Wednesday, 22 January 2020


தாள லய நாடகம் - மேடை/வானொலி

மனந் திருந்திய மகன் 
                         
பாத்திரங்கள்
                         தகப்பன்
                         மகன்
                         கனவான்
                         அண்ணன்
                         வேலையாள்
                         கதைஞர் 

காட்சி -1
பாத்திரங்கள்:-மகனும் தகப்பனும்
மக : எணையப்பு        நான் போறன்.
          நான் போறன்   பிறநாடு.

தக :  எட தம்பி               இது என்ன?
           ஏனிந்த                   முடிவிப்ப?

மக :    இனி மேலும்  ஒரு கணமும்
இது என்ன  ஒரு வீடே?
சுடுகாடு   சுடுகாடு.

தக :    ஏன் தம்பி என்ன குறை ?
இத்தனை நாள் [இ]ருந்தபடி
இனிமேலும் இங்கிருக்க
ஏன் முடியா தெண்டுற நீ?

மக :    இத்தனைநாள் நானொண்டும்
அறியாமல் தெரியாமல்
ஆழ்கிணத்துத் தவளை போல்
கண்மூடி   இருந்திட்டன்.
இனியென்ர வழியில் நான்
தனியாகப் போப் போறன்.
இனிமேலும் இங்கிருக்க
ஏலாது    ம்ஹுஹும்..

தக :    ஊருலகம் தெரியாத
சிறுபிள்ளை நீ தம்பி.
சீராட்டிப் பாராட்ட
ஆறுபத்துப் பேரிங்க.
வேறாகப் போறனென
வீண்வாதம் செய்யாத.

மக :    இங்கென்ன வாழுறது?
இனியிங்க  ஒட்டாது.
புது உலகம் புது வாழ்வு
பூத்திருக்கு காத்திருக்கு.
பழமையில ஊறிவிட்ட
பஞ்சாங்கமும் நீங்கள் .
பாத்தும் நான் சுகித்திடவும்
பூவுலகில் நாலுமுண்டு.
என் முடிவும் மாறாது; 
இனியொண்டும் ஏறாது.
பேசாமல் இப்போதே
பாகத்தைப் பிரியுங்கோ;
என்பங்கைத்  தாருங்கோ.

தக:     உன் பங்கு என் பங்கு
இது என்ன புதிய கதை?
எல்லாமே உன்னதுதான்
ஏனிப்ப பிரிவிங்க?
உது வேணாம் உந்தக்கதை
காதில்பூ சுத்தினது
காணுமினிக் கதை போதும்
இனிப்பான பேச்சுக்கு
ஏமாற மாட்டன் நான்

தக :    ஏமாத்து இல்லை மகன்
ஏக்கத்தில் பேசிறான் நான்
தானாடா விட்டாலும்
தசையாடும் என்பாங்கள்
தந்தை நான் சொல்லுறதத்
தட்டாத கேள் மகனே    

மக :    அணை போட்டு   மறித்தாலும்
நான் மாறன்         போப் போறன்
தடை சொல்லித்   தடுக்காமல்
விடை தாங்கோ   வழி விடுங்கோ
பாசம்தான்     தடுக்குதடா
நேசம்தான்     நிறுத்துதடா  
பாசமன்பு       நேசமெண்டு
பேசிறது      பாசாங்கு
எல்லாமே     நீர் போடும்
ஏமாத்து        வேஷங்கள்

தக:     பேசிறது      என்ன எண்டு
அறியாமல் பேசிற நீ
வேஷமில்ல இது தம்பி
மோசம் நீ   போற வழி
நீசரோட     நீ சேந்து
நாசமாவே  போப் போறே?

மக :  நாசமா நான் போனாலும்
நீங்களழத்  தேவையில்ல
நீ சர் யார் நல்லவர் ஆர்
நே சர் யார் நானறிவன்
ஈதொண்டும் தெரியாத
பால்குடிநான்  இல்லயிப்ப

தக :   பால்வடியும்  உன்முகத்தப்
பாத்துப்பசி ஆறினனான்
பால்போல  உன்மனசைப்
பேதலிக்கச்  செய்தவனார்?
பொல்லாத எண்ணங்கள்
போட்டுன்னை ஆட்டுதடா
பேசாமல் என்சொல்லைக்
கேள் தம்பி  போகாத
நீ போனால் என் நெஞ்சம்
தாங்காது  தவிக்குமடா
பித்தம் பிடித்து மனம்
புண்ணாகிப் போகும்டா

மக :   போகாத போகாத
என்றேதான் நீரழுது
மடை திறந்த வெள்ளம் போல் 
மாய்மாலக் கண்ணீரும்
வடித்தேதான் துடித்தாலும்  
இளகாது என் நெஞ்சும்
என்முடிவும் மாறாது
போகத்தான் போறன்நான்
வீணாக வாதாடி
வெறும் பேச்சுப் பேசாமல்
ஆகின்ற வழி பாத்தால்
அது நல்லம் இப்போது

தக :     பெத்தமனம் பித்தெண்டும்
பிள்ளைமனம்  கல்லெண்டும்
சொல்லினவ பொய்யில்ல
கல்லாடா உன்ர மனம்?
கொல்லுறியே சொல்லால

மக :   வார்த்தையில தேன்தடவி
விழுத்தத்தான் வழிபாக்கும்
வில்லாதி வில் லன்நீர்

தக :    வீண்பேச்சு வேணாம் நில்
சொல்லாதே இன்னொரு சொல்
கெடுறன்பார் பந்தயமும்
பிடியெண்டு  நிக்கிறியே
இனியென்ன நான்சொல்ல
கடவுளவர் விட்டவழி
பிடியுன்ர பங்கையிந்தா
முடிஞ்சிட்டு எல்லாமே
அப்பன் நான் மாண்டாத்தான்
என்னருமை தெரியும் போ
சீரழிஞ்சு பேரழிஞ்சு
சீயெண்டு போனாலும்
சேராத  இனி வீட்டை
இல்லையடா நீஎனக்கு
இளையமகன் செத்தாச்சு
எண்டுன்னைத் தலைமுழுகிப்
போட்டன் நான் போய்த் துலை நீ
[தனக்குள் அழுகையுடன்]
சிறகிரண்டு முளைச்சாச்சு
பறவையிப்ப பறந்தாச்சு
காட்சி – 2
[களியாட்ட இசைப் பின்னணியில்]
மக :   நண்பர்களே  நண்பிகளே
அன்பர்களே  வம்பர்களே
வாருங்கள்     வாருங்கள்
நாமினிமேல்  நினைத்தபடி
ஆனந்தக்  கூத்துக்களை 
ஆடிடலாம்   பாடிடலாம்
உலகத்தை   ஆட்டிடலாம்
குடியுண்டு   கூத்துண்டு
கும்மாளம்    போட்டிடலாம்
ஈசா நீ           ஆடப்பா
எலியேசு       நீயிப்ப
தாளத்தைப்  போடப்பா
குஷியாகப்  பாடுவன் நான்
கும்கும்மா   அது சும்மா
குளிரில்ல  கூதலுக்கும்
இடமில்ல    இனியென்ன
கொண்டாட்டம்  களியாட்டம்
நிதமுண்டு  குடியுங்கோ
குடியுங்கோ  குடியுங்கோ
விடியும் வரை  குடியுங்கோ
கூத்தாடப்  போறான் நான்
மாத்தாளைக் கூப்பிடடா 

காட்சி – 3
[சோக இசைப் பின்னணியில்]
மக :   பணமுள்ள மட்டும்தான்
நண்பர்களும்  உறவுகளும்
பழமரத்தை  நாடி வரும்
பறவையாளப் போலவேதான்
பழம்முடிஞ்சு  போச்சுதெண்டா
பறந்தோடும்  எல்லாமே 
வத்திவிட்ட  குளம்போல
ஆகீட்டன்  நானுமிப்ப
சுத்திவர   நிண்டவையும்
சூழ வர    [இ] ருந்தவயும்
எல்லாரும்   எங்கயிப்ப?
மறந்தாச்சு   போயாச்சு
சிறகொடிஞ்ச  பறவைபோல
நானிப்ப  தனியானன்
நக்குகிற  உறவெல்லாம்
நாலே நாள்  வரையேதான்
நட்பெண்ட பேச்செல்லாம்
நடிப்பேதான் வேறென்ன?
முட்டாள் நான்  முழு மூடன்
பட்டாத் தான்   தெரியுதது
பசியென்னை  வாட்டுதிப்ப
புசித்திடவோ  ஏதுமில்லை
ஐயோ நான்    என் செய்வன்?
ஆரிட்டைப் போயழுவன்?

காட்சி - 4
கதைஞர் குரல்
உல்லாசம் களியாட்டம்
எல்லாமும்  எத்தனை நாள்?
ஊதாரித் தனத்தாலே
உள்ளதெல்லாம்  போனதடா
இல்லாத வன்பாவி
பரதேசி யாய்  மாறிப்
பசியாலே வாடுகிறான்

காட்சி – 4A
பாத்திரங்கள் :- மகன், கனவான்

மக :   ஐயா நான்   ஒரு ஏழை
ஆதரிப்பார் ஆருமில்ல
பஞ்சம்பசி  பட்டினியால்
வாடுகிறன் வதங்குகிறன்
கனவான் நீர் மனமிரங்கி
ஏழைக்கு  வாழ்வுதர
ஏதுமொரு  வேலை தந்து
ஆதரிக்க  வேணுமெனை
அடிமைநான்  தெண்டனிட்டன்

கன :-பஞ்சம்பசி  எங்கயும்தான் 
வாட்டுதது  ஆக்களைத்தான்
நாட்டை விட்டு  வீட்டை விட்டு
போக்கிடமும்   இல்லாமல்
இங்கயிப்ப   ஏன் வந்த?

மக :   எல்லாமென் தலையெழுத்து
புத்திகெட்டுப் போனதினால்
போக்கத்துப்  போனவன் நான்
கண்கெட்டுப்  போனதினால்
புண்பட்டுப் போனவன் நான்

கன :-பரிதாபக் கோலம்தான்
பாத்தாலே  தெரியுதது
ஆத்தாது அழுகின்றாய்
அடுத்தென்ன நான் செய்ய?
என் வீட்டுப் பன்றிகளைப்
பத்திரமாக் கொண்டு சென்று
மேய்த்து வர ஆள் ஒண்டு
வேண்டும்தான்  தேடுகிறன்
உன்னால அது செய்ய
சம்மதமோ?  சொல்லிப்ப

மக :   கன்றுகாலி மேய்த்தென்றும்
பாத்ததில்ல ஆனாலும்
பழக்கத்தில் வந்துவிடும்
சொன்னபடி செய்திடுறன்
என்னவிதம்  உங்களுக்கு
உபகாரம்      நான் செய்வன்?
உள்ளபடி     கண்காணும்
கடவுள்தான் நீங்களுமே

கன :-கதை போதும்  சொல்வது கேள்
கொட்டிலிலே   மந்தைகளும்
மொந்தையிலே கொள்ளுமுண்டு
கொள்ளுனக்கு  இல்லைப்பார்
ஆபன்றிக்            கழிவுகளை
அள்ளவேணும்      தள்ளவேணும்
மொள்ளவேணும்  தண்ணியும் நீ
மொழுக வேணும்  கொட்டிலையும்
உள்ளதெல்லாம்     செய்தாப்பின்
மெள்ள வந்து           பாரென்னை

காட்சி - 5
[மகன் தனிமையில்-தனக்குள்]

மக :  பன்றிகளப்         போலவே நான்
பிறந்திருந்தால் பிழையில்ல
பசியென்னும்   பட்டினிப்பேய்
புசியாது             என்னையுமே
ருசியான            சாப்பாட்டுக்
கொரு நாளும்  குறையில்ல
அப்பாவின்       மாளிகையில்
எத்தனை பேர் வேலைக்கு
அவரெல்லாம் வகைவகையா
பலகாரம்          பட்ஷணங்கள்
வயிறாறச்         சாப்பிடுவார்
இங்கோ நான்  கால் வயிற்றுக்
கஞ்சிக்கும்        கதியின்றி
பசியால            வாடுகிறன்
மோசம்தான்    என்ர நிலை
உதவாத            சகவாசம்
ஊதாரித்             தனத்தால
உள்ளதெல்லாம்  போயாச்சு
இனியென்ன     நான் செய்ய?
வஞ்சகரை          நண்பரென
நம்பியதால்            நானழிஞ்சன்
இந்த நிலை           இனி மாற
என்ன வழி              ஏது வழி?
அப்பரிடம்               போலாம் தான்
அடி உதையள்        தந்தாலும்
அதிலொண்டும்      பிழையில்ல
பேசட்டும்                அவரென்னை
பாசத்தை                  உணராத
பாவிக்கு                  இடமில்லை
எண்டேதும்            சொன்னாலும்
கூலிக்கு                  நிக்குமொரு 
ஊழியனா              கொள்ளுமென
கெஞ்சிடலாம்        கும்பிடலாம்
தஞ்சம் நீர்              எண்டிடலாம்
தக்கதது                  தயங்காது
இந்நாளே               இப்போதே
சென்றிடுவேன்    தந்தையிடம்



காட்சி - 6
கதைஞர் குரல்
மந்தைகளை      மேய்க்குமொரு
மந்தனுமாய்         ஆனவனும்
தந்தை சொல்லும்    தட்டியதால்
ஆன நிலை           அறிந்திட்டான்

தந்தைதனைத்     தஞ்சமெனச்
சென்றடைய        ஓர்ந்திட்டான்
வருகின்றான்       மைந்தனுமே
வாயிலுக்கும்       வந்திட்டான்
காட்சி - 6A 
பாத்திரங்கள் :-தகப்பன், மகன்
தக :    ஆரங்கே வருகிறது?
ஐயையோ அவனேதான்
என்மகனே என்மகனே
நீதானா  நீதானா?
ஆண்டவரே இது என்ன?
ஏனிந்தக் கோலமடா?

மக :   அன்புள்ள என்னப்பா
நான்பாவி  மாபாவி
நன்றியினைக் கொன்றவன் நான்
நாசவழி  சென்றவன் நான்
நானுங்கள் மகனல்ல
அருகதையும் எனக்கில்லை
தவறுக்கும்  தவறான
தவறுகளைச் செய்தவனை
தறுதலையை தண்டியுங்கள்
மன்னிக்க  முடியாத
மாபாதம்  செய்த எனை
பின்னிடுங்கள்  சாட்டையினால்

தக :    போதுமடா பேசியது
ஈசனவன் கருணையினால்
இன்றுன்னைக்  கண்டேன் நான்
போனதினிப்  போகட்டும்
இன்றைய நாள்  இந்நேரம்
புதிதாகப்  பிறந்திட்டாய்
வேதனையில் வெந்து மனம்
மாறியிங்கு வந்திட்டாய்
சோதனையாம் செந்தீயில்
புடம் போட்ட தங்கமும் நீ
பாசத்தால் தடுமாறிப்
பரிதவித்த நிலை போதும்
நேசத்தோ டினி யேனும்
நம்மோடு நீயிருப்பாய்

யாரங்கே..யாரங்கே..
வாருங்கள்  இங்கேதான்
பாருங்கள்  என் பிள்ளை 
கோலத்தைப் பாருங்கள்
ஓடுங்கள்  ஓடுங்கள்
புத்தாடை  பூசல் மா
முத்தாரம்  கணையாழி
மணியாரம் குண்டலமும்
காப்போடு கங்கணமும்
அத்தனையும் கொண்டந்து
அணிவித்து மகிழுங்கள்

விருந்துக்கும் ஏற்பாடு
விரைவினிலே செய்யுங்கள்
கன்றொன்றைப்  பிடியுங்கள்
கொன்றுமதை தின்றிடுவோம்
இன்றேதான் கொண்டாட்டம்
இனியேதான் உல்லாசம்
மாண்டவனும் மீண்டானாம்
மரித்தோனும் உயிர்த்தானாம்
காணாமல் போனவனை
கண்மணியை மீண்டும் நான்
கண்டேன் என் கண்ணாலே
உண்டாடி மகிழுங்கள்
பண்பாடி ஆடுங்கள்
ஆகட்டும்...ஆகட்டும்..

காட்சி - 7
பாத்திரங்கள்:- அண்ணன், ஏவலாள், தகப்பன், மகன் 

அண்:-கச்சேரி        மேள வொலி
கரகாட்டம்   சதிராட்டம்
சங்கீத           ராகங்கள்
சந்தோஷ     கானங்கள்
என்ன இது எல்லாமும்
ஏனிந்தக்      களியாட்டம்?
யாருக்குக்    கொண்டாட்டம்?
ஏவ:    -உங்களது      தம்பியவர்
ஊர்விட்டுப் போன அவர்
உருக்குலைந்து போனாலும்
உசிரோடு திரும்பியதால்
உற்றாரை உறவினரை
விருந்துக்கு கூப்பிட்டு
கொண்டாட்டம் நடக்குதையா
அண்: என்ன இது அநியாயம்?
சின்னவன் ஆர்? மன்னவனோ?
சண்டாளப் பாவிக்கு
கொண்டாட்டம் கேக்குதுவோ?

தக:-   ஆ தம்பி     வா வா வா
உன்னைத்தான் எல்லாரும்
எங்கேண்டு கேட்டபடி
ஏனின்று கனநேரம்?
சரியான வேலைபோல்..
ஆனாலும் வந்திட்டாய்
சரி  சரி போய்க்  குளி முதலில்
இண்டைக்கு  ஒரு புதினம்
என்னெண்டு  சொல் பாப்பம்..?

அண்: நானிங்கு நாய்போல
நன்றியுடன்  ஓடோடி
நாளெல்லாம் பாடுபட்டு
நசிபட்டு நலி[வு]பட்டு
நாலுபத்து வேலை செய்து
நாணயமாய் நல்லவனாய்
சொன்ன சொல்லுத் தட்டாத
சற்குணனாய்  உத்தமனாய்
இத்தனை நாள் ஈங்கிருக்க
கூறுகெட்டுப்  போன மகன்
கூடித்தான் வந்தவுடன்
எங்கிருந்தோ வந்தவனை
கொண்டாடிக் குலவுறியள்
புத்தியின்றிப் போனவனை
முத்தி   ய ணைக்கிறியள்
குத்தி   மு  றியிறியள்
என்ன இது ஏனிந்த
வஞ்சனையும்  ஏமாத்தும்?
உழைத்து   க ளைப்பது  ஆர்?
ஊழியனாய் நானிருக்க
உண்டு க ழித்திடவும்
உல்லாசம் தேடிடவும்
உங்களுக்கு  இளைய மகன்
ஒரு கண்ணில்  சுண்ணாம்பும்
மறு கண்ணில்  வெண்ணெயுமே?
உண்ணாணை இது நீதி
இல்லையப்பா சரியில்லை
பற்றி    எ ரியுதப்பா
என் வயிறும் இப்போது

தக:-      பொறு தம்பி  பதறாத
ஆத்திரத்தில்  ஏதேதோ
அறியாமல் பேசிற நீ
வேண்டாத பிள்ளையுமாய்
தீண்டாத  தறுதலையா
தான்தோன்றித்  தனமாக
போன அவன்  அடிபட்டு
உதைபட்டு  மிதிபட்டு
அல்லாடித்  தள்ளாடி
திண்டாடித் தடுமாறி
மெய்யாக  மனம்மாறி
பண்பட்டு வந்திட்டான்
புண்பட்டுப் போனவனை
போவெண்டே தள்ளிறது?
வந்தவனை வாவெண்டு
வரவேற்றல் தான் பண்பு
காணாமல் போனவனைக் 
கண்டடைஞ்ச நாளின்று
மாண்டேதான் போன அவன்
மீண்டுமுயிர் பெற்றிட்ட
நன்னாளை நாம் கூடிக்
கொண்டாடி உண்டாடிக்
களிகூரல் பிழையில்லை

எந்நாளும் நீயென்றும்
என்னோடு எப்போதும்
[இ]ருக்கின்ற பிள்ளையடா
என் சொத்து என் தேட்டம்
எல்லாமே உன்னதடா
நீரடிச்சு நீர் விலகிப்
போவதில்லை  அறிவாய் நீ
மன்னிக்கும் குணமென்றும்
எல்லோர்க்கும் வேணுமடா

அண்: ஆத்திரத்தில் ஏதேதோ
அறியாமல் ஏசி விட்டேன்
அத்தனையும் பிழையப்பா
தயை செய்து மன்னியுங்கள்
முழு மனதோ டென்னையுமே

தக:-   எட தம்பி  சின்னவனே
வா இங்க  பார் இங்க
அண்ணனிதோ வந்தாச்சு

மக :   ஆ..அண்ணா   இத்தனை நாள்
உதவாத பேர்களுடன்
ஊதாரித் தனமாக
போனவன் நான் புல்லன் நான்
அப்பாவை  அன்புடனே
ஆதரித்த வர் நீங்கள்
தப்பான வழி சென்ற
இப்பாவி தனை நீங்கள்
மன்னித்து  மறுபடியும்..

அண்: இது என்ன கதை தம்பி
என் காலில் ஏன் விழுற?
நீ என்றும் என் தம்பி
அன்புக்கு முன்னால
எல்லாரும் நல்லவரே
எல்லாரும் நம்மவரே

தக:-   ஆகாகா ஆனந்தம்
இனியேது ஆதங்கம்?
இனியது நம் இல்லம்தான்
எல்லோரும் பாருங்கள்
வாருங்கள் எல்லோரும்
வல்லோனை வணங்கிடுவோம்
எல்:-     வேதத்து நாயகனே
எல்லாமும் நீர் தந்த
தத்தனைக்கும் நன்றி பல
எமதில்லம் உமதருளில்
இனிதாக இலங்கட்டும்
        [நிறைவிசை]
        - திரை-
அறி:-   ஊதாரிப் பிள்ளையவன்
உவமையினைக்  கதையாக
யேசுபிரான் கூறியதைத்
தாளலய நாடகமாய்
தாம் மாற்றித் தந்துள்ளார்
எழுத்தாள   ராம் ஜீப்பீ
வேதநா  யகம் இன்று