இலங்கை வானொலியின் தமிழ் நாடக வரலாறு
[1951 - 2001 வரையான முதல் 50 ஆண்டு காலம்]
‘கலாஜோதி' சானா சகாப்தம் [1951 – 1973]
இலங்கை வானொலியில் அதாவது அன்றைய ரேடியோ சிலோனில் தமிழ் நாடகங்களின் முதற் தயாரிப்பாளராக, பிதாமகரா கத் திகழ்ந்தவர் ‘கலாஜோதி’ சானா என அறியப்பட்டS. சண்முகநாதன் அவர்கள். ஒரு நடிகராக, எழுத்தாளராக, ஓவியராக, வானொலி, மேடை நாடக நெறியாளராக, தயாரிப்பாளராக - பல்துறை மேதைமை மிக்கவ ராக மிளிர்ந்த 'சானா' அவர்கள் 51 இல் இருந்து 71 வரையான காலப்
பகுதியில் மிக்க அர்ப்பணிப்புடன் தாமேற்ற நாடகத் தயாரிப்பாளர் பணியைச் செவ்வனே செய்து முடித்தவர்.
ஈழத்துச் சிறுகதைத் துறையின் பிதாமகராகப் போற்றப்படும் சிவஞானசுந்தரம் எனும் இலங்கையர்கோனே எமது வானொலி நாடக எழுத்தாளர்களுக்கும் பிதாமகராகத் திகழ்கிறார். அவரெழுதிய முதலா வது வானொலி நாடகம் 'கீசக வதம்' எனும் புராண நாடகம். பல்வேறு வகையான நாடகங்களையும் எழுதிய அவர் யாழ் பிரதேச வழக்கில் மட்டுமல்லாது மலையகப் பிரதேச வழக்கிலும் ஏன் முஸ்லீம் வழக்கி லும் கூட எழுதும் ஆற்றல் பெற்றவராக இருந்தார்.
நகைச்சுவைத் தொடர் நாடகமாக ஒலிபரப்பான அவரது 'லண்டன் கந்தையா'வில் பல்வேறு பிரதேச வழக்குகளையும் பேசும் பாத்திரங்களைக் கலந்துகட்டி உலவ விட்டார். 'சானா'வைக் கதாநாயக ராக மனதில் வரித்துக் கொண்டு அவரெழுதிய 'லண்டன் கந்தையா' வைத் தயாரித்து நடித்து அப்பாத்திரத்துக்கு உயிரூட்டியதால் 'சானா' வும் அதை ரசிகர்களின் மனம் கவரும்படி எழுதியதால் இலங்கையர் கோனும் புகழ்பெற்றனர்.
இலங்கையர்கோனின் 'விதானையார் வீட்டில்', 'மிஸ்டர் குக தாசன்', 'கொழும்பில் கந்தையா’ போன்ற தொடர் நாடகங்களும் அன்றைய நேயர்களின் பேரபிமானம் பெற்றவை. பேராசிரியர் கண பதிப்பிள்ளை அவர்கள் எழுதி நெறிப்படுத்தி, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மேடையேற்றிய நாடகங்கள் பற்றித் தமிழ் நாடக அபிமானி கள் நன்கறிவர். அவரது 'உடையார் மிடுக்கு' என்ற நாடகம் ஆரம்ப கால த்தில் தொடராக வந்த நாடகங்களுள் குறிப்பிடத் தக்கது.
தமிழ் நாட்டிலும் ஏன் சிங்கப்பூர், மலேசியாவிலும் கூட பரவ லான நேயர்களை ஈர்த்திருந்த 'ரேடியோ சிலோன்' நாடக அரங்கத் துக்கு தமிழகத்தில் இருந்தும் சில எழுத்தாளர்கள் நாடகப் பிரதிகளை எழுதி வந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் திருச்சி சந்தர். அன்றைய காலத் தமிழ்த் திரைப்படங்களில் எழுத்துநடை சார்ந்த ஒரு வகைத் தமிழே பெரும்பாலும் பேசப்பட்டது. பிரதேச வழக்குகளைக் கொச்சைத் தமிழ் எனப் படித்த [பண்டித] வர்க்கத்தினர் இழித்துரைத்து வந்த காரணத்தால் அக்கால எழுத்தாளர்களும் 'நல்ல' தமிழில்தான் நாடகங்களும் எழுதப்பட வேண்டும் எனக் கருதியோ என்னவோ செயற்கையான ஒரு தமிழ் உரையாடல் நடையை வரித்துக் கொண் டிருந்தனர். திருச்சி சந்தரும் அத்தகைய நடையில் எழுதியவர்தான். அவரது 'வளையாபதி'
எனும் நகைச்சுவை நாடகம் ஒன்று மட்டும் 'ஒலித்தட்டில்' பதியப் பெறும் பாக்கியம் பெற்றதால் பின்னைய காலத் திலும் அடிக்கடி ஒலிபரப்பாகி நினைவிலும் நிலைத்துவிட்டது.
நமக்கான தனித்துவத்துடன் தமிழில் தரமான நாடகங்கள் ஒலிபரப்பாக வேண்டும் எனும் உத்வேகம் கொண்டவராக 'சானா' இருந்துள்ளார் என்பதை அவரது செயற்பாடுகள் உணர்த்துகின்றன. அவரது காலத்தில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள்கூட சில மொழி பெயர்ப்பு நாடகங்களை எழுதியதாகத் தெரிகிறது. பல நல்ல சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகஞ் செய்து தட்டிக் கொடுத்த அவர் சிறுகதை ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவர் நாட கங்கள் எழுதியுள்ளார் என்றால் அதற்கு 'சானா'வின் தூண்டுதலே காரணமாக இருந்திருக்க முடியும்.
பேராசிரியரைப் போலவே தமிழறிஞர் இ. இரத்தினமும் மொழி பெயர்ப்பு நாடகங்களிலும் இலக்கிய நாடகங்களிலும் ஈடுபாடுற்றவ ராக இலங்கியவர். பேராசிரியர் கா. சிவத்தம்பியும் அந்நாளில் அருந் தலாக எழுதியுள்ளார். ஆயினும் நடிப்பில்தான் அவர் வெற்றிக் கொடி நாட்டினார். அந்நாளில் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்த நாவற்குழியூர் நடராசன் நாடறிந்த ஒரு மரபுக் கவிஞர், கவிதை நாடகங்கள் எழுதுவதில் அவரும்
முனைப்புக் காட்டியுள்ளார்
ஈழத்துச் சிறுகதை நாவல் கவிதை முதலான நவீன இலக்கியத் துறைகளில் கால் பதித்த பலரையும் வானொலி நாடகத் துறைக்குச் 'சானா' இழுத்து வந்துள்ளார். எஸ். பொன்னுத்துரை, வ. அ. இராசரத்தி னம், சு. வேலுப்பிள்ளை, இளங்கீரன் சுபைர், சொக்கன், முல்லை மணி, நந்தி, நடமாடி, கவிஞர்கள் முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், அம்பிகைபாகன், பா. சத்தியசீலன் போன்றவர்களும் மலையக எழுத்தாளர்களான வீர. பழனிச்சாமி, பி. நல்லுசாமி, இரா, சிவலிங்கம், என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப்,
A.P.V. கோமஸ் போன்றவர்களும் 'சானா' சகாப்தத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.
பின்னாளில் இலங்கை வானொலித் தமிழ்க் கல்விச் சேவை யில் இயக்குனராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய அரச ஐயாத் துரை அவர்களும் அந்நாளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னா ளில் முஸ்லீம் சேவைப் பணிப்பாளராக உயர்ந்த எம். ஏ .கபூர் அவர்க ளும் கூட ‘சானா ‘ காலத்தில் நாடகங்கள் எழுதியும் நடித்தும் உள்ளார் கள்.
'சானா'வின் காலத்தில் அதிகளவு நாடகப் பிரதிகளை எழுதிக் குவித்தவர் என்று பாலாம்பிகை நடராஜாவைச் சொல்லலாம். 'காலச் சக்கரம்' அவரது முதல் நாடகம். 'கிருஷ்ணா' எனும் புனைபெயரில் அவரெழுதிய 'டொக்டர் ரஞ்சிதம்' தொடர் நாடகம் அந்நாளில் மிகப் பிரபலமானது.
அந்நாளைய 'குமுதம்' 'கல்கி' வார இதழ்களில் வெளியான ஜனரஞ்சகமான கதைகளின் பாணியில் மிகை உணர்வுள்ள 'மெலோ டிராமா' வகைத்தான நாடகங்களை 'நல்ல தமிழில்' எழுதியவர் பாலாம் பிகை நடராஜா. ‘சிறுவர் மலர்' நிகழ்ச்சியிலும் 'படே ஜம்பா' போன்ற தொடர் நாடகங்களை எழுதிச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையான அனைத்துத் தரப்பினரையும் ஒரு சேரக் கவர்ந்து மகிழ்வித்தவர் அவர்.
துறை நீலாவணையைச் சேர்ந்த எஸ்.முத்துக்குமாரன் 'சானா' வின் காலத்தில் இலக்கிய இதிகாச நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார் என்பதை 2008 இல் அவரெழுதி வெளியிட்ட 'வீர வில்லாளி' நாடகத் தொகுப்பு நூல் வாயிலாக அறிய முடிகிறது. நிந்தாவூரைச் சேர்ந்த பிரபல சிறுகதை எழுத்தாளரும் சட்டத்தரணியுமான எஸ்.முத்துமீரானும் சானா காலத்து எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தக்கவர். அக்கால
கட்டத்தில் சமூக நகைச்சுவை நாடகங்களை எழுது வதில் பிரபலமான ஒருவராக எஸ்.எம்.நஸ்ருதீன் இருந்துள்ளார் என்பதை அந்நாளைய பிரபல நடிகையான விசாலாட்சி குகதாசன்[ ஹமீட்] எழுதிய அவரது வானொலி அனுபவங்கள் பற்றிய நூல் வாயிலாக அறிய முடிகிறது.
V.N.குகராஜாவும் ஆ.கருணைரத்தினமும் சானா காலத்தில் எழுத ஆரம்பித்துத் தொடர்ந்து வாசகர் காலம் வரை சளைக்காது எழுதியவர்கள். மலையகப் பின்னணியில் எழுதிய கு.ராமச்சந்திரன் நாடகக் கலைக்குத் தன்னை அர்ப்பணிப்புச் செய்த ஒருவர். M.S.றட்ணம், M.S.சிவபாலன்,K.கணபதி, முத்துராஜா, N.N.குமார
சிங்கம், இக்னேஷியஸ் மொறாயஸ், K.V.S.மோகன் போன்றோரும் சானா காலத்தைய நாடக எழுத்தாளர்களுள் நினைவுகூரப் பட வேண்டியவர்கள்.
நாடறிந்த எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான அன்னலட்சுமி இராஜதுரை அவர்களது நாடகமும் சானாவின் நெறி யாள்கையில் ஒலிபரப்பானதாகச் சமீபத்தில் வெளியான அவரது 'நினவுப் பெருவெளி' நூல் முகவுரை மூலம் அறிய முடிகிறது.
தொடர் நாடகமுட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் வானொலிக்கு எழுதியதாக அவரது வலைப்பதிவு மூலம் அறிய முடிந்தது. அந்நாளில் அதிக பங்களிப்புச் செய்த நால்வருள் ஒருவராக இவரைப் பற்றிப் பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்கள் இலங்கை வானொலியின் 50 ஆவது ஆண்டு விழாவின் போது குறிப்பிட்டுள்ளாராம் [கச்சாயில் இரத்தினத்தின் மகள் மலரன் னையும் 35 க்கும் மேற்பட்ட நாடகங்களை {பின்னாளில்] எழுதியதாக அதே குறிப்புக் கூறுகிறது]
1964 இல் சிறுகதைத் துறையில் பிரவேசித்தவர் கந்தையா நடேசு என்கிற தெணியான் 17/11/2011
'தினக்குரல்' ஞாயிறு பதிப்பில் வெளியான அவரது பேட்டியில் தான் எழுதிய ஐந்து நாடகங்கள் பிரபல நாடகக் கலைஞர் சானாவின் தயாரிப்பில் ஒலிபரப்பப்பட்டன என்றும் அவற்றில் லடிஸ் வீரமணி போன்ற கலைஞர்கள் நடித்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் அவர் தாமெழுதிய நாடகங்கள் இன்னின்னவை எனத் தலைப்புச் சுட்டிக் குறிப்பிடவில்லை. தெணியானைப் போலவே அக் கால கட்டத்தில் வானொலி நாடகம் எழுதிய வேறும் சில எழுத்தாளர் களும் இருக்கலாம். தகவலின்மையால் அவர்களது பெயர்கள் தவிர்க்க முடியாது விடுபட்டும் போயிருக்கலாம்.
60 களின் பிற்கூற்றில் எழுத ஆரம்பித்து 70 களில் முன்னணி வானொலி எழுத்தாளர்களாகத் திகழ்ந்த 'வரணியூரான்' S.S. கணேச பிள்ளையும் சி. சண்முகமும் சானாவின் பட்டறையில் இருந்து பட்டை தீட்டப்பட்டு எழுதப் புறப்பட்டவர்கள் எனக் கூறுதல் மிகையல்ல. இலங் கையர்கோனின் மறைவின் பின் அவரது 'லண்டன் கந்தையா' கதா பாத்திரங்களைக் கொண்டு C. சண்முகம் உருவாக்கிய தொடர் 'ஸ்ரீமான் கந்தையா'. பாலாம்பிகை நடராஜாவின் 'மனோரஞ்சிதம்' சில்லையூர் செல்வராஜனின் 'சிலம்பின் ஒலி'. ஜோர்ஜ் சந்திரசேகரனின் 'எழுதிச் செல்லும் விதியின் கை'. என்பனவும் எழுத்தாளர் சு வே. என்னும் சு.வேலுப்பிள்ளை எழுதிக் 'கிராம சஞ்சிகை'யில் ஒலிபரப்பான ‘பொன்னச்சிகுளம்' மற்றும் கிராமிய நிகழ்ச்சிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய V.N.பாலசுப்ரமணியம் எழுதித் தயாரித்துக் 'கிராம சஞ்சிகை’யில் ஒலிபரப்பான ' 'தேன் கூடு' முதலான தொடர் நாட கங்களும் அந்நாளில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள் என ராஜேஸ்வரி [சண்முகம்] அக்கா கூறித் தெரிந்து கொண்டேன்.
தனது 20 ஆண்டுகால நாடகத் தயாரிப்புப் பணியின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்தளித்த கலாஜோதி சானா தாம் பணியிலிருந்து ஓய்வு பெற முன்னதாக 1969 இல் நாடளா விய ரீதியில் ஒரு மணி நேர வானொலி நாடகப் போட்டி ஒன்றை நடாத்தினார். பலநூறு எழுத்தாளர்களும் கலந்து கொண்ட அந் நாடகப் போட்டியில் ஆர்.சத்யராஜ் எழுதிய 'நீதியின் நிழலில்' எனும் துப்பறியும் நாடகம் முதற் பரிசையும் கி.பஞ்சரத்தினம் எழுதிய 'தயிரா வடையா?' எனும் நகைச்சுவை நாடகம் இரண்டாவது பரிசையும் தட்டிக் கொண்டன. மூன்றாவது பரிசை எழுத்தாளர் வீ.என்.குகராஜா பெற்றார்.
சொல்லப் போனால் முதலிரு பரிசுகளுமே ஒருவருக்குத்தான். ஆமாம். அந்த அதிர்ஷ்டசாலி அடியேனே தான்! [சத்யராஜ் என்ற எனது இளைய சகோதரனின் பெயரிலும் பஞ்சரத்தினம் என்ற எனது மற் றொரு பெயரிலும் பிரதிகளை அனுப்பியிருந்தேன் 'காலத்தால் சாகா தது' என எனது சொந்தப் பெயரில் எழுதிய சமகால நாடகத்துக்கு ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கவில்லை!]
அதற்கு முன் வானொலிக்கென எந்த ஒரு நாடகப் பிரதி யையும் எழுதாதவன் நான். எடுத்த வாக்கிலே முதலிரு பரிசுகளையும் நான் தட்டிச் சென்றமையானது பலரது புருவங்களை உயர்த்தவும் சில ரதைச் சந்தேகத்தில் சுருங்கவும் வைத்ததும் உண்மையே. கலாநிதி க.கைலாசபதி, கவிஞர்கள் இ.முருகையன், இ.இரத்தினம் ஆகியோரே நடுவர்களாகக் கடமையாற்றினர் என்பது நான் பின்னர் அறிந்து கொண்டது. அவர்களுள் கவிஞர் இ.முருகையனுடன் மட்டுமே எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு. அதுவும் பின்னாட்களில் ஏற்பட்டதுதான்.
அக்காலகட்டத்தில் சி.வி. ராஜசுந்தரம் அவர்களும் சானாவுக்கு உதவியாக நாடகத் தயாரிப்பாளராகச் சிலகாலம் பணியாற்றினார். 15 நிமிட நாடகங்களைத் தயாரிக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். 'வானோசை' என்ற பெயரில் வானொலி சம்பந்தமான பயனுள்ள ஆங் கில நூலொன்றைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியவர் அவர்.
அவரது தயாரிப்பில் நானும்கூட நடித்திருக்கிறேன். கம்பரின் வாழ்வுக்கூற்றின் ஒரு நிகழ்வைப் பகைப்புலனாகக் கொண்டு கவிஞர் முருகையன் எழுதிய 'மனிதனைப் பாட மாட்டேன்' எனும் 15 நிமிட நாடகத்தில் எனது 20 ஆவது வயதில் குலோத்துங்க சோழனாக நான் நடித்தது மறக்கற்பாலது. அந்நாடகத்தை நெறியாள்கை செய்தவர் 'சுந்தா' எனும் வீ.சுந்தரேசலிங்கம். அதில் கம்பராக மிகச் சிறப்பாக நடித்தவர் எஸ்.விஸ்வரத்தினம் எனும்அற்புதமான நடிகர்.