Wednesday, 15 February 2017

டன்ஸ்ரன் குணசீலனின் ஐம்பதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது மறைமுதல்வனால்  வாசிக்கப்பட்ட  கவிதை.

பொன்விழாப் பாமாலை

அன்னை சொல் தட்டாத அருமை பாலன்
ஆகமத்தின் வழி ஏகும் ஏசுதாசன்
ஆதரவுக்கரம் நீட்டும் தர்மசீலன்
உழைப்பினால் உயர்வு கண்ட கர்மவீரன்
அத்தனைக்கும் ஒரு பெயர்தான்
அதுதான்  எங்கள்  குணசீலன்!

குணமென்னும் குன்றேறி நிற்கு முன்பே
குணசீலன் எனப் பெயர் பெற்ற மைந்தன்
மணம் வீசும் மலர் போலாங்கே
அன்போடு  அறிவும்சேர் காந்தரூபன்
பொன்விழாக் காணுமின் நன்னாள் தன்னில்
கன்னல் தமிழ் மொழியில் பா தொடுத்தே
அவன் பெருமையினைப் பகிர்ந்து சொல்ல
ஏடெடுத்தேன்
இனிமேலும் நீ சொல்லப்
புதிதாக எதுவுண்டு?
என் உள்மனக் குரலொன்று
உறுக்கியே கேட் கிறது

ஒன்றுமில்லை என்று சொல்லிப்
புறம் தள்ளிப் போவதற்கு
வாழ்க்கை ஒன்றும் எழுதாத
வெற்றுக் கடதாசியல்ல
வரலாற்றுப் பாடமது;
வற்றாத ஊற்று மது

வரைந்து விட்ட கோடுகளும்
வளைந்து விட் ட கோலமதும்
வடுக்களாய் வழுக்களாய்
பதிந்துவிட்ட  புள்ளிக் கறைகளும்
பாடங்களாய் படிப்பினையாய்
அமைந்துவிட்ட பதிவுகளும்
எத்தனை எத்தனையோ
பக்கங்களாய்ப் பரந்திருக்கும்
அத்தனையும் புரட்டி நீ
பார்க்கப் பார்க்க
சித்திரமாய் விரியுமொரு
சரித்திரம் பார்!

முட்டுப்படாமல் முன்னேறி முடித்தவர்
இப்புவியில் எவருமில்லை
தட்டுப்படாமல் சிகரம் தொட்டுவிட
தனி மார்க்கம் ஏதுமில்லை
குட்டுப்படாமல் குன்றென நிமிர்ந்துவிட
குறுக்குவழி கண்டாரில்லை
ஆட்டத்தில் பாதி அடித்து முடித்தவர்க்கு
அனுபவம் தானாக வீழாது வழிகாட்டும்

அகவை ஐம்பதில் நீ அரை ஞானி
அனுபவச்சுவை கண்ட ஒரு தேனீ
பக்குவத்தால் பழுத்த துன் மேனி
பழுத்தது காய்பிஞ்சாய் ஆமோ இனி?

ஐம்பதைத் தொட்டுவிடடால்
அதற்கு ஓர் அர்த்தமுண்டு
அப்பாடி இனிக் கொஞ்சம்
அயரலாம்’ என்று மனம்
ஆறுதற் படத் தொடங்கும்
ஆயாச இடைவேளை

பண்ணிய பாவ புண்ணிய
கணக்குகளைச்
சரிபிழை பார்த்துப் பின்
செல்லும் வழி வகுக்கச்
சொல்லப்ப ட்ட தருணமிது

ஆடிய ஆட்டமதில்
தேடியதும் தொலைத்ததுவும்
கூடியதும் பிரிந்ததுவும்
கற்றதுவும் பெற்றதுவும்
அத்தனையும் கணக்கெடுத்துக்
கூட்டிக் கழித்தறிய
கனிந்து வந்த காலமிது

விளானில் பிறந்ததனால்
விழ மாட்டான் அவனென்றும்
உளான் அவன் அறிந்தவர்தம்
உளமதில் வான் உள்ளளவும்

இள வாலைப் பதி கண்ட
திரு என்றிக் கல்லூரி
முன்றில் அவனும் இளங்
கன்று போல் துள்ளியாடிக்
களித்த நாள் பலவுண்டு
அன்றை நாள் நினைவுகளில்
இன்றும் மனம் தோய்ந்து அவன்
நின்றுமே நனைவதுண்டு

கால நிர்பந்தத்தால்
கால் பந்தாய் நிலைமாறி
உதைபட்டு மிதிபட்டு
ஊர்விட்டு உலைப்பட்டு
இலண்டன் மா நகரத்து
நெடுஞ்சாலை விதிகளில்
திண்டாடித் தடுமாறித்
தன்காலில் நிற்க அவன்
பட்ட பிரயத்தனங்கள்
பட்டியலில் மிக நீளும்

பீமனொன்றில்லாத 
பாண்டவர் அணியதனில்
அன்பெனும் அம்புகளைப் பெய்த
பார்த்தன் நீ
சாரத்தியமும் உன் கையில்
சாமர்த்தியம் உன்னகத்தில்

தம்பியரும் உள்ளாரென்றே
தருக்குமே மிகவும் கொண்டு
தலைகனத் தாடி நின்று
தானாகத் தர்க்க வாதம்
தேடியே  வம்பு தும்பை
வாங்கினாய் இல்லை நீயும்

நல்லநாள் பெருநாள் தன்னில்
நால்வரும் சேர்ந்தோரிடத்தில்  
கூடினால் நின்றுவிடும்-
நாள்கோள்கள் ஓடாது!
ஊணுறக்கம் மறந்துவிடும்
உள்ளத்தோ துறவாடி
உள்ளதெல்லாம் உரையாடி
நீண்டநாள் நண்பர்கள் போல்
நீட்டி முழங்கியவர்
பாட்டில் கதை பேசிக்
களித்தாடக் கண்டவர்முன்
கண்கொள்ளாக் காட்சியது


 வாழ்க்கைத் தேரோட்டத்தில்
வாகாய் வடம் பிடிப்பவன் நீ
நண்பர்கள்தம்  வட்டத்தில்
நல்வாக்குச் சொல்பவன் நீ
செல்வாக்குத் தான் உனக்கு
செல்லுகின்ற இடமெல்லாம்

உண்மையும் நேர்மையுமே
உள்ளபடி உயர்வு தரும்
எனக் கற்றபடி ஒழுகிடுவோர்
எத்தனை பேர் உந்தனைப் போல்?

கள்ளம் கரவு இலா
வெள்ளை மனம் தான் உனக்கு
வெள்ளத்தனைய மலர் நீட்டம் என
உனதுள்ளத் துயர்வுதனை
உய்த்துணர்ந்து உவமித்தானோ
வள்ளுவனும் வெள்ளனவே!

காதலிக்க ஒரு மனைவி -இரு
கண்மணி போல் பிள்ளைகளும்
நாமிருவர்;நமக்கிருவர்
நம்பிக்கையின் கனிகளவர்  எனும்
கருத்தொருமிப் போடுருவான
நல்லதொரு குடும்பம்
கொடுப்பினைதான்;குற்றமில்லை
கண் ஊறு பட்டிடாது
கர்த்தா உண்டு காப்பாற்ற

மூத்தவளைத் திங்களுக் குவமித்தால்
இளையவனோ கதிரவனுக்கிணையாவான்
சிந்தனையில் சிறகடிக்கும் படடாம்பூச்சி
கற்பனையில் பவனி வரும் சித்திரத் தேர்
இருமைக்கும் ஏழ்பிறப்புக்கும்
பெருமை சேர் பாவை அவள் பேர் சுவேதா  

தன் துடுக்கான சொல்பேச்சால்
துடிப்பான செயல் வீச்சால்
அசர வைப்பாள் [சிலவேளை] அயர வைப்பாள்
அவள் மிடுக்கான வாழ்வுக்காய்
அடுக்காகப் பல திட்டம் உன் மனதில்
அத்தனையும் ஈடேறும்  அட்டியின்றி
திட்டமாய் உன்முயற்சி திருவினையாக்கும்

இத்தரையில் உன் கனவு
சித்திக்கத் தான் பிறந்த சீராளன்
நித்திலம் போலாவான் நித்திக்கும்
நின்று நிலை நாட்டுவான் உன்பேரை
வென்றுமே  காட்டுவான்
பொன்றாப் புகழதனை 



நல்விதையை நீ விதைத்தாய்
நற்பலன் உன் அறுவடையாம்
முன்வினையின் பயனாலென்
மருகனாய் வரப்பெறறேனோ!

எம்மான்றோர் அமைத்ததொரு
நெறிமுறைகள் பிசகாது
நல்லவனாய் வல்லவனாய்
நேர்வழியே நீ நடந்து
வாழுகின்ற வழி ஈதென்றே
வரையறைசெய் இலக்கணமாய்
பலநூறு ஆண்டுகள் நீ
பலமோடும் நலமோடும்
திடமோடும் நற்திறனோடும்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
உளமார உரமாக
உயிர்ப்போடு வாழ்த்துகிறேன்.