான்
விடைகாண முடியாத
வினாவாக விழிக்கிறேன்
தடை போடும் படைமுன்னே
தடுமாறித் தவிக்கிறேன்
அடையாளம் இல்லாத
ஆளாக எத்தனை நாள்?
கடைத்தேற உள்ளவழி
கண்முன் உன் தரிசனந் தான்
அடையாயோ எந்தன் கை
துடையாயோ என் துயரம்
தலையே என் தொலைந்திட்ட
தொல்லைதரு' ஐசீயே'!
('ஐசீ)
என்பது அடையாள அட்டையின்
ஆங்கிலச் சுருக்கம்)

பிரிவு
சேட்டைவிட்டு நிறம் பிரிந்தால் - அது
சேருமிடம் சமையலறை
சேட்டைவிட்டு நீ பிரிந்தால்
செருப்படிதான் அடுத்துவரும்
பூட்டைவிட்டுக் 'கீ' பிரிந்தால்
பாட்டையில்தான் படுக்கவரும்
பாட்டைவிட்டுப் பண் பிரிந்தால்
படுத்துமது காதராவி
ரோட்டை விட்டுக் கார் பிரிந்தால்
‘றோதை’யது கட்டையின் மேல்
தன்பாட்டில் கால்(காஸ்)பிரிந்தால்
Toilet ஐத் தேடவரும் -(Tube இல்)
தன்பாட்டில் கால் (Air ) பிரிந்தால்
தம்பிபாடு
கால்நடைதான்
AK )குழலை விட்டு ரவை பிரிந்தால்
கூட்டை விட்டு உயிர்பிரியும்
நாட்டை விட்டறம் பிரிந்தால்
நண்டும் நாட்டாமை செய்யும்
('றோதை' -சில்லுக்கான சிங்களச் சொல்.தமிழர்களின் வழக்கிலும்
கலந்துவிட்டது.)
இது பழங்கிடையனல்ல...புதுக்கவிதை...அதாவது புதிதாக
எழுதியது....
பாவசங்கீர்த்தனம்

அறியாமல் நானுமொரு பாவத்தைச்
செய்துவிட்டேன்
அது அற்ப பாவமா - இல்லை
சாவான பாவமா
உண்ணான அறியேன் நான்
உண்மையான சுவாமியார்(?)
ஆரேனும் இருந்தால்
அவருக்குத் தெரிந்திருக்கும்.
இப்படியாகவேநான் உள்ளதையே சொல்லியதால்
குருநிந்தை என்கின்ற
மற்றுமொரு பாவத்தை
மெய்யாகச்
செய்துமென்
பாவச் சுமையதனின்
பாரத்தை ஏற்றினனோ?
எதுவும் தெரியவில்லை
அவனேதான் அ.'.தறிவான்
அதிலும் ஒரு சந்தேகம்
'அவன்' என்று எவனொருவன்
உள்ளானோ உள்ளபடி?
ஐயையோ அநியாயம் !
தெய்வத்தை நிந்தித்தேன்
என்ற புது
அபவாதம்
வாதப் பிடிப்பது போல
வந்து படிந்ததுவோ?
வாயைத் திறந்தாலே
பாவப் படுகுழியில்
பாறியே வீழ்கின்றேன்.
விழுந்து கிடந்தவன் நான்
மறுபடியும் வருகின்றேன்
(உயிர்த்தல்ல.. உள்ளேன் ஐயா! )
முன்கதையைச் சொல்லியழ
அறியாமல் நான் ஒருத்தன்
புதுக்கவிதை போல
ஒன்றை
எழுதித் தொலைத்துவிட்டேன்
தொலைத்திருந்தால் தேவலையே!
தொலைக்காமல் போட்டுவிட்டேன்
போட்டுத் தொலைத்தது - என்
வீட்டுமுகப் புத்தகத்தில்
முன்செய்த பாவத்தை
முழுதாகச் சொல்லிவிடின்
மன்னிப்பார் மாண்புடையார் .
மன்னியுங்கள் கவிஞர்காள்!
கற்றறிந்த அறிஞர்காள்!- மறை
கழன்ற மடையன் நான் எழுதியதைக்கவிதைஎனக் கழன்றதற்கு மன்னியுங்கள்
.
கவிதைக்கு இலக்கணம்
கற்றறியாதவன்
நான்
கவிதை போல் இருக்கப் போய்
கவிதை எனச் செப்பி விட்டேன்.
கற்றவர் முன் துப்பிவிட்டேன்.
துப்பியதால் சிக்கிவிட்டேன்.
ஆப்பிழுத்த கவிபோல
ஆகிவிட்டேன் ஓரிரவில்
இத்தனை பேர் எதிரிகளா
இப்புவியில் எந்தனுக்கு?
அத்தனை பேர் கண்பட்டால்
போகேனோ புண்பட்டு?
கண்டறியாத என்
கவிதையினைக் கண்டுவிட்டு
like போட்டு like போட்டு
mike மோகன் போல என்னை
மௌனராகம் பாடவிட்டார்.
ஆனாலும் ஆறுதலாய் அறைவதற்கு
ஒன்றுண்டு
எனதடிசிற்
கினி யாளாய்
ஆனவள் ஒரு like தன்னும்
சொடுக்கவில்லை
சரிதானே!
‘ Cho 'க்கெல்லோ!
உங்களைப் போலத்தான்
எனக்குச் 'சோ'வைத் தெரியும்
ஆனாலும் அவருக்கு
என்னைத் தெரியாது
என்னைத் தெரியாது
என்றேதான் அவரும்
சொல்லவே மாட்டார்.
தெரியாதென்று
சொல்லத்
தெரியாதவருக்கு!
தெரியாதென் றொரு சொல்
இருக்கோ தெரியாது
அவரகராதி தனிலே!
நான் கவிதை எழுதுவதும்
அவருக்குத் தெரியாது
நான் எழுதுவது கவிதானா?
அ.'.தெனக்குத் தெரியாது
எல்லாம் தெரியுமென்றோர்
இறுமாப்பு அவருக்கில்லை
எனக்குமது போலவேதான்!
‘சோ' வோடென்றெனக்குச்
சச்சரவு ஏதுமில்லை
சங்காத்தம் தானுமில்லை
ஆனாலும் ஏனிப்போ
சோ'வோடு சொறிச் சேட்டை?
சோ'வுக்குத் தெரியுமது
ஈதெல்லாம் வெறும்
'ஷோ'
க்காட்டத் தானென்று
‘சோ'போட்ட பாட்டையிது
பாடைவரை தொடருமது!
குரல்கள் 
பூந்தோட்டச் செடிகள்
புஷ்பிக்கும் மலர்கள்
ஒவ்வொன்றும் ஒரு ரகம்
ஒரு நிறம் ஒரு மணம்
வானலையில் வளம் வரும்
குரல்களும் அதுபோலே
கம்பீரிக்கும் ஒன்று
கனிவூறும் பிறிதொன்று
கலகலக்கும் மற்றொன்று
சளசளக்கும்- சீறும் வளவளக்கும்- வாயடிக்கும வகைவகையாய்ப்
பலகுரல்கள்
சத்தமின்றிப் பூக்கும்
அந்திமந்தாரையும்
அருமையாய் ஓரிருவர்
இதயத்தில் இடம்பிடிக்கும்
மூலையில் இருந்துங் கூட
முணுமுணுக்கும் குரலையும்
முனைப்புடன் கேட்கச்சில
காதுகள் தீட்டப்படும்
பாராட்டிப் புளகிக்கச்சில
பேனாமூடிகள் திறக்கப்படும்
மோனத்தில் கசியும் சில
மோகனக் குரல்களின்
மாயக் கவர்ச்சியில்
மயங்கும் சில மனதுகளும்
மௌனங்கள் கூடச்சில
மின்னல் போதுகளில்
அர்த்தப் படுவதுண்டு
அது கேட்கப்படும்போது
என்குரலும் சில நேரம்
எட்டக் கூடியவரை
எட்டியபடி தானிருக்கும்
அது பேசப்படாத போதுங் கூட.