Sunday, 11 October 2020

 

80 களில் இலங்கை வானொலித் தமிழ் நாடகங்கள்

                      

                       1979 இல் கே.எம் வாசகர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாப னப்பயிற்சி நிலைய  ஒழுங்கமைப்பாளராகப் [Organizer]     பதவி உயர்வு பெற்றுச் செல்ல ஆர்வமுள்ள    இளைஞரான   பி.விக்னேஸ்வரனின் கைகளில் நாடகத் தயாரிப்பு  ஒப்படைக்கப்பட்டது. 1970 இல் ஓர் ஒலிப்பதிவு உதவியாளராக இலங்கை      வானொலியில் காலடி பதித்த   P. விக்னேஸ்வரன் பின்னர் வர்த்தக சேவை  நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வும் பரீட்சார்த்த நாடகத் தயாரிப்பாளராகவும் சிலகாலம் இருந்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது.     நாடகம்      பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவரான விக்னேஸ்வரன்  மிகக் குறுகிய    காலமே நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய போதிலும் காத்திரமான   பல நாடகங்கள் அவரது காலத்தில் ஒலிபரப்பாயின.

                         தம்மால் தயாரிக்கப்பட்ட நாடகங்களுள்     தரமானவற்றைத் தெரிந்து வானொலி நிலைய ஒலிப்பேழைக்   காப்பகத்தில்  அவர் களஞ் சியப்படுத்தியுள்ளார். அவரை முன்னுதாரணமாகக்     கொண்டு   அவர் பின் வந்தவர்கள் அக்கைங்கரியத்தைத் தொடராதது இலங்கைத் தமிழ்  வானொலி நாடகத் துறைக்குப் பேரிழப்பாகும். பழையனவற்றைப் பேணாதது மட்டு மின்றி    ஒலிப்பதிவாகி      இருந்தவற்றையும்   முற்றாக  அழித்து அதன் சுவடு களே இல்லாமற் செய்துவிட்ட   மகானுபாவர்களை என்னென்பது?

                        விக்னேஸ்வரனால் அவ்வாறாகக் களஞ்சியப் படுத்தப்பட்ட நாடகங்கள்   பாலேந்திராவின்    'கண்ணாடி    வார்ப்புகள்',   செங்கை ஆழியானின் 'பாலையில் பூக்கும் மலர்கள்', ஞானசக்தி கந்தையாவின் 'பட்டங்கள் தாமாகப் பறப்பதில்லை',  ஜீ.பி.வேதநாயகத்தின் 'நினைவுகள் சாவதில்லை', ஜே.ஜெயமோகனின் 'கற்பனைகள் கலைவதில்லை', மு.கனகராசனின்  'அவளுக்கு வேலை வந்த போது',   எம்.திருநாவுக்கரசின்  'சோகங்கள் வெல்லப் படும்',    . இரத்தினத்தின்      'ஒத்தெல்லோ', 'இன்ஸ் பெக்டர் துரை',  மற்றும் பி.விக்னேஸ்வரனின் பலவீனம் ஆகிய பத்து நாடகங் களுமாம். மேற்குறிப்பிட்ட நாடக எழுத்தாளர்களை விட  அகஸ்தியர், இளங்கீரன், எஸ்.எஸ்.கணேசபிள்ளை,   அஷ்ரப்கான், தி.. அரிய ரத்தினம், விஜயராணி செல்லத்துரை, பா.சத்தியசீலன், நெல்லை .பேரன் முதலான ஏற்கெனவே அறிமுகமான      எழுத்தாளர்களினதும்  அராலியூர்  சுந்தரம்பிள்ளை, செ.குணரத்தினம், நாகேசு தர்மலிங் கம்,   கே.ரி.சிவகுருநாதன், சாரதா சண்முகநாதன்,   இணுவையூர்  சிதம்பர திருச்செந்திநாதன், . .'.பேல், எஸ்.சண்முகம்    போன்ற புதிய நாடக எழுத்தாளர்களினதும் நாடகங்கள் விக்னேஸ்வரனின் தயாரிப்பில் ஒலிபரப்பாயின.

                 அக்காலகட்டத்தில் திரைப்படக் கூட்டுத் தாபனத்தால் நடாத்தப் பட்ட திரைப்பட எழுத்துப்  போட்டியில்      முதற்  பரிசீட்டியவரான P.விக் னேஸ்வரன் இலங்கையில் முதன்முதலாகத்     தொலைக் காட்சி  சேவை ஆரம்பிக்கப் பட்ட போது 1982 இல்  அதில்  தமிழ்ப் பகுதி   நிகழ்ச்சித்        தயா ரிப்பாளராகப் பதவி யேற்றுச் செல்ல நேரிட்டது. தமிழில்       சின்னத் திரை நாடகத்      தயாரிப்பில் இலங்கையைப்     பொறுத்த மட்டில் ஒரு முன்னோ டியாகத் திகழ்ந்து முத்திரை பதித்தவர் பி.விக்னேஸ்வரன்.

           விக்னேஸ்வரன் ரூபவாஹினியுடன்  சங்கமமான பின்    இலங்கை வானொலியில்   செய்தி      வாசிப்பாளராகவும்      நடிகராகவும்     இருந்த ஜோர்ஜ் சந்திரசேகரன் நாடகத்     தயாரிப்பாளரானார்.    கொழும்பில் கல்வி பயின்று  கொழும்புப் பிரதேசத்தைக்       களமாகக் கொண்ட சிறு கதைகளையும் 'செய்தி' இதழில்      'பொம்மலாட்டம்' எனும் ஒரு தொடர் நாவலையும் எழுதித்    தரமான ஒரு     எழுத்தாளனாக    அறியப்பட்டவர் ஜோர்ஜ் சந்திரசேகரன். சானாவைப்  போலவே     ஓவியத்      துறையிலும் ஈடு பாடு கொண்டவர் ஜோர்ஜ்.    கா.சிவத்தம்பியின்   இளைஞர்  மன்றம் மூலம் இலங்கை  வானொலியுடன்   பரிச்சயம்   கொண்டு பத்து ஆண்டு களுக்கும் மேலாக   ஒரு வானொலி   நடிகனாகவும்    இருந்தமையால் ஜோர்ஜ் வானொலி யின்    நுட்பங்களையும்   சாதக    பாதகங்களையும் புரிந்து கொண்டவராக இருந்தார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் சுமாராக ஒரு  தசாப்த காலம்  இலங்கை    வானொலித்  தமிழ்  நாடகத்  துறை பல ஏற்ற இறக்கங்களுக்கூடாகப் பயணித்தது.

                      80 களின் ஆரம்பத்தில்    நடாத்தப்பட்ட வானொலி நாடக எழுத் துப் போட்டியில் பாமா ராஜேந்திரன் எழுதிய   'பந்தம்' என்ற         நாடகம்  முதற் பரிசீட்டியது.  இலங்கையர்கோனின் மகளான     ஜனகமகள் சிவ ஞானம்,  மற்றும்   ஞானசக்தி கந்தையா, இந்து மகேஷ்  போன் றவர்கள் எழுதிய தரமான நாடகங்கள் பல   1982 - 1984     காலப் பகுதியில் ஒலிபரப்பாகி நேயர்களின்    அபிமானத்தை வென்றன. யாழ் மக்களின் வாழ்வியல்   பிரச்சனைகளை,  சிறப்பாகப்       பெண்களுக்கு      ஏற்படும் பாதிப்புகளை உணர்வுபூர்வமாக, இரத்தமும்     சதையுமாக அவர்களின் நாடகங்கள் வடித்துத் தந்தன.                                                             

                  1980 இல் வானொலி நாடகங்களை எழுத    ஆரம்பித்தவர் அராலி யூர் .சுந்தரம்பிள்ளை. அவரது நாடக    ஆக்கங்களுக்கு அதிகளவு களம மைத்துக் கொடுத்தவர் ஜோர்ஜ் என்றே கூறலாம்.      அவரது காலகட்டத்தில் அதிகளவான நாடகங்களை எழுதிக்   குவித்தவரும் அவரே. 2005 வரையான 25 ஆண்டுகளில் 400 மட்டிலான நாடகங்கள் எழுதிக் தள்ளிய தாக அவர் தமது நூல்  முகவுரை   ஒன்றில்   குறிப்பிடுகிறார்.    ஆயினும் அவரது அரை மணி நேர நாடகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நூறு மட்டில்தாம் என்பதுதான் எமது கணிப்பு!

                     அராலியூராரின் நாடகங்கள் பெரும்பாலும் அன்றாடக் குடும்ப நிகழ்வுகளை சமகாலப் பின்னணியில்   மெல்லிய எள்ளலு டன்     நாசூக் காகக் கூறுவன. அவரது      நாடகங்களில்   சம்பவக்   கோவைகளை விட உரையாடல் கள் முக்கியத்துவம்   பெறுவது வழக்கம். நீளமில்லாத சின் னச் சின்ன உரையாடல்கள் மூலம் நாடகத்தை நகர்த்திக் செல்லும் அவ ரது உத்தியானது வானொலிக்குப்    பொருத்தமானதாக அமைந்ததால் நீண்ட காலம் அவரையும் அது தக்க வைத்துக் கொண்டது.

                         1996 இல் இடம்பெற்ற வானொலி நாடக எழுத்துப் போட்டியில் அவரது 'கல்வியா - கனடா கல்யாணமா?'   என்ற நாடகம்        மூன்றாவது பரிசையும் 2000 ஆம் ஆண்டு   நடைபெற்ற நாடகப் போட்டியில்   அவரது 'தனிக் குடித்தனம்' என்ற நாடகம் முதலாவது பரிசையும் தட்டிக் கொண்டன. 80 களில் அவரெழுதிய 'வெள்ளம்' எனும் நாடகம் பலராலும் சிலாகிக்கப்பட்டு பல தடவைகள் மறு ஒலிபரப்பும்   செய்யப்பட்டது. 2005 இல் 'இமயம்' என்ற அவரது நாடகத்  தொகுப்பு நூலுக்குச் சாகித்ய மண்டலப் பரிசும் சித்தித்தது.

                           80 களின் ஆரம்ப   ஆண்டுகளில் . பாலமனோகரன், கலை நேசன் சிவம், N. யோகேந்திரநாதன், A.V. ராஜகுலசிங்கம் ஆகியோ ருடன் எஸ்.எஸ்.கணேசபிள்ளை,   எஸ்.ஜேசுரட்னம் ஆகியோரின் பங்களிப்பும் தமிழ் வானொலி நாடகங்களைப் போஷித்தது.

               82 இல் தி..அறியரத்தினத்தின்  'வேரில்லா விருட்ஷங்கள்' எனும் தொடரும் 83  இல் ஞானசக்தி கந்தையாவின் 'இதய சங்கமம்' தொடரும் S.K. அமிர்தஞானத்தின்   'வீடே நாடகம்'   தொடரும்    தேசிய  சேவையில் [சேவை - 1 இல்] வலம் வந்தன.

                1983 இல் இலங்கையில்  ஏற்பட்ட ஆடிக் கலவரமானது வானொலி நாடகத்துறையையும் ஆட்டம்காண    வைத்து விட்டது.    அதுகாலவரை எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலரும் காணாமல்    போய்விட புதிய எழுத்தாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய    தேவைக்கு ஜோர்ஜ்     தள்ளப்பட்டார்.   இடையில்      சில  காலம்   தடைப்பட்டிருந்த வானொலி நிகழ்ச்சிகள் படிப்படியாக    மீண்டும்  வழமைக்குத்   திரும்ப, மறு ஒலிபரப்பு களால் ஒப்பேறிக்    கொண்டிருந்த நாடக அரங்கம் 1987  மட்டில் மீண்டும் புத்துயிர்     பெற்றபோது அதற்கு உத்வேகமளிக்க அராலியூராருடன்   திருமலை யில்    இருந்து லீலா ஜெயரட்னம்    என்கிற ஜெயலீலாவும் சானா காலத்தைய மூத்த எழுத்தாளரான பாலாம் பிகை நடராஜாவும் கூட்டுச் சேர்ந்தனர்.

                 ஜெயலீலா, பாலாம்பிகை நடராஜா      இருவருமே நாடக எழுத் தைப் பொறுத்த  மட்டில் கொஞ்சம்    பழைமைவாதிகள்.       ஆரம்பகால சினிமாத் தமிழில்   [ ஹென்றி    வகைத்தான]    திடீர்த்   திருப்பங்கள் கொண்ட கற்பனா வாதக் கருப்பொருளைக்      கொண்ட  நாடகங்களை எழுதுபவர்கள்.   ஜோர்ஜ் பணியாற்றிய     1982 – 1993      வரையான  காலப் பகுதியில்  அராலியூராருட்பட  இம் மூவரும்  தலா     20 க்கும்    மேற்பட்ட அரை மணி நேர நாடகங்களை எழுதியிருந்தார்கள் 'அவர்கள் படித்தவர் கள்' எனும் சமூக நாடகத்துடன் தனது வானொலி நாடக எழுத்துப் பணியை 1987  இல் ஆரம்பித்தவர்       'அகளங்கன்' எனும்  நா.தர்மராசா.         1987 - 1992 க்கு இடைப்பட்ட ஆறு    ஆண்டுகளில்     ஆறு அரை மணி நேர நாடகங்களை  அவர் வானொலிக்கு எழுதியிருந்தார்.

                இவர்களைவிட,கே.கே.மதிவதனன்,N.உதயகுமார்,R.பகவான், குயின்ரஸ் ஜீவன்,  P .சந்தனம்   எனப் புதிதாகச்   சில     எழுத்தாளர்கள் உதய மாகி இருந்தனர். இவர்களுள் முதற் குறிப்பிட்ட   இருவரைத் தவிர ஏனையோர் ஜோர்ஜ்    இளைப்பாறியவுடன்   தாமும்   எழுத்துக்கு முழுக்குப் போட்டு விட்ட னர்.   என்ன காரணமோ தெரிய வில்லை!

                S.S.கணேசபிள்ளை, எஸ்.ஜேசுரட்ணம், கே.எஸ்.பாலச்சந்தி ரன், பா.சத்தியசீலன், தி..அரியரத்தினம் P .V .ராஜகுலசிங்கம் போன்றோர் அவ்வப்போது தொட்டுக்கொள்ளும்    ஊறுகாயைப் போல  அருந்தலாக ஒரு சில   நாடகங்களை     எழுதியிருந்தார்கள்.    ஜோர்ஜின்    காலத்தில் வானொலி நடிகர்களாகவும் இருந்த   அருணா செல்லத் துரை, நாகேசு தர்மலிங்கம், V,N,S..உதயசந்திரன், பிராங் புஷ்பநாயகம், பிலிப்ஸ் ஜெகநாதன்,   K.T. சிவகுருநாதன்   போன் றோரும்  சில நாடகங் கள்   எழுதிப் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

               ஒப்பீட்டளவில் சிறுகதையைவிட நாடக ஆக்கத்தில் பெண்களின் பங்களிப்பு கூடுதலானதாகவே தெரிகிறது.  ஜெயலீலா,  பாலாம்பிகை நடராஜா உட்பட     'ஷிவானி',      விஜயராணி    செல்லத்துரை,     வதனி ஆனந்தமூர்த்தி, ஆனந்தக்கிளி ஆறுமுகம், உமா ராஜநாயகம்,  விக்னா செல்வநாயகம் சாவித்திரி அத்துவிதானந்தம்,     மாலினி சுப்ரமணியம், சதாயினி நாகலிங்கம்,   வினோதினி    துரைராஜா,    பாமா இதயகுமார், சித்ராஞ்சனி தாமோதரம்பிள்ளை,  யோகேஸ்  கணேசலிங்கம், கோவை ஜெயந்தி , A.நாகேஸ்வரி,  மங்களேஸ்வரி நமசிவாயம் என ஒரு 18 பெண் எழுத்தாளர்களின் நாடகங்கள் ஜோர்ஜின்   தயாரிப்பில்  ஒலிபரப்பாகி உள்ளன. ஆனால்    இவர்களுள் ஓரிருவர் தவிர  ஏனையோர்  ஓரிரு  நாடகங்கள் எழுதித் தமது   பெயரை    வானொலியில்   கேட்டதுடன்    திருப்தியுற்று தமது மன வெளிப்பாடு களுடன் சேர்த்து  பேனா மூடிகளையும் இறுக மூடிக் கொண்டு விட்டனர்!

                ஆண் எழுத்தாளர்களிலும் ஓரிரு நாடகங்களுடன்   ஓய்ந்து  விட்ட வர்கள் என ஒரு 15 பேரைச் சொல்லலாம் .  P.வாகீசன்,    N.யோகேந்திர நாதன்,   சோ.பத்மநாதன்,   .ரா.சின்னத்தம்பி,  A.V.சொர்ணலிங்கம், K..சொக்கலிங்கம்,   K.C.பாலேந்திரா, S. இளையதம்பி,     S. லோகராஜா, புத்தூர் T. யோகராசா,    M.V. தவராசா,     P. சுந்தரம்,       M.முத்துக்குமார்,           H.R. ரவீந்திரன், தட்ஷணாமூர்த்தி குகன் என  நீள்வது   அவர்களின் பட்டியல். ஜோர்ஜின் நாடகத் தயாரிப்புக் காலத்தில்  அறிமுகமான வர்களுள் எஸ். அம்பலவாணர்   மட்டும்     சளைக்காது  தொடர்ந்தும்   நாடகங்கள் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் எனச் சொல்லலாம்.

                      83 இல் 'பிரமைகள்',     84 இல் 'உறவுகள்' என இரு நாடகங்களை மட்டுமே எழுதிய போதிலும் தமது வித்தியாசமான   அணுகுமுறையால், அந் நாடகங்களின் கருப் பொருளை  உளவியல் ரீதியாகக்    கையாண்ட நேர்த்தியால் குறிப்பிடத்தக்க வானொலி நாடக எழுத்தாளராகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியவர் 'ஷிவானி' என்கிற    சியாமளா சிவகுரு நாதன்.

               ஷிவானியின் அவ்விரு நாடகங்களுட்படஞானசக்தி கந்தையா வின் 'வேலி', 'சிலந்திவலைப் பின்னல்கள்', 'புழுதிப் பூக்கள்', 1 மணி நேர நாடகங்களான N யோகேந்திரநாதனின்   'காட்டு நிலா',  பா.சத்திய சீலனின்  'அதுவும் கெளரவம் தான்'  மற்றும்  பாலமனோ கரனின் 'தம்பளப் பூச்சிகள்', பாமா ராஜேந்திரனின் 'தனி மரம்', வாகீசனின் 'தீராத செலவுகள்', அராலியூராரின் 'ஓர் இரவு', 'உதிர் பூக்கள்', 'வெள்ளம்',  எஸ்.ஜேசுரத்தினத்தின் 'வெனீஸ் வர்த்தகன்',    'ஜூலியஸ் சீசர்'     என்பன   ஜோர்ஜின் ஆரம்ப  காலத்   தயாரிப்புகளில்        குறிப்பிடத்தக்கன.  அந்த   80 களின் ஆரம்பத்தில் ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ ஜூலியட்' சில்லையூர் செல்வராஜனின் கைவண்ணத்தில் தமிழுருப் பெற்று B.H. அப்துல் ஹமீட்டினால் தயாரிக்கப்பட்ட சிறப்பான ஒரு நாடகம்.

               கே.எஸ்.பாலச்சந்திரனின் 'கிராமத்துக்கு கனவுகள்', 'வாத்தி யார் வீட்டில்', பல எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியான 'புதியதோர் உலகம் செய்வோம்' என்பன 88, 89 களில் ஒலிபரப்பான தொடர் நாடகங்களுள் குறிப்பிடத் தக்கவை.

 

                   

 

 

 

 

 

 

1990 -2001 இல்  இலங்கை வானொலித்

                                             தமிழ் நாடகங்கள்

 

                            90களின் ஆரம்பத்தில் R சிவலோகநாயகியின் 'விழுது கள்', பில்ப்ஸ் ஜெகநாதனின் 'அலைகடல் ஓடங்கள்', சி.சண் முகத்தின் 'வாழப் பிறந்தவர்கள்', மற்றும் கே.ஞானசேகரத்தின்    'இதுதான் விதியா?', 'விதியா மதியா?'   'பாதைகள்   முடிவதெங்கே?'   முதலான தொடர் நாடகங்களும் சேவை - 1 இல் ஒலிபரப்பாயின. 'விதியா மதியா?' 128 வாரங்கள் வரை தொடர்ந்தது.

                            முரண்பாடான பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடு களால் தோன்றும் போராட்டங்களை முதன்மைப்படுத்தி  ஆவலைத் தூண்டும் வகை யில் நகர்த்தப்பட்ட 'பாதைகள் முடிவதெங்கே?' பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை  பெற்றது. எஸ்.கணேஸ்வரன் தனது பண்பட்ட நடிப்பால் முத்திரை பதித்தார்.

                சேவை - 2 [வர்த்தக சேவை] இல் 90 களின் பிற்பாதியில்  G.P. வேத நாயகத்தின்   'திரைகடல் ஓடும்   தேவதைகள்'     தொடரும்     அனுஷா மொறாயஸ் எழுதிய சில மர்மத் தொடர்களும் ஒலிபரப்பாயின.

                          80 களின் ஆரம்பத்தில் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்பு களால் மிடுக்கோடு நடை பயின்ற இலங்கை வானொலி 'நாடக அரங்கம்' 90 களில் தள்ளாட ஆரம்பித்தமைக்கு அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள்  பிரதான காரணம்.  ஒருசில எழுத்தாளர்களில் மட்டுமே சார்ந்திருக்க நேர்ந்தமையால் ஜோர்ஜிடம் ஏற்பட்ட தளர்வும் பிறிதொரு காரணம். அகளங்கனின் அன்றில் பறவைகள் நாடக நூலுக்கான அணிந்துரையில்,  சீரியஸ்' எழுத்தாளர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் எமது இலக்கிய ஜாம்பவான்களும் வானொலி நாடகங்களின் பக்கம் தலை  வைத்தும் படுப்பதில்லை.   வானொலி   நாடகங்களின்   ஆயுட் காலம் 30  அல்லது 45 நிமிடங்களே என்பதால்  அற்ப ஆயுசுகள் என்று ஒதுக்கி விடுகிறார்களோ   தெரியவில்லை,       என ஆதங்கப்படுவதில் இருந்து ஜோர்ஜின் விரக்தி மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

                          93 இன் நடுப்பகுதியில் சுகவீனம் காரணமாக ஜோர்ஜ்  திடீ  ரென ஓய்வு பெறவும்  S.  எழில்வேந்தன் வசம் இலங்கை   வானொலித் தமிழ் நாடகத் தயாரிப்பு ஒப்படைக்கப்பட்டது.   மாத   இறுதிச்   சனிக்கிழமைகளில் ஒலிபரப் பாகி வந்த 45 நிமிட நாடகங்கள் மூத்த அறிவிப்பாளர்களான அப்துல் ஹமீட்,  ராஜேஸ்வரி சண்முகம்   ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

                    தமிழிலக்கியப் பின்புலம் கொண்ட எழில்வேந்தன் 70 களின் பிற்பகுதியில்   'கிராம சஞ்சிகை' நடிகராகஇலங்கை வானொலியில் அறிமுகமாகித் தனது அதீத அக்கறையாலும் ஆர்வத்தாலும் செய்தித் துறை, விளையாட்டுத்துறை, நேர்முக வர்ணனை, சிறுவர் மலர் எனப் பல்வேறு துறைகளிலும் புகுந்து புறப்பட்டுத் தனது ஆற்றலை வெளிப் படுத்தியவர்.

              தமது நாடகத் தயாரிப்புக் காலத்தில் தாம் எதிநோக்கிய பல் வேறு  பிரச்சினைகளைப் பற்றி, 'சரிநிகர்' 11-24/07/1996 இதழில் [வானொலி, நாடகவிழா பற்றிய] ஒரு கட்டுரையில்  அவரே எழுதிய தகவல்களைப் பொருத்தம் கருதி இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

              வானொலி நாடகக் கலைஞர் தெரிவிற்குத் தோற்றி அதில் சித்தி யடைந்த கலைஞர்கள் மட்டுமே வானொலி நாடகத்தில் பங்கு பற்ற முடி யும் என்பதை அனைவரும் அறிவர். இந்த வானொலி நடிகர் தேர்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட கலைஞர் கள் அனைவரும் நிகழ்ச்சிகளில்   கலந்து கொள்ளும்போது சோபிப்ப தில்லை என்பது வேறு விஷயம். இது தவிர பல்வேறு காரணங்களுக் காக இவர்கள் நாடகங்களில் கலந்துகொள்ள வருவது கிடையாது. காரணங்களோ பல. சிலர் இறந்து விட்டனர். சிலர் புலம்பெயர்ந்து விட்டனர். சிலர் பட்டியலில் பெயர் இருந்தால் போதுமென்ற எண்ணம் கொண்டவர்கள். சிலர் தமது முகவரி மாற்றம் பற்றி அறிவிக்காதவர் கள். ஒரு சிலர் நடிகர் தேர்வில் சிறப்பாகச் செய்திருந்தும் ஒலிப்பதி விற்கு வரும்போது ஒழுங்காக நடிக்காதவர்கள். சிலர் திருமணமானதும் கணவர் அல்லது மனைவியின் வேண்டுகோளின் பேரில் நடிக்காதவர் கள்.[கணவனுக்கு அல்லது மனைவிக்குப் பயந்து வந்து நடித்துவிட்டுப் போகின்ற கலைஞர்களும் இருக்கிறார்கள்.]

                  காதலியாக நடித்ததற்கு அலுவலகத்தில், கூட வேலை செய்யும் நண்பிகள் கண்டித்தததற்காக நடிக்க வராதவர்களும் உள்ளனர். நாடக ஒலிப்பதிவிலிருந்து கிடைக்கும் சன்மானம் 100 /- ரூபாவிற்கும் மேலதிக மாக சன்மானம் கிடைக்கும் ஒரு நிகழ்ச்சி/ வேலை வந்து விட்டால் நாடக ஒலிப்பதிவிற்கு வராத கலைஞர்களும் உள்ளனர். நாடக ஒப்பந் தப் பத்திரம் தபாலில் வந்து சேரவில்லை என்று [சாட்டுக் கூறி] வராத கலைஞர்களும் உள்ளனர். வேறு வேலை காரணமாக வர முடியாவிட் டால் தபால் திணைக் களத்தைத்தைக் குறைகூறுபவர்களும் உள்ளனர். இது தவிர தனது சுகவீனம், குடும்ப அங்கத்தவர் சுகவீனம், திருமண வீடு, மரண வீடு, என்பவை காரணமாக வராத கலைஞர்களும் உள்ளனர். 

           இப்படி ஆயிரம் காரணங்கள். இதைத் தவிர வானொலி நாடகத் தயாரிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியத்தைப் பற்றியும் கூறவேண்டி யுள்ளது. அரை மணி நேர நாடகத் தயாரிப்பிற்கு மொத்தமாக 1050 /- ரூபா மட்டுமே எம்மால் செலவிட முடியும். நாடகப்பிரதி எழுத்தாள ருக்கு அதிகபட்சம் 450 /-ரூபா. கலைஞர் சன்மானம் ஆகக்கூடியது 6 கலைஞர்களுக்கு ஆளுக்கு 100 /- ரூபா வீதம் 600 /- ரூபா. மொத்தம் 1050 /- ரூபா. தற்செயலாக ஒரு நாடகத்தில் 8 பாத்திரங்கள் வந்து விட்டால் இரண்டு நடிகர்கள் இலவசமாக நடிக்க வேண்டும்.

    அடுத்து நாடக ஒலிப்பதிவுக்கான கால அவகாசம். அரை மணி நேர நாடக ஒலிப்பதிவிற்கு 2 மணித்தியால கலையக நேரமும் ஒத்திகை நேரமும் கிடைக்கிறது. இந்த 4 மணி நேரத்தினுள் நாடகப் பிரதி இரு தடவைகள் ஒத்திகை பார்க்கப்பட்டு ஒலிப்பதிவு நடைபெறும். உண்மையில் பல்வேறு காரணங்களால் இந்த 4 மணி நேரத்தையும் ஒழுங்காகப் பயன்படுத்த முடிவதில்லை. இவற்றுக்கும் பல காரணங் கள். ஒத்திகைக்கு கலைஞர்கள்   அனைவரும் ஒரே  நேரத்தில் வந்து சேர்வதில்லை. கலைஞர் ஒருவர் வருவாரா மாட்டாரா என்று தயாரிப்பாளர் நிலையத்தின் வாசலுக்கும் ஒத்திகைக் கூடத்துக்குமிடையில் ஒருவித அந்தரத்துடன் அலைவதை நீங்கள் நாடக ஒலிப்பதிவு நாட்க ளில் காணலாம். எப்படியும் இந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு மணி நேரம் உபயோகிக்கப்பட்டாலே பெருங்காரியம்.

             இழந்த ஒரு மணி நேரத்திற்காக ஒலிப்பதிவு நேரத்தில் கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொள்ளவேண்டியேற்படும். அவ்வாறான வேளை களில்  ஒலிப்பதிவு நேரம்  குறைந்துவிடும்.  மீண்டும்  அந்தரப்படுவது தயாரிப்பாளரே. இதைத் தவிர கலையக வசதிகள், இயந்திரக் கோளா றுகள் என்று வேறு சிக்கல்களும் வருவதுண்டு.

                 இத்தகைய பல்வேறு   சிக்கல்களின் மத்தியில் ஒரு நாடகம் தயாரிக்கப்படுவதை, அரை மணி நேரமோ முக்கால் மணி நேரமோ நாடகத்தை உட்கார்ந்து கேட்கும் ஒருவர் அறிந்திருக்க மாட்டார்தான். [ஆயினும்] ஒரு வானொலி  நாடகத் தயாரிப்பாளன் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் இவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.’ எனும் எழில்வேந்தனின் விளக்கம் அந்நாளையத் தமிழ்  வானொலி நாடக உலகின் கையறு நிலையைத் தெற்றெனப் புலப் படுத்தும்.

               ஏற்கெனவே குறிப்பிட்டது போல நல்ல எழுத்தாளர்கள் பலரும் ஓய்ந்து போன காலம்; சன்மானத் தொகையோ மிக அற்பமானது; நடிகர்களுக்கும் பெருந் தட்டுப்பாடு.   புலம்பெயர்வினால் பலரும் இடம் மாறி விட்டதால் சுறுசுறுப்பும் செயற்றிறனும் ஈடுபாடும் மிக்க எழிலுக் குச் சோதனையான காலம்.

                   ஆயினும் அராலியூரார், ஜெயலிலா, என்.உதயகுமார் ஆகி யோரை விட மட்டக்களப்பில் இருந்து செ.குணரெத்தினமும் இக் கால கட்டத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்திருந்தார் சிறிதுகாஇடைவெளியின் பின்அஷ்ரப் கானும் களத்தில் குதித்திருந்தார். அகளங்கன்,  செ. .நடராசா, பி.சிவபாலன் போன்றோரும் முண்டு கொடுக்க முதலுக்கு மோசமில்லாமல் எழிலால் ஒப்பேற்ற முடிந்தது. மூன்று 45 நிமிட நாடகங்கள் [அப்துல் ஹமீட்டினால் தயாரிக்கப்பட்டவை] உட்பட மொத்தமாக 10 நாடகங்களை எழுதி, தமிழ் வானொலி நாடக உலகில் G.P. வேதநாயகம் மீள் பிரவேசம் செய்ததும் இவரது காலத்திலே  யே.

                    96 இல் நடாத்தப்பட்ட மூன்றாவது வானொலி நாடகப் போட்டி யில் கே.கே.மதிவதனன், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, அராலியூர் .சுந்தரம் பிள்ளை ஆகியோர் முதன்மூன்று பரிசுகளைச் சுவீகரித்துக் கொண்டனர்.

                         21 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறுநீரக தானம் செய்ய முடியாதென்பது பொது விதி. ஆனால் சிறுவன் ஒருவன்  மற்றொரு சிறுவனுக்குத் தனது 'கிட்னி'யைத் தானஞ் செய்வதைக் கருவாகக் கொண்ட 'மனிதனும் தெய்வமாகலாம்' எனும் நாடகத்துக்கு முதற் பரிசு வழங்கிய நடுவர்களின் அறியாமை கேள்விக்குள்ளாக்கப் படாதது ஆச்சரியமே! நடுவர்கள் கூட நிலை தடுமாறலாம்; ஊரபிமானம் அவர் களது கண்களையும் கூடக் கட்டி விடலாம் - என்பதற்குச் சான்றாக அத் தீர்ப்பு அமைந்துவிட்டது.

                    நீண்ட காலமாக வானொலி உலகுக்குச் சேவையாற்றிய 'வரணியூரான்'எஸ்.எஸ்.கணேசபிள்ளை முதன்முறையாக  2 ஆம் பரிசும்   பாராட்டும்  பெற்றது இம்முறைதான். ஆனால் அப் பாராட்டையோ பரிசையோ பெற அவர் கொடுத்து வைக்கவில்லை. காலன் அவரைக் காவு கொண்டு விட்டான். 'குருவிக்கூடு' அவர் எழுதிய கடைசி நாடகம்.

                பரிசு பெறாத போதிலும் பளையூர் சுந்தரம்பிள்ளை எழுதிய 'துறவு' என்ற நாடகமும் அமுதன் என்ற புனைபெயரில் G.P. வேத நாயகம் எழுதிய 'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்ற நாடகமும் நேயர்களின் பாராட்டுகளைப் பெற்றன. எழில் பணிபுரிந்த காலத்தை 'மறு ஒலிபரப் புக் காலம்' என்றும் சொல்லலாம். அந்தளவுக்குப் பிரதித் தட்டுப்பாடு போலும். ஆயினும் 1996 ஆம் ஆண்டின்  சிறந்த வானொலி நாடகத்  தயாரிப்பாளருக்கான உண்டா விருது அவருக்கு வழங்கப் பட்டது ஆறுதலான ஒரு விடயம்தான்.

                   96 இல் எழில்வேந்தன்   சக்தியுடன்    சங்கமிக்க இலங்கை வானொலி நாடகப் பொறுப்பு ராஜபுத்திரன் யோகராஜன் வசமானது. ஒரு தொழில் நுட்ப உதவியாளனாக,   வானொலி  நடிகனாகச்  சில ஆண்டுகள் பெற்ற  அனுபவத் தினால்  அதன்   நெளிவுசுழிவுகளைத் தெரிந்து வைத்திருந்த ஆர்.யோகராஜன் பழகுவதற்கு இனியவராக நடி கர்களை அனுசரித்து அரவணைத்து வேலை வாங்குவதில் சமர்த்தராக விளங்கினார். அவரது Knack கான நாசூக்கான அணுகு  முறையானது நாடக அரங்கைத் தளம்பல் இல்லாமல்  கொண்டு நடாத்த உறு துணை புரிந்தது. 96 முதல் 2001 இன் இறுதிவரையான காலப் பரப்பில் அவரது தயாரிப்பில் சுமார் 160 – 30 நிமிட /45 நிமிட நாடகங்கள் மட்டில் தயா ரிக்கப்பட்டன

                       இவற்றுள் 33 நாடகங்களை அராலியூராரும் 13 நாடகங்களை செ.குணரெத்தினமும்  12  நாடகங்களை   G.P. வேதநாயகமும்,    ஐவைந்து நாடகங்களை அஷ்ரப்கானும் அருணா செல்லத்துரையும் K.T.சிவகுரு நாதனும் எழுதியிருந்தார்கள்.    இ.முருகையன்,   பா.சத்தியசீலன், அகளங் கன்,    தா.பி.சுப்ரமணியம், சித்தி அமரசிங்கம், செவ்வந்தி மகாலிங்கம், செ.நடராசா   போன்ற  மூத்த எழுத் தாளர்களும்  பேராதனை A.A. ஜுனை தீன்சோ.ராமேஸ்வரன், பா.சிவபாலன், S.அம்பலவாணர், பளையூர்  சுந்தரம் பிள்ளை  போன்ற   இளையவர்களும்  R.யோகராஜனின்    தயாரிப்பில் கணிசமான பங்களிப்புச் செய்தனர்.

                      சித்ராஞ்சனி தாமோதரம்பிள்ளை  சித்ராஞ்சனி   தேவதாசன் ஆகி மீண்டும் நாடக எழுத்தில் கால் பதித்தார். அவருட்பட R.யோகராஜ னின்  தயாரிப்பில் வானொலி நாடகங்களுக்குப் புது ரத்தம் பாய்ச்சப் புறப்பட்ட புதியவர்களான ஆனந்தராணி நாகேந்திரன் M.மாசிலாமணி, S.S.வேத வனம், S.P.டக்ளஸ், R.T.டக்ளஸ் எனும் ஒவ்வொரு வரும் தலா ஏழுக்கும் குறையாத நாடகங்களை எழுதி வளம் சேர்த்தனர். வானொலி நடிகர்களாகவும் இருந்து நாடகமும் எழுதிய, K.ஞானசேகரம், S. செல்வசேகரம், 'சோக்கல்லோ' சண்முகநாதன், M.ரவீந்திரன் போன்ற உள்வீட்டுப் பிள்ளைகளின் பங்களிப்பு குறிப் பிடும் படியாக இல்லை!.

                ஜோர்ஜின் காலத்தில் எழுதிய  விஜயராணி செல்லத்துரையும் ஆனந்தக்கிளி தேவகுமாரும் மீண்டும் இக்காலத்தில் வானொலி நாடக உலகில் பிரவேசித்தனர்.    யோகேஸ்வரி   சிவப்பிரகாசம், ராசநாயகம் ராகுலநாயகி,  S. இளையதம்பி, S. சிவகுருநாதன்,  S.சண்முக வடிவேல், தும்பளையூர் பி.வேதநாயகம், S.சிவராஜா,  உசனார் சலீம்   எனப் புதிதாக   எழுதப்   புறப்பட்ட சிலர் ஓரிரு     பிரதிகளுடன்   திருப்திப்பட்டு வானொலிக்கு எழுதுவதை  நிறுத்திக் கொண்டுவிட்டார்கள்.

                    2000 ஆம் ஆண்டின் பின் -அற்புதராணி காசிலிங்கம், எம்.இந்திராணி,  திருமலை மலர்ராஜன், கே.சிவகடாட்சம்பிள்ளை, R.ராஜபாண்டியன்,பாரதிகென்னடிஎஸ்.தியாகராஜா,செல்லையா   குமார சாமி,V.ரவீந்திரமூர்த்தி எஸ்.திருவாகரன், கே.ஸ்ரீஸ்கந்தராஜா,   ஷிபார்டீன் மரிக்கார் எனப் புதிதாக நாடகம் எழுதப் புறப்பட்டவர்கள் பலர். நிலைத்து நின்று    தமிழ் வானொலி   நாடகங்களின்   தரத்தை   எத்தனை பேர் உயர்த்து வார்கள் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும். அற்புதராணி காசிலிங்கம் ழுதிய 'கனவுகள் நனவாகும்' நாடகம் 43 அங்கத தொடராக இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளது.

                    94 இல் G.P.வேதநாயகம் எழுதி   அப்துல் ஹமீட்     தயாரித்த  45 நிமிட நாடகங்களான    'நீயில்லாமல் நானில்லை!',       வேஷங்கள் மாறலாம்', 'மீண்டும் ஒரு வசந்தம்' முதலியனவும்   எழில்வேந்தன்     தயாரிப்பி ல் G.P. வேதநாயகத்தின் எழுத்தில்  உருவான ' சட்டத்தின் வட்டத்துள்', 'பிழை திருத்தம்' என்பனவும் 95 இல் 'காதலிக்கக் காலமுண்டு',  'கல்யா ணக் காலம் வரும் வரை', 'ஏதோ ஒரு மயக்கம்' என்பனவும்   96 இல் 'ஒரு பனிப் போர் முடிவடைகிறது', 'பூக்களைப் பறிக்காதீர்கள்'   ஆகியனவும் குறிப்பிடத்தக்க நாடகங்கள்.

                     96,  97 இல் அகளங்கனின்    'கங்கையின் மைந்தன்',   'கூவாத குயில்கள்', S.S. கணேசபிள்ளையின்'குருவிக் கூடு' செ.குணரத்தினத்தின் 'கண்ணீரும்  சோறும்', தா.பி.சுப்ரமணியத்தின் 'தனக்குத் தனக்கென்றால்', சித்தி அமரசிங்கத்தின்  'இராவண தரிசனம்' அருணா செல்லத்துரையின் 'நந்தி உடையார்', G,P.வேதநாயகத்தின்   'விருப்பமில்லாத் திருப்பங்கள்'  , 'தாம் தூம் தை தை செ.நடராசாவின் 'பாரி மகளிர்' என்பன நினைவுகூரப்பட வேண்டி யன.

                            98 இல் அகளங்கனின்  'வாலி' .முருகையனின் 'வந்தனவா அவை?', 99 இல் G.P.வேதநாயகத்தின் 'சனிப் பெயர்ச்சி' 2000 இல் செ.குணரெத்தினத்தின் 'பாதுகையே துணை', அராலியூராரின் 'தனிக் குடித்தனம்' பா.சிவபாலனின் 'நாளை நல்ல நாள்'  2001 இல்  G.P.வேதநாய கத்தின்   'பெண்ணியம்',   பளையூர் சுந்தரம் பிள்ளையின் 'அவதந்திரம்', எஸ்.சிவராஜாவின் 'கருகத் திருவுளமோ?' என்பன தரமான நாடகங்களாக நாடக அபிமானிகளால் கொள்ளப்பட்டன.

                      .முருகையன்,   நீலாவணன்,    .இரத்தினம், சில்லையூர் செல்வராசன், பா. சத்தியசீலன்    போன்றோரின் தரமான பா நாடகங் கள் அவ்வப்போது   ஒலிபரப்பாகியுள்ளன.   பா நாடகத்தைப் போலவே தாளலய நாடகமும் கவித்துவதுடன் இயைந்த ஒரு புதிய நாடக வடிவம். போர்த்துக்கேயரின் வழியாக சிங்களத்தில் ஊடுருவிப் பின்னர் தமிழி லும் 60  70  களில் மவுசு   பெற்ற 'பைலா'ப்  பாடல்கள் போல சிங்களவர் மத்தியில் பிரபலமாயிருந்த   தாளலய நாடக வடிவத்தைத் தமிழிலும்  தான்    தயாரிப் பாளராக இருந்த காலத்தில்   பரீட்சார்த்தமாக ஜோர்ஜ் முயன்று பார்த்துள் ளார்.தானான்னா தனனானா தன்னன்னா தான னனா' என்பது போல ஒரே லயத்தில் அமைந்த தாளக்கட்டில் தொடர்ச்சி யாக எழுதப்படும் உரையாடலை எழுதவும் சரி நடிக்கவும் சரி கொஞ் சம் இசை ஞானம் தேவை.

                       நான் எழுதிய 'கண்டறியாக் கலியாணம்' எனும் தாளலய நாட கத்தை 1982 இல்  15 நிமிட நாடகமாக    ஜோர்ஜ் சந்திரசேகரன் தயாரித்து ஒலிபரப்பினார்.  பைபிளில் யேசுநாதரால் கூறப்பட்ட ' 'ஊதாரிப் பிள்ளை' உவமைக் கதையை 'மனம் திருந்திய மகன்' எனும் தலைப்பில் நான்  தாளலய நாடகமாக எழுத  1998 இல் அது    S. கணேஸ்வரனால் தயாரிக்கப்பட்டுக் கல்விச் சேவையில் ஒலிபரப்பப்பட்டது. வேறும் சிலரது தாளலய நாடகங்கள் ஒலி பரப்பப்பட்டுள்ளதாக நடிக நண்பர் போல் அன்ரனி கூறி அறிந்து கொண்டேன். சிங்கள  நாடகங்களைத் தமிழில் பெயர்த்து ஒலிபரப்புச் செய்யும் முயற்சி களும்  அவ்வப்போது நடைபெற்றதுண்டு. 70, 80 களில் முன்னணி வானொலி நடிகராக வலம் வந்த கோபால் சங்கரும் அக்காலகட்டத்தில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.