வானொலி எழுத்தாளர்களின்
நாடக நூல்கள்
தமிழகத்தைப் பொறுத்த மட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக நூல்கள் வெளிவந்துள்ள போதிலும் வானொலி நாடக நூல்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில் 30 க்கும் மேற்பட்ட வானொலி எழுத்தாளர்களின் 50 க்கும் குறை யாத நாடக நூல்கள் வெளி வந்துள்ளமையானது எமக்குப் பெருமை சேர்ப்பதே!
இலங்கை நாடக வரலாற்றைப் பொறுத்த மட்டில் சமூக நாடகங் களின் தோற்றப்பாட்டுக்கும் பேச்சு வழக்குத் தமிழின் பயன்பாட்டுக் கும் கால்கோளிட்டவரெனப் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையே இனம் காணப்படுகிறார்.
‘நாடகம் என்பது உலக இயல்பாய் உள்ளது
உள்ளபடி காட்டுவது ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் பேசல் வேண்டும்'
எனத் தமது நோக்கைச் செவ்வனே வரையறை செய்து கொண்டவர் அவர்
வானொலிக்கென அவர் நாடகங்கள் எழுதாவிட்டாலும் மேடைக் கென அவர் எழுதிய நாடகங்கள் அவசியமான மாற்றங்களுடன் வானொலியிலும் நடை பயின்றுள்ளன.
அவரால் எழுதப்பட்ட நாடக நூல்களுள் 'உடையார் மிடுக்கு' உட்பட நான்கு நாடகங்களை உள்ளடக்கிய 'நானாடகம்'
[1930], மற்றும் 'பொருளோ பொருள்', 'தவறான எண்ணம்' எனும் இரு நாடகங்களை உள்ளடக்கிய 'இரு நாடகம்' [1952] எனும் இரு நூல்களும் சமகால [சமூக] நாடகங்களுக்கு மாதிரிகளாக அமைவன.
இவற்றுள் 'உடையார் மிடுக்கு' 'பொருளோ பொருள்' என்பன வானொலி நாடகங்களாகவும் நடிக்கப்பட்டு ஒலிபரப்பாயின. ‘சங்கிலி' [1953] யும் 'மாணிக்கமாலை' [1952] யும் அவரது குறிப்பிடத் தக்க மற்றுமிரு நாடக நூல்கள்.
ஈழத்துச் சிறுகதையுலகின் பிதாமகராகத் திகழும் 'இலங்கையர்கோன்' செ.சிவஞானசுந்தரம் வானொலிக்கென எழுதி எட்டு வாரங்கள் தொடராக ஒலிபரப்பான 'மாதவி மடந்தை' - இலக்கிய நாடகம், மேடை நாடக நூலாக 1958 இல் வெளியானது. 1957 இல் வெளியிடப்பட்ட அவரது நாடக நூல் 'மிஸ்டர் குகதாசன்'. அதுவும் வானொலியில் தொடராக ஒலிபரப்பான நாடகமே!
பிரபல நாடக ஆசானும் நடிகரும் எழுத்தாளருமான 'கலைப் பேரரசு' A.T. பொன்னுத்துரை சானாவின் 'பதியூர் ராணி' யுட்படப் பல மேடை நாடகங்களில் நடித்தவர். மன்ற நாடகங்களை வானொலியில் 'அரங்கேற்ற' 1967 இல் சானா ஒரு சந்தர்ப்பம் அளித்தார். அதில் கலைப் பேரரரசின் 'இறுதிப் பரிசு' என்ற நாடகம் அவரது குரும்பசிட்டி, சன்மார்க்க நாடக மன்றத்தினரின் நடிப்பில் ஒலிபரப்பானது. அதில் புலவராக கவிஞரும் நடிகருமான வீ.கந்தவனம் நடித்தார். சங்ககால இலக்கியக் கதாபாத்திரமான குமண மன்னனின் உதார குணத்தை விதந்துரைக்கும் நாடகமான ‘இறுதிப் பரிசு' அது ஒலிபரப்பான 1967 இலேயே நூலுருப் பெற்றுவிட்டது. ஆயினும் அதுவும் மேடை நாடக வடிவத்திலேயே நூலானது!
1991 இல் வெளியிடப்பட்ட அவரது இன்னொரு நூல் 'மயில் - இரு நாடகங்கள்'
என்பது. அதில் ஒன்றான 'தாளக் காவடி'யும் வானொலியில் ஒலிபரப்பான நாடகமே. அது பற்றி நூலாசிரியர், 1972 இல் இலங்கை வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டு 1973 ஒக்டோபரில்
இரு தடவைகள் ஒலிபரப்பப்பட்ட நாடகமதெனக் குறிப்பிடுகிறார். 'பஞ்ச பூதங்கள்' இவரெழுதி ஒலிபரப்பான மற்றொரு வானொலி நாடகம்.
என்னவோ தெரியவில்லை ஆரம்பகால எழுத்தாளர்கள் பலரும் தமது நாடகங்களை வானொலி நாடக நூல்களாக வெளிக் கொணரக் கொஞ்சம் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது.
எஸ்.பொ., இளங்கீரன், நந்தி, கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராஜன், ச.அம்பிகைபாகன், இ.முருகையன்
என நாடறிந்த எழுத் தாளர்கள் பலரும் இப்பட்டியலில் அடங்குவர்.
'வலை' எனும் தலைப்பில் எஸ்.பொ.வால் வானொலிக்கென எழு தப்பட்ட ஒரு மணி நேர நாடகம் பின்னர் மேடைக்கேற்ப சானாவால் மாற்றியமைக்கப்பட்டு 'சாணக்கியன்' ஆக 1968 இல் மேடையேறியது. 1
972 இல் அது 'வலை' எனும் மகுடத்துடன் மேடை நாடக நூலாக வெளியிடப்பட்டது. எஸ்.பொ.வின் 'முதல் முழக்கம்' எனும் மற்றொரு வானொலி நாடகமும் நூலுருவானதாக எழுத்தாளர் அன்ரனி ஜீவா குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் 'நந்தி'யின் [செ சிவஞானசுந்தரம்] 'குரங்குகள்' முதலில் சிறுகதையாக வெளியாகிப் பின்னர் வானொலி நாடகமாகி இறுதியில் மேடைக்கான மாற்றங்களுடன் 1975 இல் அச்சு வாகன மேறியது.
பிரபல சிறுகதை எழுத்தாளர்
கனக செந்திநாதனின் 'ஒரு பிடி அரிசி’' யும் அவ்வாறே, சிறுகதை - வானொலி - மேடை என வடிவ மாற்றம் பெற்று 1976 இல் நூலுருப் பெற்றதெனத் தமது 'ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி' எனும் நூலில் நூலாசிரியர் 'சொக்கன்' குறிப்பிடுகிறார்.
'நீதியே நீ கேள்!' எனும் தொடர் நாவலை எழுதி வாசகர்களை வசப்படுத்திய எழுத்தாளர் 'இளங்கீரன்'
சு.’.பைர். 1976 - 1979 காலப் பகுதியில் அவரெழுதி இலங்கை வானொலியில் ஒலிபரப்பான 'மகாகவி பாரதி', 'கவிதை தந்த பரிசு', 'நீதிக்காகச் செய்த அநீதி' எனும் முத்தான மூன்று நாடகங்களின் தொகுப்பு நூல் - 'தடயம்'.
வானொலியில் கவிஞர்களின் பங்களிப்புக் கணிசமானதாக இருந்ததெனக் கூறமுடியாது. அவர்கள் சிலரது நாடகங்கள் நூலுருப் பெற்ற போது அவையும் மேடைக்கமைய மாற்றியமைக்கப்பட்டு வெளியானமையை அவதானிக்க முடிகிறது.
'அம்பி'எனப் பலராலும் அறியப்பட்ட கவிஞர் ச.அம்பிகைபாகனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலில் மேடை நாடக நூலாக 1970 இல் பிரசுரமாக்கிப் பின் மேடையில் அரங்கேறி அதன் பின் காற்றலைகளிற் கதை சொன்னது. மூன்று கவிதை நாடகங்களை உள்ளடக்கிய அவரது 'அந்தச் சிரிப்பில்' இடம்பெற்ற யாழ்பாடி' பின்னர்
வானொலி மூலம் கவிமழை பொழிந்தது!
'நீலாவணன் கவிதை நாடகங்கள்' எனும் நூலில் இடம் பெற்றுள்ள கவிஞர் நீலாவணனின் நான்கு கவிதை நாடகங்களுள் 'மழைக்கை' மட்டும் வானொலியை ஆரத் தழுவியது.
வானொலிக்கெனப் பல நாடகங்களை எழுதியவர் கவிஞர் இ.முருகையன். அவரது கவிதை நாடக நூல்களும் சில வெளியாகியுள்ளன. அவற்றுள் 1961 இல் வெளியான 'தரிசனம்' வானொலியையும் தரிசித்ததாக அறியமுடிகிறது.
ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ ஜூலியட்' எனும் நாடகத்தைத் 'தான்தோன்றிக் கவிராயர் ' எனும் சில்லையூர் செல்வராசன் தமிழில் வானொலிக்கெனத் தழுவி எழுதினார். அது 1981 இல் அப்துல் ஹமீடின் தயாரிப்பில் வானலைகளில் தவழ்ந்தது. ஆயினும் அதுவும் 1993 இல் நூலுருக் கொண்ட போது மேடை நாடக நூலாகவே வடிவங் கொண்டது!
திரைப்படச் சுவடியாக முதலில் 1971 இல் வெளியான அவரது 'தணியாத தாகம்' பின்னர் வானொலி நாடகமாக வாராவாரம் வான லைகளை வசப்படுத்தி நேய நெஞ்சங்களை நெக்குருகச் செய்தது!
பிரபல வங்கக் கவிஞரும் நாடகாசிரியருமான ரவீந்திரநாத் தாகூர் தாமெழுதிய நாடகங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் தாமே மொழி பெயர்த்து வெளியிட்டார். அவ்வாறான நாடகங்கள் நான்கை நம் நாட்டு எழுத்தாளர். Y. முத்துக்குமாரசாமி தமிழுருவாக்கி 'வேந்தனும் அரசியும்' எனும் தலைப்பில் 1973 இல் நூலாக்கி வெளியிட்டுள்ளார். அவற்றுள் 'வேந்தனும் அரசியும்' தவிர மற்றைய மூன்று நாடகங்களுமான 'சித்ரா', 'பலி', 'செவ்வலரிகள்' என்பன முறையே 1961,1962, 1965 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலி[யில்] நாடகங்களாக ஒலிபரப்பாகியுள்ளன.
'வரணியூரான்' கணேசபிள்ளையின் தொடர் நாடகமான 'அசட்டு மாப்பிளை' அது ஒலிபரப்பான 70 களிலேயே சூட்டோடு சூடாக அச்சு வாகனமும் ஏறிவிட்டது. 1975 இல் வர்த்தக சேவையில் அவரது 'இரை தேடும் பறவைகள் ' 50 வாரங்கள் தொடராக வலம் வந்தது. 18 ஆண்டுகளின் பின் 1993 இல் 50 அங்கங்களையும் 686 பக்கங்களையும் கொண்ட 'கனமான' ஒரு நூலாக அதை வெளிக்கொணர்ந்து வானொலி நாடக நூலாக்கத்தில் ஒரு சாதனை படைத்தார் வரணியூரான்!
பழம்பெரும் வானொலி எழுத்தாளரான பாலாம்பிகை நடராஜா பின்னாளில் 90 களில் நாடக எழுத்துலகில் மீள் பிரவேசம் செய்த போது எழுதிய பதினொரு நாடகங்களின் தொகுப்பு நூல் 'சலங்கை ஒலி'.
துறை நீலாவணையைச் சேர்ந்த S..முத்துக்குமாரன் சானா காலத்து நாடக எழுத்தாளர். 1961-1969 காலப்பகுதியில் புராண,இலக்கிய, ராஜா ராணிப் புனைவு நாடகங்கள் சிலவற்றை அவர் வானொலிக்காக எழுதியிருந்தார். அவற்றுள் 45 நிமிட நாடகம் ஒன்றுடன் 30 நிமிட நாடகங்கள் நான்கும் 15 நிமிட நாடகங்கள் ஐந்தும் என மொத்தம் பத்து நாடகங்களைத் தொகுத்து சுமார் 40 வருடங்களின் பின் 2008 இல் நூலுருவாக்கித் தந்திருக்கிறார். அந் நாடக நூல்தான் 'வீர வில்லாளி'!
முஸ்லீம் சேவையில் ஆரம்ப காலத்தில் பல நாடகங்களை எழுதியவரான எழுத்தாளர் எஸ். முத்துமீரானின் சில நாடகங்களின் தொகுப்பு நூல்
'மானிடம் சாகவில்லை!'
[2001 ] அதில் இலங்கை வானொலித் தமிழ்ச் சேவைக்காக அவரெழுதி முறையே 1958,1966,1980 களில் ஒலிபரப்பான 'காதலும் கருணையும்', 'வடிகால்', 'மாமன்னன் ஒளரங்கசீப்' முதலான
மூன்று நாடகங்களும் இடம்பெற்றுள்ளன.
1980 இல் எழுத ஆரம்பித்துத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காது எழுதியவர் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை. அதிகளவான வானொலி நாடகங்களை எழுதியவராக அவரது பெயர் முன்னிலைப் படுத்தப்படுவது வழக்கம். 2005 இல் 'இமயம்' எனும் தமது வானொலி நாடகத் தொகுப்பு நூலுக்காக இலங்கை சாகித்ய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்டவர் அவர்.
கெட்டிக்காரர்கள்', 'முதலாம் பிள்ளை', 'வீடு' , 'எங்கள் நாடு', 'யாழ்ப்பாணமா கொழும்பா?' , 'மழை வெள்ளம்', 'இமயம்' என ஏழு தொகுப்புகளில் 1988 – 2004 வரையான காலப்பகுதியில் எழுதிய 51 சம கால யதார்த்த வானொலி நாடகங்களை உள்ளடக்கி அவர் வெளியிட் டுள்ளார்.
1969 இல் நடாத்தப்பட்ட முதலாவது இலங்கை வானொலி நாடகப் போட்டியில் 'நீதியின் நிழலில்' எனும் துப்பறியும் நாடகத்துக்கும் 2001 இல் 'அமுது' சஞ்சிகை நடத்திய படைப்பாற்றல் போட்டியில் 'இது ஒரு வழிப் பாதை' எனும் சமகால வானொலி நாடகத்துக்குமாக முதற் பரிசுகளை ஈட்டிக் கொண்டவரான 'மறைமுதல்வன்' எனும் G.P.வேதநாயகம் 1977 - 1980 காலப்பகுதியில் தாம் எழுதிய 'சிறுவர் மலர்' நாடகங்கள் பதினேழின் தொகுப்பை 'நாளைய நாயகன்' எனும் தலைப்பில் 2000 ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அவரெழுதிய 'கதம்பம்' நாடகங்களுட்பட வானொலி, மேடை, தொலைக்காட்சி – நாடகங்கள் பதினொன்றின் தொகுப்பாக 'கழுதைக்கும் காலம் வரும்' எனும் நகைச்சுவை நாடகத் தொகுப்பு நூல் 2005 இல் வெளியாகியுள்ளது. 90 களின் பின் அவரெழுதி வானொலியில் வலம் வந்த 'கந்தசாமி + நல்லம்மா' குடும்ப நகைச்சுவை நாடகங்கள் ஏழின் தொகுப்பு - 'காதல் போயின் கல்யாணம்!’ 2020 இல் நூலுருவானது.
முகத்தார் வீடு' நாடகத்தை ஐந்து ஆண்டுகள் தொடராக எழுதி நடித்து 'முகத்தார்' பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டவர் S.ஜேசுரட்ணம். இந்நாடகத்தின் சிறப்பான ஐந்து அங்கங்களையும் மற்றும் நான்கு வானொலி நாடகங்களையும்
மூன்று மேடை நாடகங்களையும் ஒன்று சேரத் தொகுத்து 1993 இல் அவர் படைத்துள்ள நகைச்சுவை விருந்து - 'முகத்தார் வீட்டுப் பொங்கல்'!
.
சிறுகதை எழுத்தாளரும் நாடகாசிரியருமான ஜோர்ஜ் சந்திர சேகரனின் பரீட்சார்த்த நாடகங்கள் சில 1976 இல் நாடக உதவித் தயா ரிப்பாளராக இருந்த பி விக்னேஸ்வரனால் தயாரிக்கப்பட்டு ஒலிபரப் பாயின. அவ்வாறாக ஒலிபரப்பானவற்றுள் ஒன்று 'சொர்க்கமும் நரகமும்'. வானொலியில் ஒரு மணி நேர நாடகமாக ஒலித்த அது பின்னர் 1979 இல் இலங்கை வானொலித் தமிழ்ச் சேவையினர் நடாத்திய மேடை நாடக விழாவில் அரங்கேறியது.
பிரெஞ்சு நாடகாசிரியர் இயூஜின் அயன்ஸ்கோவின்[Frenzy for the two or
more by Eugene Ionesco] அபத்த நாடகமொன்றைத் தழுவி தமிழில் ஜோர்ஜ் எழுதிய 'நத்தையும் ஆமையும்' எனும் நாடகமும் 1976 இல் வானொலியில் ஒலிபரப்பானது. பின்னரது இ.ஓ.கூ.தாபனம் 1992 இல் நடாத்திய நாடக விழாவில் மேடையேறியது. மேற்குறிப்பிட்ட இரு நாடகங்களையும் உள்ளடக்கிய 'அபத்த நாடகம்'
எனும் நாடக நூல் 1999 இல் ஜோர்ஜ் சந்திரசேகரனால் வெளியிடப்பட்டது.
வானொலி நாடக நூலுக்கென முதன் முதலில் இலங்கை சாகித்ய மண்டலப் பரிசைப் பெற்றவர் வவுனியாவைச் சேர்ந்த 'அகளங்கன்' எனும் என்.தர்மராஜா. ‘அன்றில் பறவைகள்'[1992], 'இலக்கிய நாடகங்கள்'[1994],
கூவாத குயில்கள்'[2001],'கங்கையின் மைந்தன் '[2009] எனும் நான்கு வானொலி நாடகத் தொகுப்பு நூல்களின் சொந்தக்காரர் அவர். முதல் மூன்று தொகுதிகளில் 1991, 1996, 1997 என 90 களில் வானொலிக்கு அவரெழுதிய இலக்கிய , இதிகாச, சமகால நாடகங்கள் 15 தொகுக்கப் பட்டுள்ளன. 2009 இல் வெளியான நூலில் 1996 இல் ஒலிபரப்பான 'கங்கையின் மைந்தன்' மற்றும் 1998 இல் ஒலிபரப்பான 'வாலி' என்பனவற்றுடன் மேடைக்கான நான்கு இலக்கிய, இதிகாச நாடகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
திருமலை த. சித்தி அமரசிங்கம் வானொலி நடிகராகவும் தெரிவானவர். வானொலிக்கென நாடகங்கள் சிலவும் எழுதியவர். 'கீக் கிரட்டீஸ்',
'தொழிலுக்குத் தொழில்' போன்ற நகைச்சுவைக் குறு நாட கங்களை 'கதம்பம்' நிகழ்ச்சிக்கு எழுதியவர். 'இராவண தரிசனம்' என்னும் இவரது மேடை நாடகம் பின்னர் வானொலிக்கென மாற்றி எழு தப்பட்டு 1997 இல் வானொலியிலும் ஒலிபரப்பானது. அவரது ஈழத்து இலக்கியச் சோலை'ப் பதிப்பகம் மூலம் பின்னரது நூலாகவும் வெளி யானது.
2000 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனம் நடத்திய பவள விழா நாடகப்
போட்டியில் இரண்டாவது
பரிசு பெற்ற நாடக எழுத்தாளர் பா.
சிவபாலன். 1991 – 1995 காலப் பகுதியிலும் 2001 இலும் அவரெழுதிய ஐந்து 30 நிமிட நாடகங்களும் கதம்பம், கிராமிய நிகழ்ச்சிகளுக்கென அவரெழுதிய மூன்று குறுநாடகங்களும் உட்பட மொத்தமாக எட்டு
நாடகங்களின் தொகுப்பு நூல் தான் 'நாளை
நல்ல நாள்’[2001].
தனது 'முகவரியைத் தேடுகிறார்கள்’ [2005] சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதை, நாவலாசிரியரான சோ.ராமேஸ்வரன் எழுதிய மூன்று சமூக, நகைச்சுவை
வானொலி நாடகங்களின் தொகுப்பு 'கானல் நீர் கங்கையாகிறது' 2006 இல் நூலுருப்பெற்றது.
‘நெல்லை லதாங்கி’ என்னும் புனைபெயரில் ஆனந்தராணி நாகேந்திரன் எழுதி 2007 இல் வெளியிட்டுள்ள வானொலி நாடகங்களின் தொகுப்பு நூல் 'எதிர்பார்க்கைகள்’. இதில் 1997,1998 காலப் பகுதியில் அவரெழுதி இலங்கை வானொலியில் ஒலிபரப்பான ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜோர்ஜ் சந்திரசேகரன் காலத்தில் 90 களில் வானொலி நாடக நடிகராகவும் எழுத்தாளராகவும் பரிணாமம் பெற்ற 'மறவன் புலோ' எஸ். அம்பலவாணர் இலங்கை வானொலிக்கெனத் தாமெழுதிய நாடகங்கள் சிலவற்றை 'சட்டத்தின் திறப்பு விழா'[2016], சிறந்த சுய நாடக இலக்கியத்துக்கான சாகித்ய விருதை வென்ற 'மன வைரம்'
[2018 ] மற்றும் 'விதை' [2019] ஆகிய மூன்று நாடகத் தொகுப்பு நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கல்விச்சேவையில் 'சமூகக் கண்ணாடி' எனும் நிகழ்ச்சியில் 1994 இல் ஒலிபரப்பான எட்டு நாடகங்களின் தொகுப்பு நூல்தான் 'ஈரமுள்ள காவோலைகள்'
[1996]. நாடகாசிரியர் M.P.செல்வவேல் அவை பற்றிச் சமய, சமூக, விஞ்ஞான நாடகங்கள் எனக் குறிப்பிடுகிறார். நாடகம் ஒலிபரப்பான காலத்தில் கல்விச் சேவைப் பணிப்பாளராக இருந்தவர் அரச ஐயாத்துரை. நாடகங்களைத் தயாரித்து வழங்கியவர் த. டே. பத்மகைலைநாதன்
‘ஷர்மிளாவின் இதய ராகங்கள்' திரைப்படக் கதை வசன கர்த்தாவும் தயாரிப்பாளருமான பேராதனை A.A. ஜுனைதீன் 'எனது வானொலி நாடகங்கள்'
எனும் வானொலி நாடகத் தொகுப்பு நூல் ஒன்றை 1999 இல் வெளியிட்டார். அதில் முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான ஐந்து நாடகங்களும் எஸ். கணேஸ்வரனின் தயாரிப்பில் கல்விச் சேவையில் ஒலிபரப்பான 'பாசம் என்பது எது வரை?', 'நல்ல முடிவு', 'தேடி வந்த பழி' முதலான மூன்று நாடகங்களுமாக எட்டு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன
. சானா காலத்தில் எழுத ஆரம்பித்து R.யோகராஜன் காலம் வரை தொடர்ந்து சளைக்காது வெற்றிகரமாகப் பல நாடகங்களை இலங்கை வானொலித் தமிழ்ச் சேவைகளில் எழுதிக் குவித்தவர் M.அஷ்ரப்கான். முஸ்லீம் சேவையில் அவர் பணி மகத்தானது. முஸ்லீம் சேவைக்கென அவரெழுதிய காத்திரமான பத்து நாடகங்களின் தொகுப்பு நூல் - 'முள்'!
முஸ்லீம் சேவையில் நாடகங்களை எழுதி வந்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப், 'பொன்னாடை' [1988]'
எனும் வானொலி நாடக நூலையும், திக்குவல்லை கமால் ' புகையில் கருகிய பூ'[ 2001] எனும் நாடக நூலையும் வெளியிட்டுள்ளனர். அபுகாகம பழீலின் 'கோல மிடும் மேகங்கள்'
2011 இல் வெளியான வானொலி நாடகத் தொகுப்பு நூல்.
மொத்தமாக 33 வானொலி நாடக எழுத்தாளர்களின் 53
வானொலி நாடக நூல்கள். வானொலி
நாடகங்களிற் சாத்தியமான பல்வேறு வடிவங்களையும் உள்ளடக்கியனவாக இந்நூல்கள் உள்ளன. சமகால எதார்த்த நாடகங்கள்,
மிகை உணர்வுடன் கூடிய சமூக நாடகங்கள், எள்ளி நகையாடும் நையாண்டி நாடகங்கள்,
அபத்த நாடகங்கள், இலக்கிய,
வரலாற்று, புராண
வகைப்பட்ட நாடகங்கள், கவிதை
நாடகங்கள், கிராமிய நாடகங்கள், விஞ்ஞான
நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், தொடர் நாடகங்கள்
என்று வகைமாதிரிக்கு ஒரு
சிலவற்றையாவது தெரியக்
கூடியவாறு பரந்து பட்ட
வீச்செல்லை கொண்டனவாக
நம்மவரின் வானொலி நாடக
நூல்கள் திகழ்வது உண்மையிலேயே பெருமைப்படக் கூடிய
விடயம்தான்
மலையகச்
சிறுவர்களின் வாழ்வைப் பகைப்புலமாகக் கொண்ட, அவர்களின் பிரதேச வழக்கில் எழுதப்பட்ட சில நாடகங்கள் ‘மறை முதல்வன்'
G.P. வேதநாயகத்தின் 'நாளைய நாயகன்' நாடக
நூலில்
இருந்த போதிலும் முற்று முழுதாக மலையக,
மட்டு நகர் பிரதேச வாழ்வைக் களமாகக் கொண்ட சமகால யதார்த்த நாடகங்களும் ,
துப்பறியம் நாடகங்களும், மர்ம நாடகங்களும், உளவியல் சார்பான நாடகங் களும், வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய விஞ்ஞானப் புனைவு நாடகங்களும் தாம் இன்னும் நூலுருப் பெறவில்லை. காலப் போக்கில் அவையும் வரவேண்டும் ; வரும்.
நவீன விஞ்ஞான மாற்றங்களை உள்வாங்கி K.S.பாலச்சந்திரனும்
அருணா செல்லத்துரையும் ராஜா கணேசனும் M.C.ரஸ்மினும் தமது நாடக ஆக்கங்களை ஒலிப் பேழைகளில்/ இறுவெட்டுகளில் வெளியிட்டுள்ளமையும் நோக்கற்பாலது.
2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்து இலங்கை வானொலியின் நாடக முயற்சிகள் சிறிது தளர்வுற, வானொலி நாட கங்களுக்கு முட்டுக் கொடுப்பது போல் சக்தி, சூரியன் பண்பலை வானொலிகளும் காலத்துக்குக் காலம் நாடகங்களை ஒலிபரப்பி வந்துள்ளன.
சக்தி
வானொலியில் 'சுவிஸ் கொன்ராக்ட்' நிறுவன
அனுசரணையுடன் இடம்பெற்ற 'நாளை நமதே' எனும் விளம்பரதாரர் நிகழ்ச்சியில் எஸ்.எழில்வேந்தனின் தயாரிப்பில் 2001 இன் பிற்கூற்றில் இருந்து 2004 இன் முற்கூறு வரையான காலப்பகுதியில் சுமார் 40 , பதினைந்து
நிமிட நேரக் குறுநாடகங்களை நானே எழுதி நடித்துமுள்ளேன்.
சூரியன்
பண்பலை வானொலியின் பணிப்பாளராக
லோஷன் என்கிற
A.V. வாமலோசனன் கடமையாற்றிய
காலத்தில், 2006 -
2007 காலப்பகுதியில் வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அரை மணி நேர நாடகங்களை ஒலிபரப்பி வானொலி நாடகத்துறையில் ஒரு
புரட்சியையே அவர் ஏற்படுத்தியிருந்தார். அதில் ஒலிபரப்பான நாடகங்களுள் 25 க்கும் கூடுதலாக
நானும் ஏனையவற்றை S.செல்சேகரன், M.C. ரஸ்மின், A.R. திருச்செந்தூரன் , ராஜா கணேசன் போன்றோரும்
எழுதியிருந்தோம்.
2001 இன் பின் மூத்த அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம்,
லூக்கஸ் திருச்செல்வம்,
இளைய தலைமுறை ஒலிபரப்பாளரும் நடிகருமான சிவராஜா தக்கீசன் போன்றோரின் வழிகாட்டலில் இலங்கைத் தமிழ் வானொலி நாடக உலகம் கண்ட ஏற்ற இறக்கங்கள் பற்றி அறிந்தவர்கள் தொடரட்டும்.